Type Here to Get Search Results !

கோதுமை - விலகாத சில மர்மங்கள்நம்மில் பலரும் கோதுமைப் பயிரையே பார்த்ததில்லை எனும்போது கோதுமை வயலை எங்கே போய்ப் பார்க்க? ஆனால், உலக மக்களின் உணவு நுகர்வில் அரிசிக்கு அடுத்த இடத்தில் இருப்பது கோதுமைதான்.


மைதா எனும் பயங்கரம்


பலருக்கு மைதா என்பது தவிடு நீக்கிய கோதுமைதான் என்பது தெரியாது. தவிடு நீக்கிய கோதுமையின் இயல்பான நிறம் அரிசியளவுக்குக்கூட வெள்ளையாக இருக்காது. சரி, நீக்கப்பட்ட கோதுமைத் தவிட்டை என்ன செய்வார்கள்? அதுதான் பண்ணை மாடுகளுக்கு முதன்மைத் தீவனம்.

நிறம் மங்கிய கோதுமையைத் தும்பை பூ நிறத்திலான வெள்ளை மைதாவாக மாற்றப் பிளீச்சிங் ரசாயன ஏஜென்ட் பயன்படுத்தப்படுகிறது. அப்புறம் அது ரயில், லாரி, குட்டியானை, மீன்பாடி வண்டி, வெயில், குளிர், அடுப்பு அனல் போன்ற சகல ஜாலச் சூழலிலும், இன்னுமொரு தலைமுறை வரைக்கும் கெட்டு விடாமல் இருக்க ஒரு வேதி கலவை, அப்புறம் அதில் தயாராகும் பரோட்டா, பஞ்சுபோல மெத்தென்று அலையாக உப்பி எழ ஒரு வேதிப்பொருள் என அனைத்தையும் கலந்து கட்டித்தான் மைதாவாக நம் கையில் சேர்க்கிறார்கள்.

இதில் சேர்மானமாகும் ரசாயனங்களையும் அவற்றின் விளைவுகளையும் இங்கே பட்டியலிட்டால் பயத்தில் பீதியடைந்து காடு தேடி ஓட வேண்டியதுதான். கோதுமை என்றதும் கோதுமை வயல், கோதுமை தாள், அதன் கதிர், மணி இப்படி அதன் பூர்வேந்திரம் அனைத்தும் நம்முடைய எண்ணத் திரையில் படபடவெனக் காட்சிகளாக ஓடி முடிய வேண்டும். அதுதான் நல்ல வாழ்க்கை வாழ்வதன் லட்சணம் என்று நம்ப வைக்கப்படுகிறோம்.

பாக்கெட் கோதுமை லட்சணம்

நன்கு விளைந்த கோதுமை மணியை நீரில் நனைத்து, வடித்துப் பரப்பினால் உயிர் பெற்றுத் துள்ளி விடுவது போன்று அத்தனை ஜீவ அழகுடன் ஜொலிக்கும். ஒரு பெண்ணின் சரும அழகின் உச்சத்தை உணர்த்தக் கோதுமை நிறம் என்பார்கள். அது புனைவு அல்ல. கலப்பில்லாத நிஜம்.

நமக்குத் தெரிந்ததெல்லாம் கோதுமை என்றால் சப்பாத்தி, சப்பாத்தி சப்பாத்தி மட்டுமேதான். கோதுமை மாவையாவது நாம் கண்ணெடுத்துப் பார்த்திருப்போமா என்றால், அதுவும் கூடச் சந்தேகமே. கோதுமை மாவு, இன்றைக்குத் தொண்ணூறு சதவீதம் வீடுகளில் அரைக்கப்படுவதில்லை.

இளஞ் செந்நிறக் கோதுமைக் கதிர் போட்ட பாக்கெட்டுகளில் இருந்து தும்மல் தலைக்கேற மாவைக் கொட்டுகிறார்கள் நம் அன்னையர். இந்த மாவுக்குரிய கோதுமையை மூன்று முறை அலசி, மனிதக் கை படாமல் பேக் செய்வதாக அதைத் தயாரிக்கும் நிறுவனங்கள் விளம்பரம் செய்கின்றன. மனிதக் கை அனைத்தையும் தீண்டத்தகாததென ஆக்குகிறது இயந்திரமய உற்பத்தி முறை. பாக்கெட் கோதுமை மாவு, சுத்தத் தன்மையை முன்னிறுத்துவதற்குக் காரணம், அதில் மறைபொருளாக இருக்கிற ஆபத்தான வேதிக்கூறுகளை மறைக்கத்தான்.

உணவகச் சப்பாத்தியின் இழுவை


உணவகங்களில் சாப்பிடப் போனால் தயாரிப்பு முறை குறித்துச் சொல்லி மாளாது. நாம் இரவு ஒன்பது மணிக்கு ஒரு சப்பாத்தி ஆர்டர் கொடுப்போம். பரிசாரகர் நம்மைக் கடந்து கடந்து காணாமல் போய்க்கொண்டே இருப்பார். பொறுமை இழந்து தொண்டையைச் சரியாக ட்யூன் செய்து ’சப்பாத்தி சொன்னேனே’ என்று கேட்போம். ‘யாம் உமக்கு அருளினோம்’ என்ற பாவனையில் ‘சொல்லியிருக்கேன் சார். போட்டுட்டு இருக்காங்க’ என்பார்.

பரிசாரகர் சொன்ன ‘போட்டுட்டு இருக்காங்க’ என்பது மறு சூடேற்றுதல். உண்மையில் `கல்லில்’தோசைகளுக்கு மாத்திரமே ஏக போக உரிமை. அங்கே சப்பாத்தி இரண்டாம் தரக் குடிகளாகவே கருதப்படும். ‘தோசைக்குக் காயும் சூட்டில் சப்பாத்திக்கு ஆங்கே சுடுமாம்’ என்று ஆறு மணிக்கே போட்டு அரை வேக்காட்டில் எடுத்து அடுக்கி வைத்திருப்பார்கள். நாம் கேட்கிறபோது ஃபிரஷ்ஷாக மறு சூடு ஏற்றுவார்கள்.

அந்தச் சப்பாத்தியும் நம் பல்லுக்கோ, தாடைக்கோ நோகாமல் அரைபட வேண்டுமென்ற மிருதுத்தன்மைக்காக பல்லில் பிசு பிசு என்று ஒட்டிக்கொள்ளும் ‘டால்டா’ போட்டு மாவைப் பிசைந்திருப்பார்கள். சரி, டால்டாவாவது தாவரக் கொழுப்புதானா என்று கேட்டால், அதை வெளித் தள்ள அரும் பாடுபடும் நம் உள்ளுறுப்புகளும் செரிக்கத் திணறும் செரிமான மண்டலமும்தான் பதில் சொல்ல வேண்டும்.

நீரிழிவுக்கு நல்லதா?

ஒரு சப்பாத்திக்கு இத்தனை பாடா? நீரிழிவு நோய்க்கு இதுதான் பாதுகாப்பான உணவு என்று நம்பிச் சப்பாத்தியை வாங்கி எண்ணெய் தெறிக்கும் குருமாவில் தொட்டுச் சாப்பிட்டுவிட்டு, அதைவிட முக்கியமாக மாத்திரைகளைப் போட்டுக்கொண்டு உயிரைப் பிடித்துக்கொண்டிருக்கிறது மூத்த தலைமுறை.

வேறு என்னதான் செய்வது? எண்ணெயில்லாத ஃபுல்கா சப்பாத்தி கேட்டால், அதற்குத் தொடுகறி தனி `பில்’ போடுவார்கள். அந்தப் பில்லைப் பார்த்தால் நீரிழிவு போதாதென்று, மாரடைப்பே வந்துவிடும். தென்னகத்தில் கோதுமைப் புழக்கத்துக்கு வந்து அரை நூற்றாண்டு ஆகிறது. இன்றுவரை கோதுமையில் உடல் நலத்துக்கும் வாய் சுவைக்கும் ஏற்ற உணவை நம்மால் தயாரிக்க முடிகிறதா?

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad