இந்தியாவின் வளர்ச்சிக்கு சாதி பெரும் தடைக்கல்லாக உள்ளது: தலாய் லாமா கருத்து






பெங்களூரு: சாதி அமைப்பை ஒழிக்காமல் இந்தியா முழுமையாக முன்னேற முடியாது. இந்தியாவின் வளர்ச்சிக்கு சாதி பெரும் தடையாக  இருக்கிறது என நோபல் பரிசு பெற்ற திபெத் பவுத்த மதத் தலைவர் தலாய் லாமா தெரிவித்துள்ளார். கர்நாடக அரசின் சார்பில் பெங்களூருவில் நேற்று ‘புரட்சியாளர் அம்பேத்கரும், சமூக நீதியும்’என்ற சர்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது. கர்நாடக முதல்வர் சித்தராமையா தொடங்கிவைத்த இந்த கருத்தரங்கில் உலக அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற திபெத் பவுத்த மதத் தலைவர் தலாய் லாமா, காங்கிரஸ் மக்களவைத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சமூக நலத்துறை அமைச்சர் ஆஞ்சநேயா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதனிடையே கருத்தரங்கில் பேசிய தலாய் லாமா: புத்தர் போதித்த அன்பு, அறிவு, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றையே புரட்சியாளர் அம்பேத்கர் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் எழுதினார். உலகமே வியக்கும் வகையில் சட்டம் இயற்றிய அம்பேத்கர், புத்தரும் அவரது தம்மமும் என்ற நூலை எழுதி சமூக நீதியை பறைசாற்றினார். சாதி, மதம், மொழி, இனம் என எல்லாவித பேதம் கடந்த மானுடத்தை நிறுவ அம்பேத்கர் விரும்பினார். புத்தர், அம்பேத்கர் போன்ற பெரும் தலைவர்கள் தோன்றிய இந்திய மண்ணில் சாதி கொடுமை நிலவுவது அவமானகரமானது. சாதியின் பெயரால் ஒருவருக்கொருவர் பாகுபாடு பார்ப்பது துயரமானது. சாதி பாகுபாட்டின் காரணமாக எழும் சச்சரவுகள், வேற்றுமைகள், கெட்ட எண்ணங்கள் தனி மனிதர்களை மட்டுமல்லாமல் சமூகத்தை சீரழித்துவிடும்.

சாதி அமைப்பை ஒழிக்காமல் சமூகம் முன்னேற முடியாது. மக்களிடையே கெட்ட எண்ணங்களை வளர்த்தெடுக்கும் சாதியை அழிக்காமல் இந்தியா முழுமையாக முன்னேற முடியாது. உலக அளவில் வேகமாக வளரும் இந்தியாவின் வளர்ச்சிக்கு சாதி, பெரும் தடைக்கல்லாக இருக்கிறது. தலித் மக்கள் அனைவரும் அம்பேத்கரைப் போல சிறந்த முறையில் கல்வி கற்க வேண்டும். திடமான‌ தன்னம்பிக்கையை வளர்த்தெடுத்து, விடாமுயற்சியுடன் சாதியை எதிர்த்து போராட‌ வேண்டும். அடிமட்ட நிலையில் தவிக்கும் தலித் மக்கள் மேலெழுந்தால் மட்டுமே ஒட்டுமொத்த நாடும் வளர்ச்சி அடையும். இவ்வாறு அவர் பேசினார்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url