மேலும் 10 எம்எல்ஏக்கள் போர்க்கொடி : கோட்டையில் 2வது நாளாக பரபரப்பு எடப்பாடிக்கு தொடரும் சிக்கல்




சென்னை : முன்னாள் அமைச்சர்கள் தோப்பு வெங்கடாச்சலம், செந்தில் பாலாஜி, பழனியப்பன் உள்ளிட்ட 8 எம்எல்ஏக்கள் நேற்று முன்தினம் தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடியை சந்தித்து, எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டும்படி போர்க்கொடி தூக்கிய நிலையில், நேற்றும் 10க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் முதல்வரை சந்தித்து, கூவத்தூரில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இது தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் எடப்பாடி தலைமையிலான அரசுக்கு சபாநாயகரைத் தவிர 122 எம்எல்ஏக்கள் ஆதரவு கொடுத்து வருகின்றனர். மீதமுள்ள 12 அதிமுக எம்எல்ஏக்கள் ஓபிஎஸ் அணியில் உள்ளனர். தற்போதுள்ள சூழ்நிலையில், எடப்பாடி அரசுக்கு ஆதரவு அளித்து வரும் 5 எம்எல்ஏக்கள் தங்கள் ஆதரவை வாபஸ் பெற்றால் ஆட்சி கவிழும் ஆபத்து உள்ளது. ஆட்சி கவிழாமல் இருப்பதற்காக முதல்வர் எடப்பாடி மற்றும் அமைச்சர்கள், தங்கள் அணிக்கு ஆதரவு தெரிவித்து வரும் எம்எல்ஏக்களை அவ்வப்போது அழைத்து பேசி சமாதானம் செய்து வருகிறார்கள். 

எடப்பாடி அணிக்கு ஆதரவு தெரிவிக்க கூவத்தூர் ரிசாட்டில் 10 நாட்கள் எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். அப்போது, அவர்கள் ஓபிஎஸ் அணிக்கு தாவாமல் இருக்க பல்வேறு வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டது. இந்த வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றி தரப்படாததால் எம்எல்ஏக்கள் அனைவரும் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் முன்னாள் அமைச்சர்களும் தற்போது எம்எல்ஏக்களாக உள்ள தோப்பு வெங்கடாச்சலம் (பெருந்துறை தொகுதி), செந்தில்பாலாஜி (அரவக்குறிச்சி), பழனியப்பன் (பாப்பிரெட்டிப்பட்டி) மற்றும் தூசி மோகன் (செய்யாறு), முருகன் (அரூர்), பாலசுப்பிரமணி (ஆம்பூர்),  சிவசுப்பிரமணியன் (மொடக்குறிச்சி), கென்னடி (மானாமதுரை) ஆகிய 8 எம்எல்ஏக்கள் முதல்வர் எடப்பாடியை தலைமை செயலகத்தில் சந்தித்து பேசினர். அப்போது, கூவத்தூரில் முன்னாள் அமைச்சர்களுக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதன்படி, தங்களுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும். எம்எல்ஏக்களின் கோரிக்கைகள் ஒன்று கூட நிறைவேற்றப்படவில்லை. கட்சியில் கடந்த ஓராண்டாக எந்தப் பணிகளும் நடைபெறவில்லை. இதுபற்றி விவாதிக்க உடனடியாக எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதையடுத்து, நேற்றும் 20க்கும் மேற்பட்ட அதிமுக (அம்மா) அணியை சேர்ந்த எம்எல்ஏக்கள் தலைமை செயலகத்துக்கு அணி அணியாக வந்தனர். அதன்படி தென்னரசு (ஈரோடு கிழக்கு), சந்திரசேகர் (மணப்பாறை), உமாமகேஸ்வரி (விளாத்திகுளம்), குணசேகரன் (திருப்பூர்), இன்பதுரை (ராதாபுரம்), பரமேஸ்வரி (மனச்சநல்லூர்), கதிர்காமு (பெரியகுளம்), கே.வி.ராமலிங்கம் (பெருந்துறை), சத்யா (தி.நகர்), வெற்றிவேல் (பெரம்பூர்) உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் முதல்வர் எடப்பாடியை தலைமை செயலகத்தில் சந்தித்தனர். இவர்கள் அனைவரும் எடப்பாடி அரசுக்கு ஆதரவு தெரிவிக்கும் எம்எல்ஏக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் அனைவருமே சசிகலா அணியைச் சேர்ந்தவர்கள். முதல்வர் எடப்பாடியை நேரடியாக சந்திக்காமல், எம்எல்ஏக்கள் அணி அணியாக தங்கள் மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர்களை சென்று பார்த்து, நீண்ட நேரம் தனியாக ஆலோசனை நடத்தினர். பின்னர் அமைச்சரை அழைத்துக் கொண்டு முதல்வரை சந்தித்தனர். முதல்வரை சந்தித்து விட்டு வெளியே வந்த எம்எல்ஏக்களிடம் கேட்டபோது, தொகுதி பிரச்னைகள் குறித்து பேசினோம் என்று மட்டும் கூறினர்.  

ராதாபுரம் தொகுதி எம்எல்ஏ இன்பதுரை கூறும்போது, ‘‘திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாமிபரணி - கருமேணி - நம்பியாறு இணைப்பு திட்டத்தை விரைவுப்படுத்த கோரிக்கை வைத்துள்ளேன். இந்த திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்தும்போது தற்போதுள்ள அரசு விலையில் இருந்து 6 மடங்கு கூடுதலாக வழங்க வேண்டும். அதேபோன்று பெருமணல், கூட்டப்புலி, கூடுதழை பகுதியில் மணல் அரிப்பை தடுக்க தூண்டில்வலை திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தேன்’’ என்றார். ஆனாலும், இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து தமிழக அமைச்சரவையில் நாடார் சமுதாயத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போதுள்ள அமைச்சரவையில் நாடாருக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை. அதனால் அந்த சமுதாயத்தினரையும் அமைச்சரவையில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை இன்பதுரை எம்எல்ஏ முன்வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் முதல்வரை சந்தித்த எம்எல்ஏக்கள் சார்பில், ‘‘வெற்றி பெற்று ஒரு ஆண்டு முடிவடைந்தும் தொகுதி மக்களின் வாக்குறுதிகள் நிறைவேற்றிக் கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாரிகளும் எம்எல்ஏக்கள் கோரிக்கையை கண்டுகொள்வதில்லை. கூவத்தூரில் அளித்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை. இதுபோன்ற முக்கிய பிரச்னைகளை பேசுவதற்கு உடனடியாக எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்ட வேண்டும். பிரிந்து செயல்படும் அதிமுகவின் இரண்டு அணிகளையும் இணைக்க முயற்சி எடுக்க வேண்டும். இரண்டு அணிகளும் இணைந்தால், அமைச்சர் பதவிக்கு சிக்கல் வரும் என்பதற்காக மூத்த அமைச்சர்கள் சிலர் தடையாக உள்ளனர். பேச்சுவார்த்தைக்காக அமைக்கப்பட்ட குழுவினர் சரியாக செயல்படவில்லை.  

இரட்டை இலை சின்னத்தை மீட்க வேண்டும் என்று தொண்டர்கள் விரும்புகிறார்கள். அதனால் இரண்டு அணிகளும் இணைந்து அதிமுக கட்சி பெயர் மற்றும் சின்னத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்சியின் பொதுச் செயலாளராக வைத்திலிங்கம், முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை நியமிக்க வேண்டும்’’ என்று இவர்கள் முதல்வரிடம் நேரில் வலியுறுத்தியுள்ளதாக தெரிகிறது.
தொடர்ந்து இரண்டு நாட்களாக அணி அணியாக எம்எல்ஏக்கள் வந்து முதல்வரை சந்தித்து, போர்க்கொடி தூக்கியுள்ளது எடப்பாடி தலைமையிலான அரசுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

* அதிமுக எம்எல்ஏக்கள் அணிஅணியாக கூடிப்பேசி வந்தனர்.
* நேற்று முன்தினம் 8 எம்எல்ஏக்கள் எடப்பாடியை சந்தித்தனர்.
* நேற்று மேலும் 10 எம்எல்ஏக்கள் சந்தித்து போர்க்ெகாடி உயர்த்தினர்.
* இவர்கள் சசிகலா அணியை ேசர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url