Type Here to Get Search Results !

நடிகர் விஷாலை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்






திரையுலக நடவடிக்கைகள் மட்டுமின்றி சமூக மற்றும் அரசியல் விவகாரங்களில் கருத்து கூறுவதுடன் முக்கிய நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுப்பட்டு வரும் நடிகர் விஷால் மீது சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்து வருவது கடுமையாக கண்டிக்கத்தக்கது.  திரையுலக நடிகர்களில் தற்போது மிக அதிகமாகவும், கடுமையாகவும் விமர்சிக்கப்படுபவர் நடிகர் விஷால்.  சில ஆண்டுகளுக்கு முன்னர் திருட்டு வி.சி.டிகளை ஒழிப்பதற்காக நடிகர் விஷால் நேரடியாக களத்தில் இறங்கி போராடியதை பாராட்டியவர்களை விட அவருடைய நடவடிக்கையை கிண்டல் செய்தவர்களே அதிகம்.  நடிகர் மட்டுமின்றி ஒரு தயாரிப்பாளராகவும் உள்ள விஷாலுக்கு ஒரு படம் தோல்வி அடைந்தால் அதன் நஷ்டம் அந்த தயாரிப்பாளர்களுக்கு தானே தெரியும்? தன்னுடைய துறையில் நிகழும் ஒரு தவறை தடுப்பதற்கு அவர் போராடுகிறார். இதிலென்ன தவறு இருக்கிறது?.  ஒரு வருடத்திற்கு முன்னர் தெரு நாய்களை காக்க வேண்டுமே தவிர கொல்லக் கூடாது என சமூக அக்கறையுடன் கருத்து கூறியது மட்டுமில்லாமல் களத்தில் இறங்கியும் விஷால் போராடினார். ஆனால், இதனையும் பலர் கிண்டலும் கேலியும் செய்தனர்.  இதுமட்டுமில்லாமல், நடிகர் சங்கத்தேர்தலில் நின்றபோது அவருக்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. ஜனநாயக நாட்டில் நடிகராக உள்ள ஒருவர் அவரது துறை சார்ந்த ஒரு தேர்தலில் போட்டியிடுவது குற்றமா?.  இல்லை. ஒரு தெலுங்கர் தமிழக சினிமாத்துறையில் போட்டியிடக்கூடாது என்ற கீழ்த்தரமான எண்ணமே தவிர வேறென்ன இதற்கு காரணமாக இருக்க முடியும்.  இந்துக்கள் பெரும்பான்மை கொண்ட இந்தியாவில் ஒரு இந்து தான் உயரிய பதவிகளுக்கு போட்டியிட வேண்டும் என்றால் நாம் எதற்கு மதச்சார்பின்மையை பற்றி பேச வேண்டும்? நடிகர் சங்கத்தேர்தலில் வெற்றி பெற்று விவசாயிகளுக்கு ஆதரவு அளித்தபோது நடிகர் விஷாலை கிண்டல் செய்தனர்.  ‘இவரது நடவடிக்கையில் உள்நோக்கம் இருக்கிறது. சுயலாபம் இல்லாமல் இவர் விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்க மாட்டார். எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவதற்காகவே இந்த நாடகத்தை நடிகர் விஷால் செய்கிறார்’ என பல்வேறு குற்றச்சாட்டுகள் வைத்தனர்.  சரி, சமூக விவகாரங்களுக்கு குரல் கொடுக்காமல், சமூக பிரச்சனைகளை தீர்க்க களத்தில் இறங்கி போராடாமல் நேரடியாக அரசியலில் குதித்தால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?.  நடிகர் விஷால் அரசியலுக்கு வருவதில் என்ன குற்றம் இருக்கிறது? நடிகராக இருப்பது என்ன தேச விரோதக் குற்றமா? உலக அரசியலில் நடிகராக இருந்தவர்கள் யாரும் ஜனாதிபதியாக பதவி வகித்தது இல்லையா?.  நடிகர்கள் அனைவரும் சம்பாதித்து மூட்டைக் கட்டி வைப்பதோடு சரி, அவர்களை ஏற்றிவிட்ட மக்களுக்கு எவ்வித நன்மையும் நடிகர்கள் செய்யமாட்டார்கள் எனக் குறை கூறுவார்கள். ஆனால், ஒரு நடிகர் பொதுவெளியில் இறங்கி சமூக பிரச்சனைக்கு போராடினால் ‘இதில் அரசியல் இருக்கிறது. உள்நோக்கம் இருக்கிறது’ என கிண்டல் செய்வார்கள்.  சமூகத்தில் நிகழும் அநீதிகளை தட்டிக்கேட்க யாரும் வரமாட்டார்களா? என ஏங்குவார்கள். ஆனால், யாராவது தட்டிக்கேட்க இறங்கினால் அவருடைய தலைமுறையே ஆராய்ந்து கடுமையாக கிண்டல் செய்வார்கள்.  தற்போது விஷால் தயாரிப்பாளர் சங்கத்தேதலிலும் வெற்றி பெற்ற பிறகு சமூக வலைத்தளங்களில் அவர் மீதான கிண்டலும் கேலியும் அடங்கவில்லை. ஆனால், நன்றாக ஆராய்ந்து பார்த்தாலும் கூட அவர் மீது ஏன் இவர்களுக்கு இவ்வளவு வன்மம் என்பது புரியவில்லை.  ‘ஒரு சிலரை தங்களது தலைவர்களாக பாவித்துக்கொண்டுள்ளபோது, வேறு சிலர் திடீரென சமூகத்திற்கு நன்மை செய்ய புறப்பட்டால் அவற்றை இவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால், தவறு உங்களிடம் தான் உள்ளதே தவிர நடிகர் விஷால் போன்ற நடிகர்களிடம் இல்லை.  ‘நாட்டை சுத்தம் செய்யாமல் வீடு திரும்ப மாட்டேன்’ என விஷால் கூறியதை இன்றும் கிண்டல் செய்து வருகின்றனர். ஒருவேளை, இதை ஒரு அரசியல் தலைவர் கூறியிருந்தால் இவர்கள் ஏற்றுருப்பார்களா?.  மக்களுக்கு நன்மை விளைவிக்கும் விஷயங்களை அரசியல் தலைவர்கள் மட்டும் தான் செய்ய வேண்டுமா? மதம், இனம், மொழிப் பாகுப்பாடு பார்த்து ஒருவரை கிண்டலும் கேலியும் செய்தால் எதிர்காலத்தில் எப்படி ஆரோக்கியமான தலைமுறை உருவாகும் என்பதை இன்றைய இளைஞர்கள் இனிமேலும் உணர்வார்களா?






Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad