Type Here to Get Search Results !

ஹைதராபாத்துக்கு எதிராக எழுச்சி பெறுவாரா?: தோனி ஃபார்ம் மீது குவியும் கவனம்நாளை (சனிக்கிழமை) வலுவான சன் ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிராக மோதும் புனே அணி தோனி ஃபார்ம் மீட்சியை கடுமையாக எதிர்பார்க்கிறது.

5 போட்டிகளில் இதுவரை ஆடியுள்ள புனே அணி 2 வெற்றிகள் பெற்று 4 புள்ளிகளுடன் அட்டவணையில் 7-ம் இடத்தில் உள்ளது.

ஆனால் கடைசியாக ஆர்சிபி-யை வீழ்த்தியதால் உத்வேகம் புனே அணியிடம் உள்ளது.

புனே அணி தோனியின் ஃபார்ம் மீட்சியை கடுமையாக எதிர்நோக்குகிறது. 12 நாட் அவுட், 5,11,5 28 இதுதான் தோனியின் இந்த ஐபிஎல் ஸ்கோர்கள் ஆகும்,, இவரை விட அனுபவம் குறைந்தவர்களெல்லாம் வெளுத்து வாங்கும் போது அவருக்கு ஏதோ மனத்தடை ஏற்பட்டுள்ளது.

அவரை அடக்குவதற்கு நீண்டநாட்களாகவே பவுலர்கள் கடைபிடித்து வரும் உத்திகளுக்கு எதிராக தனது ஆட்டத்தை தோனி மாற்றியமைத்துக் கொள்ளவில்லை, அவரிடம் ஸ்ட்ரோக்குகளும் குறைவுதான், அவர் தனது பாணியை மாற்றிக் கொள்வதை விட இன்னும் ஆக்ரோஷமாக பலவிதமான ஸ்ட்ரோக்குகளை ஆடி, பவுலர்களின் மனநிலையில் புகுந்து விளையாடினால் இன்னமும் கூட அவர் ஒரு அபாயகரமான வீரர்தான்.

குறைந்த ஸ்கோர்களில் ஆட்டமிழக்கும் போது நம்பிக்கை இழக்கக் கூடாது, சச்சின் டெண்டுல்கர் 2 ஆட்டங்களில் தொடர்ந்து குறைந்த ஸ்கோரில் ஆட்டமிழந்தால் அப்போதுதான் எதிரணி அவரைக்கண்டு அதிகம் பயப்படும். சச்சின் அப்படிப்பட்ட ஒரு தாக்கத்தை எதிரணி பவுலர்கள் மனதில் ஏற்படுத்தினார், தோனியும் அவ்வாறான அச்சத்தை எதிரணியினரிடத்தில் ஏற்படுத்த வேண்டும்.

அவரது உத்வேகம் குறைந்து காணப்படுகிறது, அவரை எழுச்சிபெறச் செய்ய தொடக்க வீரராகக் களமிறக்கி ஓரிரண்டு போட்டிகளில் ‘பிஞ்ச் ஹிட்டர்’ மாதிரி இறக்கி பவர் பிளேயில் கவலைப்படாமல் அடித்து நொறுக்குமாறு சுதந்திரம் அளிக்க வேண்டும், பிறகு அவரை பழைய பினிஷிங் ரோலுக்குக் கொண்டு வர முடியும்.

ஏனெனில் தோனி சிறப்பாக ஆடிய போதுதான் சென்னை சூப்பர் கிங்ஸ் 2010 மற்றும் 2011-ல் தொடர்ச்சியாக ஐபிஎல் கோப்பையை வென்றது. ஸ்மித், ரஹானே ஆகியோர்தான் ஆடி வருகின்றனர், அதிக விலை கொடுத்து வாங்கிய பென் ஸ்டோக்ஸ் கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு எதிராக அரைசதம் எடுத்தார், ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு இவரும் கலக்கவில்லை.

பவுலிங்கில் புனே அணியின் சொத்து என்றால் அது இம்ரான் தாஹிர்தான். 8 விக்கெட்டுகளை இதுவரை வீழ்த்தியுள்ளார். ஆனால் பந்து வீச்சில் தாக்கம் இல்லை.

கலக்கும் ஹைதராபாத்:

மாறாக கடந்த ஐபிஎல் சாம்பியன் ஹைதராபாத் 6 போட்டிகளில் 4-ல் வென்று 3-ம் இடத்தில் உள்ளது. அருமையாகத் தொடங்கிய சன் ரைசர்ஸ் பிறகு மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளிடம் தோல்வு தழுவியது. ஆனால் கிங்ஸ் லெவன் மற்றும் டெல்லி அணிக்கு எதிராக அருமையாக வெற்றி பெற்றனர். புவனேஷ் குமார் அங்கு ஒரு சக்தியாக எழுச்சி பெற்றுள்ளார்.

வார்னர், தவண் ஜோடி நல்ல தொடக்கங்களை கொடுத்து வருகிறது. இருவரும் இணைந்து 200 ரன்களுக்கும் மேல் இந்த ஐபிஎல் தொடரில் எடுத்துள்ளனர்.

பவுலிங்கில் புவனேஷ், ஆப்கன் புதிர் பவுலர் ரஷித் கான் உள்ளனர், இருவரும் முறையே அதிக விக்கெட்டுகள் பட்டியலில் முறையே முதலிடம் மற்றும் 3-ம் இடம் பிடித்துள்ளனர். புவனேஷ் 15 விக்கெட்டுகளையும் ரஷித் கான் 9 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.

எனவே தோனியின் ஃபார்ம், புனேயின் உத்வேகம் ஆகியவற்றை பொறுத்து நாளைய போட்டியின் முடிவு தீர்மானிக்கப்படும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad