சச்சினுக்கு எதிராக ஸ்டீவ் ஸ்மித் வைத்திருக்கும் நூதன சாதனை



டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகபட்ச ரன்கள், மொத்தம் 100 சதங்கள் அடித்து உலக சாதனையை தன்னிடம் வைத்துள்ள சச்சின் டெண்டுல்கருக்கு எதிராக ஒரு நூதன சாதனையை வைத்துள்ளார் இப்போதைய ஆஸி. கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்.

இது தொடர்பான கேள்வி ஒன்றை கிரிக் இன்போ இணையதளத்தில் ஆஸ்திரேலிய வாசகர் கேட்டார்.

அதாவது சச்சின் டெண்டுல்கருக்கு ஒரேயொரு பந்தை மட்டும் வீசியவர் அந்தப் பந்தில் சச்சினை வீழ்த்தியவர் யார்? என்று கேள்வி எழுப்பினார்.




அதற்கு புள்ளி விவர நிபுணர் அளித்த பதில் இதோ:

ஒரேயொரு பந்தை மட்டுமே சச்சினுக்கு வீசியவர், அதில் சச்சினையும் வீழ்த்தியவர் ஆனால் இன்னொரு முறை சச்சினுக்கு அவர் வீசவில்லை. இவர் யாரெனில் ஆஸ்திரேலியாவின் தற்போதைய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்.

இவர் தொடக்கத்தில் லெக்ஸ்பின் பவுலிங் வீசும் ஆல்ரவுண்டராகவே அணிக்குள் நுழைந்தார். 2013-ம் ஆண்டு மொஹாலியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் சச்சின் டெண்டுல்கர் 37 ரன்களில் இருந்த போது ஸ்டீவ் ஸ்மித் பந்து வீச வந்தார், முதல் பந்திலேயே சச்சின் மட்டை மற்றும் கால்காப்பில் பட்டு ஷார்ட் லெக்கில் எட் கோவனிடம் கேட்ச் ஆனது. சச்சின் வெளியேறினார். அதன் பிறகு தன் வாழ்நாளில் 2-வது பந்தை சச்சினுக்கு ஸ்மித் வீசவில்லை.

இவ்வாறு பதில் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த டெஸ்ட் போட்டி பலருக்கும் நினைவிருக்கலாம். ஷிகர் தவண் தன் அறிமுகப் போட்டியிலேயே 174 பந்துகளில் 187 ரன்களை விளாசி சாதனை புரிந்த டெஸ்ட் போட்டியாகும் இது. இதில் அவர் 33 பவுண்டரிகளையும் 2 சிக்சர்களையும் விளாசினார். இந்தப் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 4 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 3-0 என்று முன்னிலை வகித்து பிறகு தொடரை 4-0 என்று கைப்பற்றி இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு ஒயிட் வாஷ் தோல்வி அளித்தது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url