2019 உலகக் கோப்பை வரை தோனி நீடிப்பாரா முன்னாள் பயிற்சியாளர் கருத்து
2017 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் தோனி எப்படி ஆடுகிறார் என்பதைப் பொறுத்தே அவர் 2019 உலகக்கோப்பை வரை நீடிப்பது தீர்மானிக்கப்படும் என்று தோனியின் சிறுபிராய பயிற்சியாளர் கேஷவ் பானர்ஜி தெரிவித்துள்ளார். “இப்போதைக்கு தோனியின் கவனம் முழுதும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிதான், அதில் அவர் நன்றாகச் செயல்பட்டால் நிச்சயம் 2019 உலகக்கோப்பையில் ஆடுவார் என்று நான் நினைக்கிறேன். வயது ஏறிகொண்டிருக்கும் போது அதே ஸ்ட்ரைக் ரேட்டை பராமரிப்பது கடினம். ஆனால் அவரது விருப்புறுதியும் ஆட்டத்தை ஆய்ந்து நோக்கும் தன்மையும் அவரை சிறப்பு வாய்ந்தவராக உருவாக்கியுள்ளது. சாம்பியன்ஸ் டிராபிக்காக முழு உடல்தகுதியுடன் அவர் உள்நாட்டு விஜய் ஹசாரே ஒருநாள் தொடரில் ஆடினார். டெஸ்ட் போட்டிகளில் அவர் யாரும் தன்னை நோக்கி விரலை நீட்டும் முன் ஓய்வு அறிவித்தார், டெஸ்ட் போட்டிகளிலிருந்து அவர் விலகும் முடிவு நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் கூட தெரியாது, என்றார் கேஷவ் பானர்ஜி. இதே கேஷவ் பானர்ஜிதான் தோனியை கோல்கீப்பிங்கிலிருந்து விக்கெட் கீப்பிங்கிற்கு அழைத்து வந்தவர்.