சுழல் சூறாவளியில் சிக்குமா இங்கிலாந்து




சமீபகாலமாக சொந்த மண்ணில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எதிரணியை புரட்டியெடுத்து வருகின்றனர். தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் இதை கண்கூடாக காண முடிந்தது.  கடைசியாக நியூஸிலாந்து தொடரில் 3 டெஸ்ட் போட்டிகளிலும் அந்த அணியின் ஒட்டு மொத்த 60 விக்கெட்களில் 41 விக்கெட்களை இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் காவு வாங்கியுள்ளனர். இதேபோல் தென் ஆப்பிரிக்க தொடரில் வீழ்த்தப்பட்ட 70 விக்கெட்களில் நமது சுழல் மன்னர்கள் கைப்பற்றியது 61 விக்கெட்கள்.  இதனால் இந்தியாவுக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட்டில் விளையாட உள்ள இங்கிலாந்து அணிக்கு சற்று கிலி உருவாகி உள்ளது. கடந்த 2012ல் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு போக்கு காட்டியது.  4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா முதல் டெஸ்ட்டில் வெற்றி பெற்ற போதிலும் அடுத்த 2 போட்டிகளிலும் தோல்வியை தழுவியது. கடைசி போட்டியை டிரா செய்தது. இந்த தொடரை வெல்வதில் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர்கள் கிரேமி ஸ்வான், மோன்டி பனேசர் முக்கிய பங்காற்றினர்.  இருவரும் சேர்ந்து அந்த தொடரில் 37 விக்கெட்களை வீழ்த்தி ஆதிக்கம் செலுத்தினர். இவர் களுக்கு பிறகு அடுத்த 4 ஆண்டு களில் இந்திய மண்ணில் எந்த ஒரு வெளிநாட்டு சுழற்பந்து வீச்சாளர் களும் இந்த அளவுக்கு அதிக விக்கெட்கள் கைப்பற்றவில்லை.  ஆனால் ஸ்வானும், பனேசரும் ஓய்வு பெற்றுவிட்டதால் இந்த முறை இங்கிலாந்து அணிக்கு கடந்த சுற்றுப்பயணம் போன்று இனிமையானதாக இருக்குமா என்பது கேள்விக்குறிதான். வங்கதேச தொடரில் சுழற்பந்து வீச்சில் இங்கிலாந்து அணி ஆட்டம் கண்டது.  இதனால் எதிர் வரும் தொடரில் அஸ்வின், ஜடேஜா ஆகியோரை இங்கிலாந்து வீரர்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்பதை பொறுத்துதான் அந்த அணியின் தலைவிதி அமையும். இங்கிலாந்து அணி மீது மேலாதிக்கம் செலுத்த வசதியாக அஸ்வின், ஜடேஜா ஆகியோருடன் அமித் மிஸ்ரா, ஜெயந்த் யாதவ் ஆகிய இரு சுழலர்களும் கூடுதல் பலத்துக்காக 15 பேர் கொண்ட அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.  ஹர்திக் பாண்டியாவை இந்திய அணி நிர்வாகம் கையில் எடுக்கும் பட்சத்தில் 3 சுழலர்களுடன் இங்கிலாந்தை தாக்க கோலி திட்டமிடக்கூடும். நியூஸிலாந்து தொடரில் அஸ்வின் 27 விக்கெட்கள் அள்ளினார். அவருக்கும் ஜடேஜாவுக்கும் போதிய அளவு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் அவர்கள் மிரட்ட தயாராகி வருகின்றனர்.  டெஸ்ட் போட்டிகளில் நம்பர் ஒன் பந்து வீச்சாளரான அஸ்வினிடம் ஒரு சாமர்த்தியம் உண்டு. பேட்ஸ்மேன்கள் நிலைத்து நின்று விளையாடும் பட்சத்தில் விக்கெட்கள் விழாது. அந்த சமயத்தில் பேட்ஸ்மேன்கள் தவறு இழைக்கும் வரை பொறுமையாக அஸ்வின் செயல்படுவார்.  இதற்காக பேட்ஸ்மேன்களின் கால் நகர்வுகளையும், மன ஓட்டத்தையும் கணக்கிட்டு ஒவ்வொரு பந்தையும் மாறுபாடாக வீசுவார். இதற்கு நிச்சயம் அவருக்கு பலன் கிடைக்கும். எதிரணியின் சிறந்த பார்ட்னர்ஷிப் கட்டமைப்பை உடைத்து விட்டதால் அதன் பின்னர் அஸ்வினின் விக்கெட் வேட்டையை நிறுத்த முடியாது. இதை சமீபகால போட்டிகளை சற்று கூர்ந்து கவனித்தால் தெரிந்திருக்கும்.  எதிரணியை ரன் சேர்க்க விடாமல் நெருக்கடி கொடுத்து விக்கெட்களை கைப்பற்றும் திறன் கொண்ட இடது கை சுழல் வீரரான ஜடேஜா நியூஸிலாந்து தொடரில் 14 விக்கெட்கள் சாய்த்தார்.  சமீபத்தில் முடிவடைந்த ஒருநாள் போட்டி தொடரில் அமித் மிஸ்ரா 15 விக்கெட்கள் வீழ்த்தி நல்ல பார்மில் உள்ளார். இளம் சுழல் வீரரான ஜெயந்த் யாதவையும் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே நன்கு பட்டை தீட்டி வைத்துள்ளார்.  இங்கிலாந்து அணியும் சுழலுக்கு சாதகமான இந்திய ஆடுகளத்தில் பந்து வீச்சுக்கு தயாராகவே வந்துள்ளது. அந்த அணியில் மொயின் அலி, கிரேத் பாத்தி, அடில் ரஷித், ஜாபர் அன்சாரி ஆகிய 4 சுழற்பந்து வீச்சாளர்கள் இடம் பிடித்துள்ளனர்.  இதில் மொயின் அலி கடந்த 2014-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 19 விக்கெட்கள் வீழ்த்தினார். சமீபத்திய வங்கதேச தொடரில் 11 விக்கெட்கள் கைப்பற்றினார். இதே தொடரில் அடில் ரஷித் 7 விக்கெட்கள் வீழ்த்தினார்.  மேலும் பாகிஸ்தான் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சக்லைன் முஸ்டாக் இந்திய தொடரில் இங்கி லாந்து சுழலர்களுக்கு ஆலோ சகராகவும் செயல்படுகிறார். இது எந்த அளவுக்கு அவர் களுக்கு உதவும் என்பதை பொறுத் திருந்துதான் பார்க்க வேண்டும்.  உள்ளூர் சாதகம், சுழல் ஆடுகளம், இந்திய அணியின் தொடர் வெற்றி வேட்கை ஆகிய வற்றுக்கு அலாஸ்டர் குக் குழுவினர் தடைபோட வேண்டுமெனால் அந்த அணியினர் அதிசயத்தையே நிகழ்த்த வேண்டும்



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url