ஒரு பாட்டுக்கு நடனமாட நான் என்ன சிலுக்கா..? – பவர் ஸ்டார் சீனிவாசன் கேள்வி
மதுரையைக் கதைக்களமாகக் கொண்டு, காதலும் கலாட்டாக்களுமாக ‘பாண்டியும் சகாக்களும்’ படம் உருவாகி வருகிறது. இப்படத்தை அறிமுக இயக்குநர் அப்பு கே.சாமி இயக்கியிருக்கிறார். இசை சிகிச்சை என்கிற தலைப்பில் பி.எச்.டி படித்துக் கொண்டிருக்கும் ஜீன் இசையில் உருவான ‘பாண்டியும் சகாக்களும்’ படப்பாடல்களும் மற்றும் படத்தின் டிரைலரும் இன்று வெளியிடப்பட்டன. இந்த விழாவில் மூத்த இயக்குநர்கள் அதியமான், மனோஜ்குமார், நடிகர் பவர் ஸ்டார், ஆச்சி மசாலா நிறுவனர் ஐசக், பி.ஆர்.ஓ யூனியன் செயலாளர் ஜான் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். பவர் ஸ்டார் சீனிவாசன் பேசும்போது, என்னைப் பற்றி நிறைய வதந்திகள். ஆனால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் சினிமாவில் முன்னேறிக்கொண்டே இருப்பேன். கலைத்தாய் என்னை தத்தெடுத்துக்கொண்டிருக்கிறாள். ஒரு பாட்டுக்கு நடனமாட அழைத்தார்கள், நான் என்ன சிலுக்கா..? என்று கேட்டேன். ஆனாலும், நான் ஆடினால் படம் ஓடும் என்று நம்பி வருகிறார்கள், அவர்கள் நம்பிக்கையைக் கெடுக்க விரும்பவில்லை என்றார்.