குழப்பத்தில் கும்ளே பாண்ட்யா– கருண் இடையே போட்டி





இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பெற ஹர்திக் பாண்ட்யா, கருண் நாயர் இடையே கடும் போட்டி காணப்படுகிறது.  இந்தியா, இங்கிலாந்து அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளன. முதல் போட்டி வரும் 9ல் ராஜ்கோட்டில் துவங்குகிறது. முதலிரண்டு போட்டிக்கான இந்திய அணியில்  ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா அறிமுக வாய்ப்பு பெற்றுள்ளார். குறைந்த முதல் தர போட்டியில் விளையாடியுள்ள இவரின் தேர்வு, பலருக்கு வியப்பை தந்தது. அதே நேரம், ரஞ்சி போட்டியில் ரன் மழை பொழிந்து வரும் கருண் நாயரும் இடம் பிடிக்க காத்திருக்கிறார். இதில் ஐந்தாவது பவுலராக குஜராத்தின் பாண்ட்யா வருவாரா அல்லது 6வது  பேட்ஸ்மேனாக  கர்நாடகாவின் கருண் களமிறங்குவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களில் யாருக்கு கேப்டன் கோஹ்லி மற்றும் பயற்சியாளர் கும்ளேவின் கருணை கிடைக்கும் எனத் தெரியவில்லை.

இது குறித்து கும்ளே கூறியது:

 ஐ.பி.எல்., தொடரில் அறிமுகமானபோது, பாண்ட்யா சிறப்பாக செயல்பட்டார். நியூசிலாந்துக்கு எதிராக தரம்சாலாவில் நடந்த ஒரு நாள் போட்டியிலும் 3 விக்கெட் வீழ்த்தினார். இதே தொடரின் டில்லி போட்டியில் 36 ரன்கள் சேர்த்தார். இப்படி  ஆல் ரவுண்டராக  செயல்படும் இவரை, ஏன் டெஸ்ட் அணியில் தேர்வு செய்யக்கூடாது. மணிக்கு 140 கி.மீ., வேகத்தில் பவுலிங் செய்து, பின் வரிசையில்  பேட்டிங்  செய்யும் திறமை உள்ள வீரர் அணிக்கு தேவை. பாண்ட்யாவை ஐந்தாவது பவுலராகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்    உள்ளூர் போட்டியில் கருண் நாயர் அபாரமாக ரன் சேர்க்கிறார். ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த இந்திய  ஏ தொடரில் இவர் ஜொலிக்காதது குறித்து விமர்சிக்கின்றனர். இவர், ரஞ்சி கோப்பையில் பங்கேற்று கர்நாடகா சார்பில் சதம் விளாசினார் என்பதை மறந்து விடக் கூடாது. நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தும் இவருக்கு, ரோகித் (காயம்) இல்லாததால் இங்கிலாந்து தொடரில் வாய்ப்பு கிடைக்கலாம். ;ராஜ்கோட்டில் முதல் முறையாக டெஸ்ட் போட்டி நடக்க உள்ளது. இங்குள்ள ஆடுகளத்தின் தன்மையை பொறுத்து அணி தேர்வு செய்யப்படும். பாண்ட்யா, கருண் நாயர் என இருவருக்கும் கூட வாய்ப்பு கிடைக்கலாம்    இங்கிலாந்துக்கு எதிராக கடந்த முறை 3 டெஸ்ட் தொடரிலும் இந்தியா வீழ்ந்தது குறித்து கேட்கின்றனர். இதில் விளையாடிய பல வீரர்கள் இரு அணியிலும் தற்போது இல்லை. இந்திய வீரர்கள் டெஸ்டில் முன்னேற்றம் கண்டுள்ளனர். இங்கிலாந்து தொடரை நம்பிக்கையுடன் எதிர் கொள்வோம். இவ்வாறு கும்ளே கூறினார்  இந்திய அணி வீரர்கள் ஷிகர் தவான் (கட்டை விரல்), ரோகித் (தொடைப்பகுதி) உள்ளிட்டோர் காயத்தால் அவதிப்படுவதால் வாய்ப்பு கிடைக்கவில்லை. இது குறித்து கும்ளே கூறுகையில்,  லோகேஷ் ராகுல் மற்றும் ரோகித்திற்கு எதிர்பாராதவிதமாக காயத்தின் தீவிரம் அதிகமாக உள்ளது. நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்ட ரோகித் இல்லாதது இழப்பு. அதே நேரம், காயத்திலிருந்து மீண்டு அணிக்கு திரும்பும் வீரர்கள், உள்ளூர் போட்டியில் கட்டாயம் விளையாட வேண்டும். இதில் உடற்தகுதியை நிரூபித்தால் மட்டுமே இந்திய அணியில் பங்கேற்க முடியும்,  என்றார்.  



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url