சிவகார்த்திகேயனை தொடர்ந்து லேடி கெட்டப்புக்கு மாறிய விஜய் சேதுபதி
சமீபத்தில் வெளிவந்த ‘ரெமோ’ படத்தில் சிவகார்த்திகேயன் லேடி நர்ஸ் கெட்டப்பில் நடித்து அசத்தியிருந்தார். சிவகார்த்திகேயனின் லேடி கெட்டப்புக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பும் கிடைத்தது. இந்நிலையில், அவரைத் தொடர்ந்து தற்போது விஜய் சேதுபதியும் லேடி கெட்டப்புக்கு மாறியுள்ளார். விஜய் சேதுபதி தற்போது ‘ஆரண்ய காண்டம்’ படத்தை இயக்கிய தியாகராஜ குமாரராஜா இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். மலையாள நடிகர் பஹத் பாசிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கியது. ‘ஆரண்ய காண்டம்’ படத்தைப் போன்றே வித்தியாசமான கதைக்களத்துடன் படத்தை இயக்கிவரும் தியாகராஜா குமாரராஜா இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு லேடி கெட்டப் போட்டு நடிக்க வைத்துள்ளார். விஜய் சேதுபதி லேடி கெட்டப்புடன் நிற்கும் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. படம் முழுக்க விஜய் சேதுபதி இந்த கெட்டப்பில் வருகிறாரா? அல்லது ஏதாவது ஒரு காட்சியில் மட்டும் இந்த கெட்டப்பில் வருகிறாரா? என்பது பிறகுதான் தெரியவரும்.