இரண்டடுக்கு டெஸ்ட் கிரிக்கெட் திட்டத்தை கைவிட்டது ஐசிசி





டெஸ்ட் கிரிக்கெட்டில் டாப் அணிகள், தரவரிசையில் கீழுள்ள அணிகளை தனித்தனியாகப் பிரித்து போட்டிகளை நடத்தும் இரண்டு அடுக்கு திட்டத்தை ஐசிசி கைவிடுவதாக அறிவித்தது. இந்தத் திட்டத்திற்கு இந்தியா, இலங்கை, வங்கதேசம், ஜிம்பாப்வே ஆகிய வாரியங்கள் எதிர்ப்பு தெரிவிக்க, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், மே.இ.தீவுகள் ஆதரவளித்தன. இரண்டு அடுக்கு டெஸ்ட் கிரிக்கெட் திட்டத்தின் படி மேலடுக்கில் 7 அணிகளும் கீழடுக்கில் 5 அணிகளும் இருக்கும், இதில் மேலடுக்கு 7 அணிகளுக்கிடையே போட்டிகள் நடைபெறும், அதே போல் கீழடுக்கு 5 அணிகளுக்கு இடையே டெஸ்ட் போட்டிகள் நடைபெறும், இதில் ஆட்டத்திறன் அடிப்படையில் அதாவது வெற்றி தோல்விகள் அடிப்படையில் அணிகள் முன்னேற்றமோ பின்னடைவோ அடையும். ஆப்கான், அயர்லாந்து ஆகிய அசோசியேட் அணிகள் தரவரிசையில் கீழ்நிலையில் உள்ள 3 டெஸ்ட் விளையாடும் நாடுகளுடன் விளையாடும். இதனால் மற்ற அசோசியேட் அணிகளுக்கும் இரண்டாவது அடுக்கில் நுழைய வாய்ப்பிருக்கும், ஆட்டத்திறன் மேம்பட்டு முதல் அடுக்கிற்கு முன்னேறவும் வாய்ப்பு கிடைக்கும்.  ஆனால் இந்தத் திட்டத்தை இந்தியா, இலங்கை, வங்கதேசம், ஜிம்பாப்வே எதிர்த்ததால் தற்போது கைவிடப்பட்டது. பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்குர் கூறும்போது, “உண்மையில் இரண்டடுக்கு டெஸ்ட் கிரிக்கெட் முறையினால் பிசிசிஐ நிதியளவில் நல்ல பயனடையவே செய்யும், ஆனால் இதனால் பாதிப்படையும் நாடுகள் பக்கம் நிற்பதென முடிவெடுத்தோம்” என்றார். இந்த இரண்டடுக்கு டெஸ்ட் கிரிக்கெட் திட்டத்தை ஐசிசி கைவிட்டதையடுத்து வங்கதேச கிரிக்கெட் வாரியமும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. ஆனால் பலரும் இருதரப்பு டெஸ்ட் தொடர்கள் ரசிகர்கள் வருகையில் பின்னடைவு காணத் தொடங்கியதால் டெஸ்ட் போட்டியை கவர்ச்சிகரமாக்க இந்த இரண்டடுக்கு டெஸ்ட் கிரிக்கெட் திட்டம் உதவும் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர், ஆகவே உடனடியாக இதனை கைவிட வேண்டாம் என்று ஐசிசிக்கு கோரிக்கை வைத்துள்ளனர். அதே போல் டெஸ்ட் கிரிக்கெட்டை சுவாரசியமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கொண்டு வரலாம் என்ற திட்டத்தையும் பிசிசிஐ ஏற்கவில்லை, தற்போதைய நெருக்கடியான ஷெட்யூலில் ஒவ்வொரு அணியும் மற்ற அணி ஒவ்வொன்றுடனும ஆட ஏது கால அவகாசம் என்று கேட்டு பிசிசிஐ இதனை நிராகரித்தது. ஆனால் டாப் 2 அணிகளுக்கிடையே டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்த யோசனை கூறப்பட்டுள்ளது.



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url