Type Here to Get Search Results !

இரண்டரை அல்லது 3 நாட்களில் போட்டிகள் முடியும் ஆடுகளம் அமைப்பதில் என்ன பயன் ஹர்பஜன் கேள்வி




கேப்டன் விராட் கோலி, பயிற்சியாளர் அனில் கும்ப்ளே ஆகியோர் நியூஸிலாந்துக்கு எதிராக பந்துகள் கண்டபடி திரும்பும் பிட்ச்களை அமைப்பதை ஆதரிக்கக் கூடாது என்று கூறியுள்ளார் ஹர்பஜன் சிங்.  இது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்த ஹர்பஜன் சிங், “கடந்த 4-5 ஆண்டுகளில் நமது முந்தைய அணி நிர்வாகங்கள் 3 நாட்களில் டெஸ்ட் போட்டிகள் முடிவடையக்கூடிய பிட்ச்களை விரும்பினர். ஆனால் தன்னம்பிக்கை நபர்களான விராட் கோலியும், அனில் கும்ப்ளேவும் இத்தகைய பிட்ச்களை ஆதரிக்கக் கூடாது. நல்ல டெஸ்ட் பிட்ச் அமைத்து ஆட்டம் 5-ம் நாளில் முடியும் ஒரு சவாலான, இரு அணிகளுக்கும், பேட்டுக்கும் பந்துக்கும் சமவாய்ப்புகள் வழங்கும் பிட்ச்களை நாடுவது அவசியம்.
நாம் பரந்துபட்ட பார்வையில் பார்க்க வேண்டும். டெஸ்ட் போட்டிகள் இரண்டரை அல்லது 3 நாட்களில் முடிவதால் நாம் என்ன பயன் பெற்று விட்டோம்? தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நம் பேட்ஸ்மென்களே போராடினர். நாம் நம் பேட்ஸ்மென்களுக்குமே கூட இத்தகைய பிட்ச்களினால் நியாயம் கற்பிக்கவில்லை.

இது ஏன் டெஸ்ட் கிரிக்கெட் என்று அழைக்கப்படுகிறது, முதல் நாள் முதல் 5-ம் நாள் வரை நமது திறமைகள் கடுமையக சோதிக்கப்படுவதால்தான். அனைவரும் அந்த மட்டத்தில் வெற்றி பெற வாய்ப்புகள் வழங்க வேண்டும்.
கோட்லாவில் கடைசியாக நடந்த டெஸ்ட் போட்டியில் ரஹானே அபாரமாக ஆடினார், விராட் கோலி ரன்கள் எடுத்தார், மற்றபடி நம் பேட்ஸ்மென்களும் இத்தகைய பிட்ச்களில் தடுமாறுகின்றனர். கன்னாபின்னாவென்று பந்துகள் திரும்பும் பிட்ச்களை போட்டால் அது பூமராங் போல் நம் மீதே திரும்பும். அவர்களிடத்திலும் சாண்ட்னர், இஷ் சோதி உள்ளனர்.
மாறாக ஸ்போர்ட்டிங் பிட்ச் ஒன்றில் நமது பேட்டிங் 400 ரன்களை முதலில் பேட் செய்து எடுக்கமுடியுமானால் நியூஸிலாந்து நம்மை வீழ்த்த முடியாது. தனிப்பட்ட வீரர்கள் அளவில் நம் அணி சிறப்பாக விளங்குகிறது. இரு தரப்பினருக்கும் சமவாய்ப்பு வழங்கும் பிட்ச்களிலும் நாம் 3-0 என்று வெல்ல முடியும்.

தாறுமாறாக திரும்பும் பிட்ச்களில் சுழற்பந்து வீச்சாளர்களுக்குமே கடினம்தான், பந்து எங்கு பிட்ச் ஆகி எப்படி செல்லும் என்பது பவுலர்களுக்கே தெரியாமல் போகும். அதனால்தான் நல்ல பிட்ச்களில் ஆட வேண்டுமென்று கூறுகிறேன்.  இசாந்த் சர்மா 69 டெஸ்ட் போட்டிகளில் 202 விக்கெட்டுகளைத்தான் வீழ்த்தியுள்ளார் என்று விமர்சனம் வைக்கின்றனர். ஆனால் இந்தியாவில் அவர் எவ்வளவு ஓவர்கள் வீசுகிறார்? எவ்வளவு ஓவர்கள் புதிய பந்தில் வீசுகிறார் எவ்வளவு பழைய பந்துகள் ரிவர்ஸ் ஸ்விங் ஆகிறது போன்றவற்றை நாம் கணக்கிலெடுத்துக் கொள்ள மாட்டேன் என்கிறோம்.

இங்கு முதல் ஒரு மணிநேரத்திலேயே ஸ்பின்னர்கள் வந்து விடும் பிட்சில் இசாந்த் எவ்வளவு ஓவர்கள் வீசிவிட முடியும்? நாம் இசாந்திற்கு நியாயம் செய்யும் பிட்ச்கள் அமைப்பதில்லை.
அஸ்வினுக்கு எனது அறிவுரை தேவையில்லை. அவர் மேலும் சிறப்பாகவே வீசுவார் என்று நம்புகிறேன்” என்றார் ஹர்பஜன் சிங்



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad