Type Here to Get Search Results !

வெற்றிக்கு வழிவகுக்காமல் 55 ரன்கள் சராசரி வைத்திருந்து என்ன பயன்?: விராட் கோலி விளாசல்






நாக்பூர், மொஹாலி பிட்ச்கள் பற்றிய விமர்சனங்கள் பெரிய அளவில் எழுந்ததையடுத்து விராட் கோலி பதிலடி கொடுத்துள்ளார். பிட்ச்கள் பற்றி நாங்கள் முன்னாள் புகார் எழுப்பியதில்லை, எதிர்காலத்திலும் புகார் எழுப்ப மாட்டோம் என்று கூறினார் கோலி.  9 ஆண்டுகளாக அயல்நாட்டில் டெஸ்ட் தொடரை இழக்காமல் சாதித்து வந்த தென் ஆப்பிரிக்கா இந்திய ‘குழி பிட்ச்களில்’ சிக்கி சுழலில் சின்னாபின்னமாகி தொடரை இழந்தது.  இதனையடுத்து நாக்பூர் வெற்றிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலி கூறியிருப்பதாவது:  இத்தகைய பிட்ச்களில்தான் ஆடுவோம் என்பது கொள்கையல்ல. இந்திய பிட்ச்கள் இத்தகைய தன்மைகள் கொண்டதே. இல்லையெனில், இன்னிங்ஸுக்கு 500 ரன்கள் என்று அடித்து நொறுக்கிக் கொண்டிருக்க வேண்டியதுதான். பவுலர்கள் இல்லாமல் போய் விடுவார்கள், மேலும் டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற முடியாது. முக்கியம் வெற்றி பெறுவதே.  நான் ஏற்கெனவே இது பற்றி கூறியிருக்கிறேன், உலகில் எங்கு சென்றாலும் அத்தகைய சூழல்களை எதிர்கொள்ள தயாராகவே செல்ல வேண்டும். அதற்கேற்ப நமது ஆட்டத்தை மெருகேற்ற வேண்டும். இன்று சிறந்த உதாரணமாக திகழ்ந்தவர்கள் டுபிளேஸ்ஸிஸ் மற்றும் ஆம்லா. ஆடமுடியும் என்று காண்பித்தனர். பிறகு ஏன் பிட்ச் விவகாரம் இவ்வளவு ஊதிப்பெருக்கப் படுகிறது என்பது எனக்குப் புரியவில்லை.  நிறைய பேர் பிட்சைப் பற்றி நிறைய விமர்சனங்களை வைக்கின்றனர். எங்கேயோ இருந்து கொண்டு இந்திய பிட்ச்களை பற்றி விமர்சனம் செய்கின்றனர். இது ஒரு மனநிலை, அதனைக் கூற அவர்களுக்கு சுதந்திரம் உண்டு. ஆகவே அதனை நான் தவறாக எண்ணவில்லை. நாங்கள் சவாலான சூழல் குறித்து ஒருபோதும் புகார் தெரிவித்ததில்லை, இனியும் தெரிவிக்கப் போவதில்லை.  நாங்கள் எங்கள் ஆட்டத்திறனை வளர்த்துக் கொள்ளவே பார்க்கிறோம், வெளிநாட்டுச் சூழல்களுக்குக்கேற்ப எங்களால் தகவமைத்துக் கொள்ள முடியவில்லை, அதற்கான மனோபலம் இல்லை என்பதே பிரச்சினை. ஆனால் இப்போதோ உள்நாட்டு அனுகூலச் சூழல்களை மேலதிகமாக பயன்படுத்துவது என்று நம்மை குறை கூறுகின்றனர்.  கடந்த சில ஆண்டுகள் புள்ளிவிவரங்களைப் பார்த்தோமானால், அணிகள் தங்கள் சொந்த நாட்டில்தான் ஆதிக்கம் செலுத்தி வருவதைக் காண முடியும். டெஸ்ட் கிரிக்கெட் இப்படித்தான் ஆகிவிட்டது. அயல்நாடுகளில் வெற்றி பெறும் அணிகள் 1 அல்லது 2-ம் இடத்தில் இருக்கின்றனர். அதற்கு பெரிய பண்புத்திறன் வேண்டும், ஒவ்வொரு முறையும் அது நிகழாது.
9 ஆண்டுகளாக தென் ஆப்பிரிக்கா வெளிநாட்டில் தொடரை இழந்ததில்லை, ஆனால் அந்த அணி இதனை தொடர்ந்து தக்கவைப்பது கடினம். இதற்காக அவர்களுக்குரிய பெருமை உண்டு. ஆனால் இந்த 3 டெஸ்ட் போட்டிகளில் நெருக்கடி கொடுத்த இந்திய வீரர்களை நான் பாராட்ட வேண்டும். தொடரை வெல்ல வேண்டும், இதற்கு கூடுதலாகவோ, குறைவாகவோ என்னால் எதையும் பார்க்க முடியாது.
நான் முன்னமேயே கூறியது போல் இந்தியாவில் எந்த அணியும் இந்தச் சூழலைத்தான் பெறுவார்கள். காலே டெஸ்ட் போட்டியில் நாங்கள் வீழ்ச்சியடைந்த போது, வேகப்பந்து வீச்சில் முன்னேறி விட்டோம் ஸ்பின் பந்தை ஆடுவது எங்களுக்குத் தெரியாது என்று சிலர் கூறினர். இப்போது ஸ்பின்னுக்குச் சாதகமான பிட்ச்களில் ஆடுகிறோம். இதுவும் பிரச்சினைதான், ஆனால் எங்கு சமநிலையைக் காண்போம் என்பது தெரியவில்லை.
வெற்றி பெறும் வரையில் எனக்கு பேட்டிங் சராசரிகளைப் பற்றிக் கவலையில்லை. நாங்கள் சாதனைகளுக்காகவோ, எண்ணிக்கைக்காகவோ, சராசரிக்காகவோ ஆடவில்லை. இலங்கைத் தொடரில் பேட்டிங் பெரிதாக அமைந்தது என்று கூற முடியாது, ஆனால் தொடரை வென்றோம். பவுலர்கள்தான் போட்டிகளை வெற்றிபெற்று கொடுப்பார்கள், இதுதான் முக்கியமான விஷயம்.
20 விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் 55 ரன்கள் சராசரி வைத்திருந்து என்ன பயன்? சிறிய பங்களிப்பாக இருந்தாலும் அணியின் வெற்றிக்கு அது உதவுகிறதா என்பதே விஷயம், 50 ரன்கள் சராசரி வைத்திருப்பது முக்கியமல்ல. சில சமயங்களில் டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரிய சதங்களை விட சிறிய பங்களிப்புகளே முக்கியத்துவம் பெறுகின்றன.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad