அமித் மிஸ்ராவுடன் ஹொட்டல் அறையில் நடந்தது என்ன பாதிக்கபட்ட பெண் விளக்கம்
இந்திய சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா மீதான புகாரை திரும்ப பெற தயாராக இருப்பதாக அவரது தோழி தெரிவித்துள்ளார். இந்தியா- தென் ஆப்பிரிக்கா தொடருக்கு முன்னதாக கடந்த செப்ரெம்பர் மாதம் இந்திய அணி பெங்களூரில் பயிற்சி முகாமில் கலந்து கொண்டது. அப்போது அமித் மிஸ்ரா, ஹொட்டல் அறையில் வைத்து தன்னை பாலியல் ரீதியாக தாக்கியதாக அவரது தோழி மற்றும் பாலிவுட் தயாரிப்பாளரான வந்தனா என்பவர் அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் பொலிசார் அமித் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும், 7 நாட்களுக்குள் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் மிஸ்ராவுக்கு சம்மன் அனுப்பினர். இந்நிலையில் தன்னை தாக்கிய கிரிக்கெட் வீரர் அமித் மிஸ்ரா மீதான வழக்கை திரும்ப பெற தயராக இருப்பதாக புகார் அளித்த அந்த பெண் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் போலிஸ் கூறியதாவது:- "கடந்த 3 வருடங்களாக நானும், மிஸ்ராவும் நெருங்கிய நண்பர்கள். ஆனால் அவர் திடீரென்று என்னை விட்டு விலக ஆரம்பித்தார். இதனால் அவரிடம் பேச வேண்டும் என்று நினைத்தேன். கடந்த மாதம் 25ம் தேதி அவர் பெங்களூரில் பயிற்சி முகாமில் இருப்பதை அறிந்து அவருக்கு போன் செய்தேன். ஆனால் என்னுடையை போனை அவர் எடுக்கவில்லை. இதனால் இரவு 8 மணியளவில் அவரை தேடி அவர் தங்கியிருக்கும் ஹொட்டலுக்கு சென்றுவிட்டேன். திடீரென்று அவரது அறைக்குள் நுழைந்தேன். என்னை பார்த்த மிஸ்ரா கோவத்தில் கத்தினார். தகாத வார்த்தையால் திட்டினார். பிறகு கழுத்தை நெறித்து, வலது கையை முறுக்கி தாக்க ஆரம்பித்தார். இதனால் எனது கை விரல்கள் பாதிப்படைந்தன. பிறகு நான் அழுதவாறு ஹொட்டல் அறையில் இருந்து வெளியேறினேன்" என்று போலிசில் புகார் தெரிவித்துள்ளார். மேலும், "என்னை தாக்கிய அமித் மிஸ்ராவை மன்னித்து விட்டேன். அவர் மீதான புகாரை திரும்ப பெறவும் தயாராக இருக்கிறேன். இருப்பினும் அவர் போலிசார் முன்னிலையில் ஆஜராகி என்ன விளக்கம் அளிப்பார் என காத்துக்கொண்டிருக்கிறேன்" என்று வந்தனா கூறியுள்ளார்.