Type Here to Get Search Results !

நடிகர் எஸ்.எஸ்.ஆர் குடும்பத்தை விஷால் பிரித்தார் கிளம்பும் புதிய சர்ச்சை!






பழம் பெரும் நடிகர் எஸ்.எஸ். ஆர் குடும்பத்தை நடிகர் விஷால் பிரித்து விட்டதாக புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது. பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனின் முதல் மனைவி பங்கஜம்மாள். இவர்களுக்கு இளங்கோவன், ராஜேந்திர குமார்,  கலைவாணன், செல்வராஜ் என 4 மகன்களும்  பாக்கியலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.
இவர்கள் தரப்பில் இருந்து ராஜேந்திர குமார் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார், அப்போது அவர் கூறுகையில், '' வரும் 24ம் தேதி எஸ்.எஸ்.ஆரின் முதலாண்டு  நினைவு நிகழ்ச்சியை, அவர் உயிலில் எழுதியுள்ளபடி, அவர் பிறந்த ஊரான  சேடப்பட்டியில் நடத்த இருக்கிறோம். அன்றைய தினமே அங்கு அவருக்கு  மணிமண்டபம் கட்டவும் அடிக்கல் நாட்டுகிறோம். எங்கள் தந்தைக்கு முழு உருவ சிலையும் நிறுவ உள்ளோம். சென்னையில் இருந்து முக்கிய பிரமுகர்கள் சேடப்பட்டிக்கு வந்து பங்கேற்க முடியாது என்ற காரணத்தினால், 12ம் தேதி மாலை, சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் எஸ்.எஸ்.ஆர் முதலாண்டு நினைவு நிகழ்ச்சி நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளோம்.
எனது  மகன்  பங்கஜ்குமார், நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறார். விஷால் தலைமையில் இயங்கும் பாண்டவர் அணிக்கு ஆதரவாக இருக்கிறார்.ஆனால், எனது அப்பா குறித்து நடிகை ராதிகா கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் பேசுகிறார்.  எஸ்.எஸ்.ஆர் குடும்பம் இரண்டாகப் பிரிந்து விட்டதாகச் சொல்கிறார். அதை விஷால் பிரித்து விட்டதாகவும் குற்றம் சாட்டுகிறார். இது தவறானது. எஸ்.எஸ். ஆர் நினைவு விழா நிகழ்ச்சி அனைவருக்கும் பொதுவான நிகழ்ச்சி'' என்றார்.
 எஸ்.எஸ்.ஆரின் மற்றொரு  மனைவி தாமரைச்செல்வியின் மகனான  கண்ணன் சரத்குமார் அணி சார்பில் நடிகர் சங்க தேர்தலில் பொருளாளர் பதவிக்கு போட்டியிடுகிறார். அவர் கூறுகையில், ''  அப்பாவுக்கு வரும் 24ம் தேதிதான் முதலாண்டு  நினைவு. ஆனால், இவர்கள் ஏன் 12ம் தேதி நிகழ்ச்சி நடத்துவதற்கு காரணம் என்ன?  இந்த நிகழ்ச்சியை, எஸ்.எஸ்.ஆரின் குடும்ப நிகழ்ச்சி என்று சொல்ல வேண்டியதுதானே. பாண்டவர் அணி சார்பில் நடக்கும் நிகழ்ச்சி என்று சொல்வதற்கு காரணம் என்ன?  வரும்  11ம் தேதி  சரத்குமார் அணியின் தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. அப்போது நான் பல உண்மைகளை கூறுவேன்'' என்றார்.
லட்சிய நடிகர் என்று அழைக்கப்படும்  எஸ்.எஸ்.ஆர் தென்னிந்திய நடிகர் சங்கத்தை உருவாக்குவதில் பெரும் பங்காற்றியவர். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக 3 முறை தேர்வு செய்யப்பட்டவர். தமிழகத்தில் நடிகராக இருந்து முதல் முறையாக சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டவர் என்ற பெருமையும் எஸ்.எஸ்.ஆருக்கு உண்டு.  கடந்த ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி எஸ்.எஸ். ராஜேந்திரன் மறைந்தார்.




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad