Type Here to Get Search Results !

ஆசனம் பயில கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் - மிகவும் பயனுள்ள தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று

 


ஆசனம்  பயில கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்:

          நரம்புகள் பாதிக்கப்பட்ட நோயுடையவர்கள் டைபாய்டு, மஞ்சள் காமாலை, நெடு நாட்களாக உடலில் ஏதாவது உறுப்புகளில் புண் மற்றும் தோலில் நோயுள்ளவர்கள், இதய நோயுள்ளவர்கள், உடலில் ஏதேனும் ஒரு இடத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் பயிற்சி ஆசிரியரின் ஆலோசனையின்றி எந்த ஆசனமும் செய்தல் கூடாது. குறிப்பாக புத்தகங்களை படித்து அதன்படி செய்து பழகுவதும் கூடாது. 

          முதன் முதலாகப் பயிலும்போது, புத்தகங்களை அல்லது பிரசங்கங்களை மட்டும் ஆதாரமாக்கி ஆசனங்களைத் தாமாகச் செய்வதைத் தவிர்க்கவும். துவக்கத்தில் சில நாட்களாவது, அன்றாடம், சிறிது நேரமாயினும், யோகாசனம் கற்பிப்பவரிடம் பயில்வதே நல்லது. பின்னர், ஒவ்வொரு ஆசனம் செய்வதிலும் தேர்ச்சி பெறுவதற்கு வீட்டிலேயே, அவரவர்களே பழகிவிடலாம்.

          ஆசனம் பயிலவும், பழகவும் காலை நேரமே உகந்தது. இயன்றவரை, மலஜலம் கழித்து, நீராடிய பின் செய்தல் மேன்மை, இரவுப் - பணி (நைட் - ஷிப்ட்) உடையவர்கள், கண்விழிப்பாலும், பணியாலும் ஒய்ந்து போயிருக்கையில், காலைக்குப் பதிலாக மாலை நேரம் செய்யலாம். எனினும், மதியம் சாப்பிட்ட நேரத்துக்கும் மாலை ஆசனம் பழகும் நேரத்துக்கும் 4 மணி நேரமாவது இடைவெளி அவசியம். வயிற்றில் ஜீரணிக்கப்பட வேண்டியது இருக்கையில் ஆசனம் செய்தல் கூடாது. காபி, டீ, திரவம் தானே என்று அவற்றை அருந்திய உடனும் ஆசனம் செய்தல் கூடாது. உண்மையில், திடமான சாப்பாடு, டிபனை விட, காபி, டீ போன்றவற்றையே ஜீரணிக்கப்பட அதிக நேரம் பிடிக்கின்றன.

          காற்றோட்டமுள்ள இடம் நல்லது. கை, கால், மற்றும் உடலை நீட்டித் திருப்பி வளைப்பதைத் தடுக்காத தளர்வான உடையே நல்லது. இறுக்கமான உடையைத் தவிர்க்கவும். ஆசனங்களை, சற்று கனமான விரிப்பின் மேல் செய்வது நல்லது. கை, கால் உடம்பின் அசைவு மிக மிக மெதுவாகவே  இருக்க வேண்டும்.  தினமும் எல்லா ஆசனங்களையும் செய்வதை விட, அவசரமின்றி சிலவற்றை செய்வதே நல்லது.தலை, கழுத்துப்பகுதி, மார்பு, வயிறு, முதுகு, கைகால்கள் அனைத்து உடல் பகுதிகளும் உட்படுத்திய ஆசனமோ அல்லது குறிப்பிட்ட தனி உறுப்புகளுக்கோ பயிற்சி எடுத்துக் கொள்ளும் போது, எந்த ஒரு உடலுறுப்பும் விறைப்பின்றி, தளர்த்திய நிலையிலும் மென்மையாகவும், நிதானமாகவும், மிக இயல்பாகவும் இருக்கும்படி பழக வேண்டும். பரபரப்பில்லாத மனநிலைக்கு மாறிக்கொள்ள வேண்டும்.

          யோக சாஸ்திரம் மற்றும் ஆயுர்வேதாவில் சாத்வீக உணவு உண்பவர்கள் தான் நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழ இயலும் என கூறுகிறது. சாத்வீக உணவில் பழங்கள், பச்சைக் காய்கறிகள், சமைத்த காய்கறி கலவை, இலையுணவு, பால், தயிர், உலர்ந்த பழங்கள், தேன், அரிசி மற்றும் முளை கட்டிய தானிய உணவுகள் அடங்கும். எந்த ஆசனமாயினும், உடலை ஒருநிலைப்படுத்தும் போது, இரண்டு முக்கிய செய்திகளை மறந்திடக் கூடாது.

1. அசைவின்மை:  எவ்வளவு  நொடிகள் அல்லது நிமிடங்கள் உடல் உறுப்புக்கள் அசையாமல் இருக்க முடிகிறதோ, அந்த அளவுக்கு ஒரு ஆசனத்தில் இருந்தால் போதும். மிகச் சிரமப்பட்டு அசைவைக் கட்டுப்படுத்த முயல வேண்டாம். நாள் செல்லச் செல்ல அசைவு குறைந்து நின்று விடும்.

2. சுகம்: ஒவ்வொரு ஆசனத்திலும் நமக்கு சுகமான உணர்வு ஏற்பட வேண்டும். விழித்த நிலையிலேயே, சுகமான உறக்கத்தின் அனுபவத்தை, பயனை அளிப்பதாக ஆசனம் அமைய வேண்டும். ஆசனம் பழகும் முன் செய்யப்படும்; கபாலபாதி போன்ற மூச்சுப்பயிற்சிகள் வேறு; பிராணாயாமம் என்ற சுவாசக்கட்டுப்பாடு வேறு. நம் எண்ணப்படி, காற்றை இழுத்து, நிறுத்தி வெளியிடும் திறனை அளிக்கின்ற பிராணாயாமத்தை ஆசனங்களில், ஓரளவு தேர்ச்சி பெற்ற பின் பழகிவிடுவதே நல்லது.

பெண்களுக்கான சில செய்திகள் : ஆண்களுக்கும் ஆசனம் அவசியம் என்றால், பெண்களுக்கு அவை அதி அவசியம் ஆகும். எனினும், அடிப்படை உடற்பாங்கு வேறுபாட்டுக்கு ஏற்ப இரு பாலரும் ஆசனத்திலும் சில மாறுபாடுகளை மேற்கொள்ள வேண்டும். பின்னால், குழந்தைப் பேறு காலத்தில், உடலை, தரையில் முழுமையாக நீட்டிட முடியாததைக் கருதி, பெண்கள் சிறு வயதிலிருந்தே குறுகிய வணங்கு முறையை பின்பற்றுகின்றனர். 
       இது போலவே பருவமடையும் வரை பெண்களுக்கும் எல்லா ஆசனங்களையும் பழக்கினாலும், பூப்படைந்த பிறகு, மாதவிலக்குக் காலத்தில் சில நாட்களும், கருவுற்ற காலம் மற்றும் பிள்ளை பெற்ற பின்பு சில மாதங்களும் உடல்நிலைக்கேற்ப ஓரளவோ, முழுமையாகவோ ஆசனங்கள் செய்வதைத் தவிர்க்க வேண்டும். மருத்துவ அறிவும்உடைய ஆசனப்பயிற்றுவிப்பாளரிடம், எந்தெந்த ஆசனங்களை, எவ்வளவு நேரம் பழகிடலாம் என்று தெரிந்து கொண்டு செய்வது நல்லது. பெண்ணின் உடலும் பேணப்படும். எதிர்காலப் பிள்ளையின் நிலையும் பேணப்படும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad