Type Here to Get Search Results !

முதியவர்களை கனப்படுத்துங்கள்!!


 விலை மதிக்க முடியாத சொத்தான முதியவர்களை கனப்படுத்துங்கள்





இரண்டாவது பால்யம் எனப்படும் முதுமையை உற்சாகமாக மாற்றுவது குடும்பத்தின் கைகளில் உள்ளது. முதியவர்கள் அனுபவஞானத்தின் விளைச்சல்கள். அவர்களை போற்றிப் பாதுகாப்பது நம் வாழ்வை அர்த்தப்படுத்துவதோடு நம்மை பக்குவமானவர்களாகவும் மாற்றும். முதியோர் எதிர்பார்ப்பது உணர்வுபூர்வமான அன்பு. தனியறை, ஏ.சி, டி.வி போன்ற வசதிகள் மட்டுமல்ல. 

எனவே, அன்பை, பாசத்தை சொற்களால் வெளிப்படுத்துங்கள். காலையில் செல்லும்போது, ‘சென்று வருகிறேன்’ என்று சொல்வதும், மாலையில் வந்ததும் ‘எப்படி இருக்கிறீர்கள்’ எனக் கேட்பதும் அவர்களை சந்தோஷமாகவும் பாதுகாப்பாகவும் உணரவைக்கும். முதியவர்கள் அவர்களின் நண்பர்களுடன் தொடர்புகொள்ளத் தேவையான வசதிகளைச் செய்துதர வேண்டும். நண்பர்களுடன் அளவளாவுவதால் தனிமையில் இருக்கிறோம் என்கிற மன அழுத்தம் குறையும். வீட்டுக்கு யாராவது நண்பர்கள் வந்தால் வீட்டில் உள்ள பெரியவர்களிடம் அறிமுகப்படுத்துங்கள். 




இதனால், அவர்களுக்கு `தனிமைப்படுத்தப் படுகிறோமோ’ என்ற உணர்வு வராமல், பாதுகாப்பான உணர்வைத் தரும். பெரியவர்களை கேலி, கிண்டல் செய்யக்கூடாது. குறிப்பாக, முதுமையினால் அவர்களுக்கு ஏற்படும் இயலாமை, மறதி போன்றவற்றைக் குத்திக்காட்டியோ, பரிகசித்தோ கிண்டலாகவோ பேசக்கூடாது. இதனால் அவர்கள் மனம் புண்படும். முதியோருக்கான டயட், உடற்பயிற்சி, மருத்துவம் போன்றவற்றில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை, கொழுப்பு அளவு, அல்ட்ரா சவுண்ட், கண்பரிசோதனை போன்றவற்றை ஆண்டுக்கு ஒருமுறை செய்துகொள்ள வேண்டும். 

50 வயதைக் கடந்த பெண்கள் தைராய்டு பரிசோதனை, மார்பகப் புற்றுநோய்க்கான மேமோகிராம் பரிசோதனை, கர்பப்பை வாய் நோயைக் கண்டறியும் பேப்ஸ்மியர் பரிசோதனை போன்றவற்றை அவசியம் செய்துகொள்ளா வேண்டும். முதியவர்களை செல்போன், கம்ப்யூட்டர் போன்ற நவீன மின்னணு சாதனங்களைப் பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும். இது அவர்களுக்கு அப்டேட்டட் ஆக உள்ளோம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி, அவர்களின் தன்னம்பிக்கைக்கும் ஆரோக்கியத்துக்கும் உதவும். 




குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்வது, கடைகளுக்குச் சென்றுவருவது போன்ற சின்ன சின்ன வேலைகளை வீட்டு முதியவர்களைச் செய்யவைக்கலாம். இதனால், நாமும் இந்தக் குடும்பத்தின் ஓர் அங்கம். எனக்கும் பொறுப்புகள் இருக்கின்றன என்கிற மனநிலை அவர்களுக்கு ஏற்படும். முதியவர்களிடம் கொஞ்சம் பாக்கெட் மணி கொடுக்கலாம்.




அவர்களுக்கு கோயில்களுக்கோ வேறு எங்கேனும் செல்லும்போதோ செலவு செய்வதற்கும், குழந்தைகளுக்கு சிறுசிறு திண்பண்டங்கள் வாங்கித் தரவும் உதவும். இதனால், குழந்தைகளுக்கும் தாத்தா பாட்டிக்குமான உறவு பலப்படும். முக்கிய முடிவுகள் எடுக்கும்போது, முதியவர்களிடம் தேவையான ஆலோசனை கேட்கலாம். அவர்களின் அனுபவம் நமக்கு உதவியாக இருக்கும். அதே சமயம், முதியவர்கள் இளையோரின் எல்லா விஷயங்களிலும் தலையிட்டு தன்னுடையக் கருத்தைச் சொல்லக் கூடாது. இது தேவையற்ற தொந்தரவாக இளையோரால் பார்க்கப்படும்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad