Type Here to Get Search Results !

மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு-"கல்லூரிகளை ஒதுக்கீடு செய்து மாணவர்களுக்கு ஆணைகள் வழங்கமாட்டோம் என்று ஐகோர்ட்டில், தமிழக அரசு உத்தரவாதம்"




மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வில் கல்லூரிகளை ஒதுக்கீடு செய்து மாணவர்களுக்கு ஆணைகள் வழங்கமாட்டோம் என்று ஐகோர்ட்டில், தமிழக அரசு உத்தரவாதம் அளித்துள்ளது.

சென்னை ஐகோர்ட்டில், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த எம்.கபிலன் உள்பட பலர் தாக்கல் செய்துள்ள மனுக்களில் கூறியிருப்பதாவது:-

பிளஸ்-2 பொதுத் தேர்வின் முடிவுகள் கடந்த மாதம் வெளியானது. இதில், கடந்த கல்வி ஆண்டை ஒப்பிடும்போது, இந்த கல்வி ஆண்டு மாணவர்கள் குறைவான மதிப்பெண்களே பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த 2013-14-ம் கல்வி ஆண்டில் இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்களில் பலர் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று இருந்தனர். உதாரணத்துக்கு இயற்பியல் பாடத்தில் 2,710 பேர் 100 மதிப்பெண் எடுத்து இருந்தனர். ஆனால், நடந்து முடிந்த பொதுத் தேர்வில் 124 மாணவர்கள் மட்டுமே 100 மதிப்பெண் எடுத்துள்ளனர். எனவே, கடந்த கல்வி ஆண்டில் பிளஸ்-2 பொதுத் தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்களை, தற்போது நடைபெறும் மருத்துவ கல்விக்கான கலந்தாய்வில் அனுமதிக்க கூடாது என்று தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்,இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.சத்தியநாராயணன், ‘மருத்துவக் படிப்புக்காக நடைபெறும் கலந்தாய்வில் கடந்த கல்வி ஆண்டில் பிளஸ்-2 தேர்ச்சிப் பெற்ற மாணவர்களின் விண்ணப்பத்தை பரிசீலித்தால், அந்த பரிசீலனை என்பது இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது’ என்று கடந்த 12-ந் தேதி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவில் திருப்தியடையாத பலர் சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு மனுக்கள் எல்லாம் நீதிபதிகள் சத்தீஷ்குமார் அக்னிகோத்ரி, எம்.வேணுகோபால் ஆகியோர் முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘மருத்துவ கலந்தாய்வு நடத்தலாம். ஆனால், மாணவர்களுக்கு கல்லூரிகளை ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பிக்கக் கூடாது என்று ஏன் உத்தரவிடக் கூடாது?’ என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு தமிழக அரசின் கருத்தை கேட்டு தெரிவிப்பதாக அரசு தரப்பு வக்கீல் கூறியதை தொடர்ந்து, வழக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமயாஜி அவர்கள் வாதிட்ட பொழுது ,"மருத்துவ கல்விக்கான கலந்தாய்வில் கலந்து கொள்ள 31,525 விண்ணப்பங்கள் வந்துள்ளது. இதில், 4,679 விண்ணப்பங்கள் கடந்த கல்வி ஆண்டில் பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்களின் விண்ணப்பங்கள். இவர்களில் தோராயமாக 548 மாணவர்களுக்கு, மருத்துவ கல்வியில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த எண்ணிக்கையில் சிறிய மாறுதல்கள் இருக்கலாம்.ஆனால், மருத்துவ படிப்பில் உள்ள மொத்த இடங்களில் 50 சதவீதம் கடந்த கல்வியாண்டில் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு கிடைக்கும் என்று மனுதாரர்கள் கூறுவது சரியானது அல்ல. இதை நிரூபிக்க மனுதாரர்களிடம் எந்த ஆதாரங்களும் இல்லை. மருத்துவ கல்விச் சட்டம், விளக்க குறிப்பேடு ஆகியவற்றின் அடிப்படையில், 17 வயது பூர்த்தியானவர்கள் மருத்துவ கல்விக்கான கலந்தாய்வில் கலந்துக் கொள்ள முடியும். கடந்த கல்வியாண்டின்போது 4,679 விண்ணப்பத்தாரர்களில், 46 பேர் 17 வயது பூர்த்தியாகவில்லை. தற்போது, மருத்துவ கல்வி கலந்தாய்வில் பழைய மாணவர்களை கலந்து கொள்ள அனுமதித்தால், இந்த கல்வியாண்டில் பிளஸ்-2 தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற குற்றச்சாட்டு ஆதாரமற்றது" என்று வாதாடினார்.

 மனுதாரர்கள் சார்பில் வக்கீல் ராகவாச்சாரி கூறும்பொழுது ,"திங்கட்கிழமை வரை கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை வழங்க மாட்டோம் என்று உத்தரவாதம் அளிக்கும்படி அட்வகேட் ஜெனரலுக்கு உத்தரவிட வேண்டும்" என்றார்.

அதற்கு நீதிபதிகள் ,"மருத்துவ கல்வி கலந்தாய்வு தொடர்பான அனைத்து வழக்குகளையும் வருகிற திங்கட்கிழமை (22-ந் தேதி) விசாரணைக்கு எடுத்து கொள்கிறோம். அதுவரை மருத்துவ கல்விக்கான கலந்தாய்வுகளை நடத்தினாலும், மாணவர்களுக்கு கல்லூரிகளை ஒதுக்கீடு செய்து இறுதி ஆணை பிறப்பிக்கக்கூடாது" என்று உத்தரவிட்டார்.

மருத்துவ படிப்புக்கான  கலந்தாய்வில் மாணவர்களுக்கு கல்லூரிகளை ஒதுக்கீடு செய்து இறுதி ஆணை வழங்கப்படாது என்று அட்வகேட் ஜெனரல் உத்தரவாதம் அளித்தார்.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad