Type Here to Get Search Results !

உளுந்தூர்பேட்டை அருகே தொழிலாளி அடித்துக் கொலை மகன் கைது; விழுப்புரம் அருகே பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட மாணவி சாவு கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்! 

உளுந்தூர்பேட்டை அருகே தொழிலாளி அடித்துக் கொலை மகன் கைது
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாண்டூர் கிராமத்தை சேர்ந்தவர் காத்தமுத்து (வயது 62), தொழிலாளி. இவருடைய மகன் ஆறுமுகம்(35). இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை காத்தமுத்துவுக்கும், ஆறுமுகத்துக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த ஆறுமுகம், தனது தந்தை என்றும் பாராமல் காத்தமுத்துவின் நெஞ்சில் கையால் தாக்கி உள்ளார். இதில் மயங்கி விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

கைது

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இதற்கிடையே அப்பகுதி மக்கள், இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, காத்தமுத்துவின் உடலை பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்தனர். தந்தையை, மகனே அடித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பணம் கொடுக்கல்-வாங்கல் தகராறில் தாக்குதல்: படுகாயம் அடைந்த வாலிபர் சாவு 2 பேர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள தொகரப்பள்ளியை சேர்ந்தவர் வீரமணி (வயது 30). இவர் சங்கர் என்பவரிடம் பணம் கடன் வாங்கினார். வீரமணியிடம், சங்கர் கொடுத்த பணத்தை பல முறை திருப்பி கேட்டும் கொடுக்கவில்லை. இது குறித்து சங்கர் தனது நண்பரான ராமராஜனிடம் கூறினார். இந்த நிலையில் கடந்த 8-ந்தேதி ராமராஜன் (30), வீரமணியிடம் சென்று சங்கரின் பணத்தை கொடுத்துவிடும்படி கூறியுள்ளார். அதற்கு வீரமணி, சங்கரே பணத்தை கேட்கவில்லை. நீ எதற்காக வந்து பணம் கேட்கிறாய்? என அவரிடம் தகராறில் ஈடுபட்டார். இதில் ஆத்திரம் அடைந்த வீரமணி, அவரது நண்பர் இளையராஜாவுடன் சேர்ந்து ராமராஜனின் வயிற்றில் எட்டி உதைத்தார்.

வாலிபர் சாவு

இதில் பலத்த காயம் அடைந்த ராமராஜனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி அரசு மருத்துவமனைகளில் அவர் அனு மதிக்கப்பட்டார். ஆனால் வயிற்றில் வலி குறையாததால், ராமராஜனை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் ராமராஜன் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் மத்தூர் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து வீரமணி, இளையராஜா ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் வாலிபர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஊரடங்கு உத்தரவை மீறியதாக நாகை மாவட்டத்தில் 9,807 வழக்குகள் பதிவு போலீஸ் சூப்பிரண்டு தகவல்
ஊரடங்கு உத்தரவை மீறியதாக நாகை மாவட்டத்தில் 9,807 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் தெரிவித்தார்.

வாகனங்கள் பறிமுதல்

இதுகுறித்து நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாகை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் வருகிற 17-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்தநிலையில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக நாகை மாவட்டத்தில் இதுவரை 9 ஆயிரத்து 807 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. மேலும் 5 ஆயிரத்து 983 மோட்டார் சைக்கிள்களும், 85 நான்கு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

10 பேர் மீது வழக்கு

மேலும் தனிப்படையினர் தீவிர மதுவிலக்கு சோதனை நடத்தியதில், இதுவரை 588 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 573 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். குறிப்பாக கொரோனா வைரஸ் குறித்து சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் தளர்வு: நாகையில் பெரும்பாலான கடைகள் திறப்பு டீ கடையில் குவிந்தவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை
ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் தளர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து நாகையில், பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டன. டீ கடைகளில் கூட்டமாக நின்று டீ குடித்தவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

ஊரடங்கில் தளர்வு அறிவிப்பு

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து அனைத்து கடைகள், தொழிற்சாலைகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் மூடப்பட்டன. அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டுமே திறந்திருந்தன. இதனால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கி கிடந்ததால், வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது. இதைத்தொடர்ந்து தொழிற்சாலைகள், கட்டுமான பணி உள்ளிட்ட சிலவற்றிக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. டீ கடை உள்ளிட்ட 34 வகையான கடைகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் 33 சதவித ஊழியர்களுடன் இயங்கலாம் என அறிவிக்கப்பட்டது.

பெரும்பாலான கடைகள் திறப்பு

இதனையடுத்து நேற்று நாகை மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டன. இதனால் சாலைகளில் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. அவ்வப்போது போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

காலை முதலே டீ கடைகளில் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து டீ குடித்து சென்றனர். சில இடங்களில் உள்ள டீ கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் டீ குடித்து கொண்டிருந்தவர்களை போலீசார் எச்சரித்தனர். மேலும் கடைகளில் கூட்டம் போட்டால் சீல் வைத்து விடுவதாகவும் டீ கடை உரிமையாளர்களிடம் போலீசார் எச்சரித்து சென்றனர்.

இதேபோல செல்போன் சர்வீஸ் சென்டர்கள், ஜெராக்ஸ் கடைகள், ஜூஸ் கடைகள், சாலையோர தள்ளுவண்டிக்கடைகள் என அனைத்து கடைகளும் திறந்திருந்தன. இதனால் நாகையில் வழக்கத்தை விட மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திரும்ப ஒப்படைக்க லஞ்சம் கேட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், பெண் ஏட்டு பணியிடை நீக்கம்
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஊரடங்கை மீறி அத்தியாவசிய தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றுபவர்களை போலீசார் கண்காணித்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படுகிறது.

இதற்கிடையில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும்படி காவல்துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்கள் மூலம் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே எருமாடு போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் தலைமை காவலர் சுமா ஆகியோர் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை விடுவிக்க உரியவர்களிடம் ரூ.1,500 லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு புகார் சென்றது. அதன்பேரில் விசாரணை நடத்தியதில், அவர்கள் லஞ்சம் கேட்டது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவர்கள் 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்து, நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவிட்டார்.

அரசு அனுமதித்த கடைகள் திறப்பு: நகைக்கடைகளை அடைக்க கூறிய போலீசாருடன் வியாபாரிகள் வாக்குவாதம் - ஊட்டியில் பரபரப்பு
தமிழகத்தில் கொரோனா அறிகுறி தென்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் 34 வகையான கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்து உள்ளது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் அரசு அனுமதித்த கடைகள் திறக்கப்பட்டன. ஊட்டி ஏ.டி.சி. மற்றும் மத்திய பஸ் நிலையத்தில் திறந்தவெளி சந்தைகள் காலை 7 மணிக்கு திறக்கப்பட்டது. மற்ற தனிக்கடைகள் நேரம், நேரம் செல்ல ஒவ்வொன்றாக திறந்து செயல்பட தொடங்கியது. டீக்கடைகள், பேக்கரிகள், உணவகங்கள், பூ, பழம், காய்கறி, பலசரக்கு கடைகள், ஹார்டுவேர், இஸ்திரி, மின்சாதன பொருட்கள் மற்றும் பழுது நீக்கும் கடைகள், செல்போன் விற்கும் கடைகள், வீட்டு உபயோக பொருட்கள் விற்கும் கடைகள், பெட்டி கடைகள் திறக்கப்பட்டு செயல்பட்டன.

ஊட்டி மத்திய பஸ் நிலையம் முன்பு தள்ளுவண்டி கடைகள் போடப்பட்டு இருந்தது. நகராட்சி மார்க்கெட்டில் நாட்டு மருந்து விற்பனை கடைகள் செயல்பட்டது. ஊட்டி புளுமவுண்டன் சாலையில் அரசு அனுமதித்த சிறிய நகைக்கடைகள், ஜவுளிக்கடைளை வியாபாரிகள் திறந்து இருந்தனர்.

அப்போது அங்கு வந்த போலீசார் கடைகளை அடைக்குமாறு கூறினர். அதற்கு வியாபாரிகள் தமிழக அரசு கடைகளை திறக்க அனுமதி அளித்து உள்ளது என்று நாளிதழ்களில் வந்த செய்திகளை காட்டினர். இதனால் போலீசாருக்கும், வியாபாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. பின்னர் வியாபாரிகள் சங்கத்தினர் வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஊட்டி நகரில் அனுமதிக்கப்பட்ட கடைகள் சில திறந்து இருந்தாலும், கிராமப்புறங்களில் கடைகள் திறக்கப்படவில்லை.

ஊட்டி நகராட்சி மார்க்கெட்டை திறந்தால் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து, சமூக இடைவெளியை கடைபிடிப்பது கேள்விக்குறியாகும். மேலும் அங்கு கடைகள் நெருக்கமாக உள்ளதால், திறப்பது சாத்தியம் இல்லை. அதனால் விலக்கு அளிக்கப்பட்ட ரேஷன் கடைகள், மொத்த விற்பனை கடைகள் செயல்பட்டு வருகின்றன. ஊட்டியில் மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது. ஆனால், வாகன போக்குவரத்து அதிகரித்து உள்ளது. கூடலூரில் அரசு அனுமதித்த கடைகள் திறக்கப்பட்டதால், மக்கள் நடமாட்டம் அதிகரித்ததோடு வாகன போக்குவரத்தும் மிகுந்து காணப்பட்டது.

புதுக்கோட்டைக்கு கொரோனா நிவாரண நிதி:ஒரு மாத சம்பளத்தை வழங்கிய கரூர் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்
கொரோனா எனும் கொடிய வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த பணிகளுக்கு நிவாரணங்களை வழங்க யாராக இருந்தாலும் தாராளமாக நிதி வழங்கலாம், பொருட்கள் வழங்கலாம் என அரசு தரப்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நல் உள்ளம் படைத்தவர்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். தன்னார்வலர்களும் நேரடியாக நிவாரணங்களை வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் புதுக்கோட்டையில் கொரோனா நிவாரண நிதிக்காக கரூர் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி, தனது ஒரு மாத சம்பள தொகை ரூ.80,644-க்கான காசோலையை கலெக்டர் உமா மகேஸ்வரியிடம் நேற்று வழங்கினார்.

இது குறித்து அவர் ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறுகையில், “எனது சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டத்தில் காவேரி நகர் மேல முத்துக்காடு ஆகும். நான் திருமணம் செய்ததும் இந்த ஊர் தான். கொரோனா நிவாரண பணிகளில் என்னால் முடிந்த உதவியை சொந்த மாவட்டத்திற்கு செய்ய திட்டமிட்டேன். மேலும் உதவி செய்யுமாறு எனது மகன்கள் 3 பேரும் என்னை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்த நிதி ஏழை, எளிய மக்களுக்கு ஏதாவது ஒரு வகையில் சென்றடையும்.

நான் தனித்தனியாக ஒவ்வொருவரையும் தேடிப்பிடித்து உதவி செய்ய முடியாது. அதனால் மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கி உள்ளேன். ஏழைகள் பலருக்கு அவ்வப்போது ரூ.1,000, ரூ.2,000 வழங்கி வருகிறேன். செருப்பு தைக்கும் தொழிலாளி ஒருவரிடம் எனது செருப்பை தைக்க இன்று (அதாவது நேற்று) காலை சென்றேன். அவர் ரூ.10 என்னிடம் கேட்டார். அவரது ஏழ்மை நிலையை கண்டு வருத்தமடைந்தேன். அவருக்கு ரூ.50 கொடுத்துவிட்டு வந்தேன்” என்றார்.

70 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல்; 3 பேர் கைது
திருச்சி மாவட்டத்தில் 70 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டு 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

3 பேர் கைது

* துறையூர் மதுவிலக்கு பிரிவு போலீசார் துறையூரிலும், திருவெறும்பூர் மது விலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் வாத்தலை மற்றும் மண்ணச்சநல்லூர், கொள்ளிடம் போலீஸ் எல்லையிலும் நேற்று தீவிர மதுவேட்டை நடத்தப்பட்டது. அப்போது மது மற்றும் சாராயம் விற்றதாக 4 வழக்குகள் பதிவு செய்து 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 10 மதுபாட்டில்கள் மற்றும், 70 லிட்டர் சாராய ஊறலும் பறிமுதல் செய்யப்பட்டது.

*திருவானைக்காவல் களஞ்சியம் தெருவில் 5 லிட்டர் சாராயத்துடன் கோபாலகிருஷ்ணன்(29) என்பவரை திருச்சி மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர்.

* திருச்சி கிராப்பட்டி புதுத்தெருவில் பணம் வைத்து சூதாடிய 4 பேரை எடமலைப்பட்டி புதூர் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.400 பறிமுதல் செய்யப்பட்டது.

ஆர்ப்பாட்டம்

* மணிகண்டம் அருகே கடந்த 8-ந்தேதி கார் மோதி இறந்தவர் விராலிமலை தாலுகா இடையப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஏழுமலை (37) என்பது தெரியவந்தது.

* ஊரடங்கால் வருமானம் இழந்து தவிக்கும் தொழிலாளர்களுக்கு 3 மாதத்துக்கு தலா ரூ.7,500 நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகம் முன்பு ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கடைகளுக்கு ‘சீல்’

* ஊரடங்கு காலத்தில் சமூக இடைவெளியை பின்பற்றாததால் உப்பிலியபுரத்தில் மளிகை கடை, முசிறியில் அனுமதியின்றி திறக்கப்பட்ட 2 முடி திருத்தும் கடைகள், சமூக இடைவெளி இன்றி செயல்பட்ட எலக்ட்ரிக்கல் கடை, டீக்கடை, திருவெறும்பூர் அருகே காட்டூரில் ஒரு மளிகை கடை மற்றும் முடி திருத்தும் கடை ஆகியவற்றை போலீசார் வருவாய்த்துறையினர் பூட்டி ‘சீல்’ வைத்தனர்.

* பொன்மலை ரெயில்வே தொழிற்சாலை ஊழியரான புதுகாலனியை சேர்ந்த சந்திரசேகர் (33) நேற்று காலை பொன்மலைப்பட்டி வ. உ. சி மைதானம் அருகே வந்த போது மர்ம நபர்களால் தாக்கப்பட்டார். இதுபற்றி தகவல் அறிந்த பொன்மலை போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக ரெயில்வே மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

8 அடி நீள பாம்பு மீட்பு

* முசிறி அருகே தும்பலம் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி விஜயாவை(40) சாதி பெயரை கூறி திட்டியதாக அப்பகுதியை சேர்ந்த நடராஜன் (62), அவருடைய மகன் சண்முகசுந்தரம்(40) ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த முசிறி போலீசார், நடராஜனை கைது செய்தனர். சண்முகசுந்தரத்தை போலீசார் தேடி வருகின்றனர்.

* திருவெறும்பூர் மலைக்கோவில் இந்திரா நகரில் முத்தையன் என்பவரின் வீட்டிற்குள் புகுந்த 8 அடி நீளமுள்ள சாரை பாம்பை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக பிடித்து வன பகுதியில் விட்டனர்.

செய்யாறு அருகே சாலையின் குறுக்கே மரம், கற்களை வைத்து மறிப்பு - போலீசார் அகற்றினர்
செய்யாறு தாலுகா கொருக்கை, முக்கூர், நாவல், வாழ்குடை உள்ளிட்ட பல கிராமங்களில் இருந்து சிப்காட் தொழிற்பேட்டையில் பணிபுரியும் தொழிலாளர்களை ஏற்றி செல்லும் பஸ்கள், செய்யாற்றைவென்றான் கிராமத்தின் வழியாக மாங்கால் கூட்ரோட்டில் இயங்கும் கம்பெனிக்கு செல்வது வழக்கம்.

தற்போது கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிற நிலையில் தொழிற்சாலைக்கு செல்லும் பணியாளர்கள் மூலம் நோய்தொற்று ஏற்படும் அச்சத்தில் தொழிலாளர்கள் பஸ்சில் அழைத்துசெல்ல கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அதன்வெளிபாடாக செய்யாற்றை வென்றான் கிராமத்தில் இரவோடு இரவாக சாலையின் குறுக்கே காய்ந்த மரத்தினையும், அங்காங்கே கற்களை வைத்தும் பஸ்களை செல்லவிடாமல் தடுத்தனர். தகவல் அறிந்தவுடன் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஞானசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலையில் இருந்த மரம் மற்றும் கற்களை அகற்றி போக்குவரத்தினை சரிசெய்தனர். மேலும் சிப்காட் பஸ்களை போலீசார் பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.

பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததால் கொன்றோம் - வாலிபர் கொலைவழக்கில் கைதான டிரைவர் வாக்குமூலம்
காட்பாடி வஞ்சூரைச் சேர்ந்தவர் சுனில் (வயது 28). இவர் மீது ஒரு கொலை முயற்சி வழக்கு உள்பட சிறுசிறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் விருதம்பட்டு பாலாற்றங்கரைக்கு அருகே சுனில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து விருதம்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்

விசாரணையில் அப்பகுதியில் வசித்த கோகிலா என்ற பெண்ணுக்கும், சுனிலுக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது. இந்த நிலையில் கோகிலாவும் அவரது தந்தையும் தலைமறைவாகி இருந்தனர். கோகிலாவின் செல்போன் எண்ணை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் அவர் கடைசியாக ஆற்காடு பகுதியை சேர்ந்த தனியார் ஆம்புலன்ஸ் டிரைவரான மணிகண்டன் (28) என்பவருடன் பேசியிருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து மணிகண்டனை நேற்று இரவு தேடிப்பிடித்த போலீசார் அவருடன் இருந்த மற்றொரு ஆம்புலன்ஸ் டிரைவரான காங்கேயநல்லூரைச் சேர்ந்த சதீஷ்குமார் (27) என்பவரையும் பிடித்தனர். பின்னர் அவர்களிடம் போலீசார் விசாரித்தனர்.

மணிகண்டன் போலீசாரிடம் கொடுத்துள்ள வாக்குமூலம் பின்வருமாறு:-

எனது சொந்த ஊர் மன்னார்குடி. எனது நண்பர் இப்ராகிம் மனைவிதான் கோகிலா. திருமணத்துக்குப் பிறகு விருதம்பட்டில் உள்ள மனைவியின் வீட்டிலேயே இப்ராகிம் தங்கிவிட்டார். ஒரு மகனும் ஒரு மகளும் அவர்களுக்கு உள்ளனர். நானும் வேலை தேடி மன்னார்குடியிலிருந்து வேலூர் வந்துவிட்டேன். வெளியில் தங்க வசதியில்லாத காரணத்தினால் இப்ராகிம் மாமியார் வீட்டிலேயே நானும் தங்கினேன்.

இந்தநிலையில், பலருடன் கோகிலா நெருக்கமாக பழகத் தொடங்கினார். அப்படித்தான் கொலை செய்யப்பட்ட சுனிலுடனும் கோகிலாவுக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு தொடர்பு ஏற்பட்டது. மனைவியின் தவறான நடத்தையால் மன உளைச்சலுக்கு ஆளான இப்ராகிம், சுனிலை கண்டித்தார். அதனால்ஆத்திரமடைந்த சுனில், இப்ராகிமை அடித்து உதைத்தான். இதனால் மனைவியுடன் வாழப் பிடிக்காமல், இப்ராகிம் 2 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு போய் விட்டார்.

இப்ராகிம் சென்ற பிறகு நானும் கோகிலாவின் வீட்டிலிருந்து வெளியேறி ஆற்காடு பகுதியில் தங்கி ஆம்புலன்ஸ் ஓட்டி வந்தேன். கோகிலாவுடன் எனக்கும் தொடர்பு ஏற்பட்டது. சுனிலிடமிருந்து கோகிலா கொஞ்சம் கொஞ்சமாக விலகத் தொடங்கினாள். ஆனாலும், சுனில் தினமும் மதுபோதையில் கோகிலாவின் வீட்டுக்கு வந்து தனிமையில் இருக்கலாம் என்று அழைத்தான். விருப்பத்துக்கு இடம் கொடுக்காத கோகிலாவை அடித்து உதைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தான். மூன்று நாட்களுக்கு முன்பு கோகிலாவை சரமாரியாக சுனில் தாக்கினான்.

இதுபற்றி என்னிடம் கூறி கோகிலா கதறி அழுதாள். இதையடுத்து, சுனிலை தீர்த்துக்கட்ட திட்டம் போட்டோம். கோகிலா மற்றும் அவளின் அப்பா முத்து, என்னுடைய நண்பனான சதீஷ்குமார் ஆகிய 3 பேரும் கொலைக்கு உடந்தையாக இருந்தனர். நேற்று முன்தினம் கோகிலாவின் வீட்டுக்குள் நானும் சதீஷ்குமாரும் பதுங்கியிருந்தோம். நாங்கள் நினைத்ததுபோலவே சுனில் மதுபோதையில் அங்கு வந்தான். அவனை வீட்டுக்குள் வைத்து ஆயுதங்களால் தாக்கி கொலை செய்தோம். நள்ளிரவு ஆனபிறகு உடலை வீட்டிலிருந்து தூக்கிச் சென்று வெளியில் வீசிவிட்டு தப்பிச் சென்றோம். கோகிலாவும் அவளின் அப்பாவும் எங்கு பதுங்கியுள்ளனர் என்பது எங்களுக்குத் தெரியாது. இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

மணிகண்டனையும், சதீஷ்குமாரையும் போலீசார் கைதுசெய்தனர். மேலும் இந்த கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள கோகிலாவையும் அவரின் தந்தையையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

விழுப்புரம் அருகே பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட மாணவி சாவு கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபால் மகள் ஜெயஸ்ரீ (வயது 15). இவர் அதே கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவரின் பெற்றோர் நேற்று முன்தினம் வெளியூருக்கு சென்றிருந்தனர். வீட்டில் ஜெயஸ்ரீ மட்டும் தனியாக இருந்தார்.

அந்த சமயத்தில் அதே கிராமத்தை சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலரின் கணவரான முருகன்(57), அவரது உறவினரான அ.தி.மு.க. கிளை செயலாளர் யாசகன் என்கிற கலியபெருமாள் (52) ஆகியோர் ஜெயபால் வீட்டிற்கு திடீரென சென்று அங்கிருந்த மாணவி ஜெயஸ்ரீயை கயிற்றால் கட்டிப்போட்டு பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றதாக தெரிகிறது. இதில் பலத்த தீக்காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ஜெயஸ்ரீயை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

முன்விரோதம்

இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஜெயபாலின் தம்பி குமார், கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு முருகனின் தங்கையான சவுந்தரவள்ளியின் கையை பிடித்து இழுத்துள்ளார். அதிலிருந்து 2 குடும்பத்திற்கும் முன்விரோதம் காரணமாக அடிக்கடி சிறு, சிறு தகராறு ஏற்பட்டு வந்ததும், அதன் காரணமாகவே சம்பவத்தன்று மாணவி ஜெயஸ்ரீயை முருகனும், சவுந்தரவள்ளியின் கணவரான கலியபெருமாளும் சேர்ந்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்திருப்பது போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக முருகன், கலியபெருமாள் ஆகியோர் மீது கொலை முயற்சி பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.

சிகிச்சை பலனின்றி சாவு

இந்நிலையில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த ஜெயஸ்ரீ நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து இவ்வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா? என்று பல்வேறு கோணங்களிலும் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் பெரும் பதற்றமான சூழ்நிலை நீடித்து வருவதால் அங்கு ஏதேனும் பிரச்சினை ஏற்படாமல் இருக்க போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

விழுப்புரம் நகரில் ஊரடங்கை மீறி திறக்கப்பட்ட கடைகள் போலீசார் ரோந்து சென்று மூடினர்
விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றினால் இதுவரை 298 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2 பேர் ஏற்கனவே சிகிச்சை பலனின்றி இறந்தனர். 48 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 248 பேர் விழுப்புரம் கொரோனா சிறப்பு மருத்துவமனை, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, விழுப்புரம் மனிதவள சுகாதார மேம்பாட்டு நிறுவன வளாகத்தில் உள்ள தற்காலிக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்டத்தில் விழுப்புரம், திண்டிவனம் ஆகிய நகராட்சி பகுதிகளிலும் மற்றும் விக்கிரவாண்டி, செஞ்சி ஆகிய பேரூராட்சி பகுதிகளிலும் கொரோனா நோயால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதால் அந்த பகுதிகளில் எந்தவொரு தளர்வும் செய்யப்படாமல் இன்னும் ஊரடங்கு தொடர்ந்து நீடித்து வருகிறது. அதுபோல் சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து வந்தவர்களில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் 93 கிராமங்கள் கண்டறியப்பட்டு அப்பகுதிகளிலும் எந்த தளர்வும் செய்யப்படவில்லை. இப்பகுதிகளில் காய்கறி கடைகள், மளிகை கடைகள், மருந்து கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் மட்டுமே இயங்கி வருகிறது.

கடைகள் திறப்பு

இந்நிலையில் மே 11-ந் தேதி முதல் அரசு உத்தரவின்படி 34 வகையான கடைகள் திறக்கப்படலாம் என்று அறிவிப்பு வெளியானது. ஆனால் விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை எந்தெந்த பகுதிகளில் 34 வகையான கடைகள் இயங்கலாம், எந்தெந்த பகுதிகளில் கடைகள் இயங்கக்கூடாது என்று மாவட்ட நிர்வாகம் முறையான அறிவிப்பை வெளியிடாததால் பொதுமக்கள் பெரிதும் குழப்பத்திற்கு ஆளாகினர்.

குறிப்பாக விழுப்புரம் நகர பகுதிகளில் நேற்று காலை முதல் அரசு அறிவிப்பின்படி 34 வகையான கடைகளை திறக்க அந்தந்த கடைகளின் உரிமையாளர்கள் வந்தனர். ஒரு சிலர், டீக்கடைகள், பழக்கடைகள், பேக்கரி கடைகள், அடகு கடைகள், துணிக்கடைகள், வளையல் கடைகளை திறந்து வியாபாரத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களும் ஏராளமானோர், கடைவீதிகளுக்கு வரத்தொடங்கினர். இதனால் விழுப்புரம் நகரத்தில் எப்போதும்போல் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. சாலைகளில் இருசக்கர வாகன போக்குவரத்து அதிகமாக காணப்பட்டது.

போலீசாரின் நடவடிக்கையால் மூடல்

உடனே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையிலான போலீசார், விழுப்புரம் நகரில் உள்ள அனைத்து பகுதிகளிலும் ரோந்து சென்று காய்கறி கடைகள், மளிகை கடைகள், மருந்து கடைகளை தவிர மற்ற கடைகளை மூடும்படி அறிவுறுத்தினர்.

மேலும் ஊரடங்கு தளர்வுகள் எதுவும் செய்யப்படவில்லை, ஆகவே கடைகளை திறக்க வேண்டாம் என்று ஒலிபெருக்கி மூலம் வியாபாரிகளுக்கும் மற்றும் பொதுமக்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாட்களில் மட்டும் வண்ண அட்டையுடன் வெளியே வந்து அத்தியாவசிய பொருட்களை பெற்றுச்செல்லுமாறும் அறிவுறுத்தினர். அதன்படி ஊரடங்கை மீறி திறக்கப்பட்ட கடைகளை அதன் உரிமையாளர்கள் மீண்டும் பூட்டிவிட்டு சென்றனர். அதன் பிறகு பொதுமக்களின் நடமாட்டமும் ஓரளவு குறைந்தது. இதேபோல் ஊரடங்கு தளர்வு செய்யப்படாத திண்டிவனம், விக்கிரவாண்டி, செஞ்சி பகுதிகளிலும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகளை தவிர மற்ற கடைகள் திறக்கப்பட்டன. உடனே போலீசார் அங்கு சென்று, இன்னும் ஊரடங்கு தளர்வு செய்யப்படவில்லை என்பதால் கடைகளை மூடும்படி அறிவுறுத்தியதன்பேரில் கடைகள் அடைக்கப்பட்டன.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad