Type Here to Get Search Results !




ஜியாமென்: பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளுக்கு பிரிக்ஸ் நாடுகள் முதல் முறையாக கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. பாகிஸ்தான் தனது சொந்த மண்ணில் உள்ள தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராகவும், அவர்களின் நிதி ஆதாரத்தை தடுக்கவும் மாநாட்டு அறிக்கையில் வலியுறுத்தப்பட்டு உள்ளது. இது இந்தியாவின் தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்க நாடுகளை உறுப்பினராக கொண்ட ‘பிரிக்ஸ்’ அமைப்பின் 9வது உச்சி மாநாடு, சீனாவின் ஜியாமென் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. மாநாட்டின் முக்கிய நிகழ்வான முழு அமர்வு கூட்டம் நேற்று நடந்தது. இதில், பிரதமர் மோடி உட்பட 5 நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கை முக்கிய இடம் பிடித்தது. இந்தியாவின் நிலைபாடு குறித்து பிரதமர் மோடி பேசுகையில், ‘‘ஒட்டுமொத்த சர்வதேச சமூகமும் இணைந்து தீவிரவாதம் என்ற அவலத்தை எதிர்த்து போரிட வேண்டும்.

இந்த அவலத்தை எதிர்கொள்வதில் இரட்டை நிலைப்பாடு கொண்டிருக்க முடியாது என்பதை உணர்வது அதிகரித்து வருவதாகவே நம்புகிறேன். நல்ல தீவிரவாதம், கெட்ட தீவிரவாதம் என பிரிக்க முடியாது’’ என்றார். இதையடுத்து, மாநாட்டு அறிக்கை வெளியிடப்பட்டது. இதில், முதல் முறையாக பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புகளான லஷ்கர் இ தய்பா, ஜெய்ஷ் இ முகமது, ஹக்கானி, தலிபான் போன்றவைகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாநாட்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பிரிக்ஸ் நாடுகள் உட்பட உலக முழுவதும் நடத்தப்படும் தீவிரவாத தாக்குதல் கடும் கண்டனத்திற்குரியது. தீவிரவாதமும் அதன் வெளிப்பாடும் எந்த வகையில் இருந்தாலும் அதை நிகழ்த்துபவர் யாராக இருந்தாலும் கண்டனத்துக்கு உரியவர்களே. தீவிரவாதத்தை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.

இந்த விவகாரத்தில், பிராந்தியத்தின் பாதுகாப்பு சூழல் மற்றும் தீவிரவாதத்துக்கு காரணமான லஷ்கர் இ தய்பா, ஜெய்ஷ் இ முகமது, தலிபான், ஹிசாப் உத் தரிர் மற்றும் ஐஎஸ்ஐஎஸ், அல்கய்தா போன்ற அமைப்புகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். எனவே, அனைத்து நாடுகளும் தங்கள் சொந்த மண்ணில் உள்ள தீவிரவாத அமைப்புகளை ஒடுக்க வேண்டும். அவர்களுக்கு நிதி உதவி கிடைப்பதை தடுக்க வேண்டும்.
தீவிரவாதத்திற்கு யார் ஆதரவு அளிக்கின்றனரோ அவர்களே தீவிரவாத நாச வேலைகளுக்கும் பொறுப்பாவார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தீவிரவாதத்தை ஒடுக்குவதில், சர்வதேச சமூகம் பரந்த ஒத்துழைப்பை வழங்க வேண்டுமெனவும், இவ்விவகாரத்தில் முக்கிய மையமாக கருதப்படும் ஐநாவுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் பிரிக்ஸ் அமைப்பு வலியுறுத்துகிறது. ஐநாவின் சர்வதேச தீவிரவாத ஒழிப்பு மாநாட்டை விரைந்து நடத்திட வேண்டுமெனவும் பிரிக்ஸ் நாடுகள் வலியுறுத்துகின்றன. இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 தீவிரவாதத்துக்கு பாகிஸ்தான் ஆதரவு அளிப்பதை பிரிக்ஸ் மாநாட்டில் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக தற்போது பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக பிரிக்ஸ் நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதே போல, தொடர்ச்சியாக அணு ஆயுத சோதனை நடத்தி வரும் வடகொரியாவுக்கும் மாநாட்டு அறிக்கையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக அறிக்கையில், ‘‘கொரிய தீபகற்பத்தில் மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியான அணு ஆயுத சோதனையால் பதற்றம் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. இந்த விஷயத்தில் நேரடி பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே அமைதியை நிலைநாட்ட முடியும் என்பதை பிரிக்ஸ் அமைப்பு வலியுறுத்துகிறது’’ என கூறப்பட்டுள்ளது.

வரி ஏய்ப்பை தடுக்க தகவல் பரிமாற்றம்

வரி ஏய்ப்பை தடுக்க பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் தகவல்களை பரிமாறிக் கொள்வது என முடிவு செய்துள்ளன.
பிரிக்ஸ் அமைப்பின் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு திட்டங்களுக்கு ரூ.500 கோடியும், புதிய மேம்பாட்டு வங்கியின் மற்ற திட்டங்களுக்கு ரூ.26 கோடியும் சீனா நிதி வழங்குவதாக அந்நாட்டு அதிபர் ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

சீன அதிபருடன் மோடி இன்று சந்திப்பு

பிரிக்ஸ் மாநாடு இன்றுடன் நிறைவடைவதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங்கை இன்று சந்தித்து பேச உள்ளார்.  சிக்கிம் மாநிலத்தின் டோக்லாமில் இரு நாடுகளுக்கு இடையே 2 மாதங்களுக்கு மேல் நீடித்த எல்லை பிரச்னை, இந்த மாநாட்டையொட்டி, சமீபத்தில் சுமூகமாக தீர்க்கப்பட்டது. அங்கிருந்து இருநாட்டு படைகளும் வாபஸ் பெறப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி-ஜின்பிங் முதல் முறையாக சந்திக்கின்றனர். எனவே, இந்த பேச்சுவார்த்தையில் எல்லை பிரச்னை முக்கிய இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, நேற்று ரஷ்ய அதிபர் புடின், பிரேசில் அதிபர் மைக்கேல் தேமெரை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். புடினுடனான பேச்சில், ஆப்கானிஸ்தான் நாட்டின் பாதுகாப்பு சூழல் குறித்து இருநாட்டு தலைவர்களும் விவாதித்தாக வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித்தொடர்பாக ரவீஷ் குமார் கூறி உள்ளார்.

‘வளர்ச்சிக்கான உந்துதல்’

மாநாட்டில் பிரதமர் மோடி நேற்று பேசுகையில், ‘‘வர்த்தகம் மற்றும் பொருளாதாரமும் பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பின் அடித்தளமாகும். உறுதியற்ற தன்மையை நோக்கி நகரும் உலகில் வலிமையான நிலைத்தன்மையை உருவாக்க பிரிக்ஸ் நாடுகள் பங்களிப்பு செய்கின்றன. புதிய கண்டுபிடிப்புகள், டிஜிட்டல் பொருளாதாரம் ஆகியவற்றில் பிரிக்ஸ் நாடுகளின் வலுவான கூட்டணி, வளர்ச்சி, வெளிப்படைத்தன்மை, வளர்ச்சியின் இலக்கை எட்டுவதற்கான உந்துதலாக அமையும். வறுமை ஒழிப்பு, சுகாதாரம்,  திறமை, உணவு பாதுகாப்பு, பாலின சமத்துவம், கல்வி ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்காக சிறந்த திட்ட வழிமுறைகள் தேவை” என்றார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad