பத்திரிகைகளில் விளம்பரம் செய்தும் எம்எல்ஏக்களுக்கு வாடகைக்கு வீடு தர யாரும் விரும்பவில்லை: அதிகாரி தகவல்
மும்பை: மும்பையில் எம்.எல்.ஏ.க்களுக்கு வாடகைக்கு வீடு தர யாரும் விரும்பவில்லை என்று தெரிய வந்துள்ளது. இதனால், எம்எல்ஏ ஹாஸ்டலை புதுப்பித்துக்கட்டும் திட்டத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தென் மும்பை, நரிமன் பாயின்ட் பகுதியில் எம்எல்ஏ.க்கள் தங்கும் ‘மனோரா ஹாஸ்டல்’ உள்ளது. சிதலமடைந்து இருக்கும் இந்த எம்.எல்.ஏ. ஹாஸ்டல் கட்டிடத்தை இடித்து விட்டு அந்த இடத்தில் புதிய கட்டிடம் கட்ட மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்கிடையே இந்த கட்டிடத்தில் இருந்து காலி செய்த எம்.எல்.ஏ.க்கள் வாடகைக்கு தங்க வீடு கேட்டு மாநில அரசு சார்பில் பத்திரிகைகளில் விளம்பரம் செய்யப்பட்டது.
ஆனால் எம்.எல்.ஏ.க்களுக்கு வீடு தர யாரும் விரும்பவில்லை என்று தெரிய வந்துள்ளது. முதன்மை செயலாளர் ஆனந்த் கல்சே இது குறித்து செய்தியாளர்களிடம் கூறும்போது, “தெற்கு மற்றும் மத்திய மும்பை பகுதிகளில் எம்.எல்.ஏ.க்கள் வாடக்கைக்கு தங்க 175 வீடுகள் கேட்டு பல பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்தோம். ஆனால் அதற்கு எந்த பதிலும் இல்லை. ஹாஸ்டல் கட்டிடத்தை காலி செய்யும்படி ஏற்கனவே எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது” என்றார். தற்போதுள்ள எம்.எல்.ஏ. ஹாஸ்டலை இடித்து விட்டு அந்த இடத்தில் ரூ.600 கோடி செலவில் 1000 அறைகளுடன் புதிய கட்டிடம் கட்டுவதுதான் அரசின் புதிய திட்டம். நேஷனல் பில்டிங் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியுடன் ஆலோசித்து புதிய கட்டிடம் கட்டப்படும். அதில் வாகன பார்க்கிங் செய்ய மட்டும் 6 மாடிகள் இருக்கும்.