Type Here to Get Search Results !

தேர்தல் கமிஷன் ஏற்பாடு: டெல்லியில் நாளை அனைத்துக்கட்சி கூட்டம்

மின்னணு ஓட்டு எந்திர சர்ச்சை குறித்து விவாதிப்பதற்காக டெல்லியில் நாளை (வெள்ளிக்கிழமை) அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு தேர்தல் கமிஷன் அழைப்பு விடுத்துள்ளது.

புதுடெல்லி,


நமது நாட்டில் நடக்கிற தேர்தல்களில் மின்னணு ஓட்டு எந்திரங்கள் பயன்படுத்தப்படுவது பெருத்த சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. மின்னணு ஓட்டு எந்திரங்கள் நம்பகத்தன்மை இல்லாதவை, தில்லுமுல்லு செய்ய ஏற்றவை, தேர்தல் முடிவுகளையே மாற்றி அமைக்க வாய்ப்பு உள்ளவை என்று பல்வேறு கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இதன் காரணமாக மின்னணு ஓட்டு எந்திரங்களை ஒழித்துக்கட்டிவிட்டு மீண்டும் பழைய வாக்கு சீட்டு முறைக்கு மாற வேண்டும் என்று அவை வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பாக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் பல்வேறு கட்சி தலைவர்கள் சந்தித்து சமீபத்தில் மனு அளித்தனர்.

ஆனால் மின்னணு ஓட்டு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியும் என்று கூறப்படுவதை தேர்தல் கமிஷன் திட்டவட்டமாக மறுத்து வருகிறது.

அனைத்துக் கட்சி கூட்டம்

இது பற்றியும், தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்தும் அனைத்துக் கட்சிகளிடமும் விவாதிக்க ஏற்ற வகையில் தேர்தல் கமிஷன் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டம் டெல்லியில் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ள அம்சங்கள் பற்றி தேர்தல் கமிஷன் ‘அஜெண்டா’ (நிகழ்ச்சி நிரல்) வெளியிட்டுள்ளது. அதில் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விஷயங்கள்:-

* மின்னணு ஓட்டு எந்திரங்கள்.

* ஒருவர் குறிப்பிட்ட வேட்பாளருக்கு ஓட்டுப்பதிவு செய்ததை உறுதிப்படுத்தி ஒப்புகை சீட்டு வழங்கும் எந்திரங்கள்.

* தேர்தலில் லஞ்சம் கொடுப்பதை, வாங்குவதை பிடிவாரண்டு இன்றி கைது செய்யும் குற்றமாக அறிவித்தல்.

* தேர்தலில் லஞ்சம் தந்ததாக குற்றச்சாட்டு பதிவு செய்தாலே, தகுதி நீக்கம் செய்தல்.

* ஒப்புகை சீட்டு வழங்கும் எந்திர பதிவுகளை மறு எண்ணிக்கை செய்வதற்கான விதிமுறைகள்.

55 கட்சிகளுக்கு அழைப்பு

தேர்தல் கமிஷன் நடத்துகிற அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பா.ஜனதா, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு ஆகிய 7 தேசிய கட்சிகளுக்கும், அங்கீகரிக்கப்பட்ட 48 மாநில கட்சிகளுக்கும் அழைப்புகள் அனுப்பப்பட்டுள்ளன.

ஒவ்வொரு கட்சியும் தலா 3 மூத்த பிரதிநிதிகளை அனுப்பி வைக்கலாம். விரும்பினால் அவர்களில் ஒருவர் தொழில்நுட்ப வல்லுனராக இருக்கலாம்.

அ.தி.மு.க. அணிகள்

தமிழ்நாட்டில் அ.தி.மு.க. பிளவுபட்டுள்ள நிலையில், அதன் இரு அணிகளுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

அ.தி.மு.க. (அம்மா அணி) சார்பில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரையும், வேணுகோபால் எம்.பி.யும் பங்கேற்பதாகவும், அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா அணி) தரப்பில், டாக்டர் மைத்ரேயன் எம்.பி.யும், மனோஜ் பாண்டியனும் கலந்துகொள்வதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

ஆம் ஆத்மி போராட்டம்

இதற்கிடையே டெல்லி சட்டசபையில் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ., சவுரவ் பரத்வாஜ் நேற்று முன்தினம் மாதிரி மின்னணு ஓட்டு எந்திரம் ஒன்றைக் கொண்டு, அதில் தில்லுமுல்லு செய்ய முடியும் என்று செய்முறை விளக்கம் அளித்ததை தேர்தல் கமிஷன் நிராகரித்துவிட்டது.

ஆனால் இந்த பிரச்சினையை ஆம் ஆத்மி கட்சி விடுவதாக இல்லை. இன்று (வியாழக்கிழமை), தேர்தல் கமிஷன் அலுவலகம் முன்பாக ஆம் ஆத்மி கட்சி போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது. இதில் அந்த கட்சியின் மூத்த தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் தேர்தல் கமிஷன் நடத்துகிற அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளப்போவதாகவும், அதில் எடுக்கப்படுகிற முடிவுகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி தீர்மானிப்போம் எனவும் டெல்லி ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் கோபால் ராய், நிருபர்களிடம் தெரிவித்தார். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad