தமிழகத்தில் ஏரிகள் சீரமைப்பு குடிமராமத்து பணிகளுக்காக தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.500 கோடி நபார்டு வங்கி வழங்க திட்டம்

தமிழகத்தில் உள்ள ஏரிகள் சீரமைப்பு மற்றும் குடிமராமத்து பணிகளுக்காக தமிழக அரசுக்கு, நபார்டு வங்கி ஆண்டுக்கு ரூ.500 கோடி நிதி வழங்க இருக்கிறது.

சென்னை,


இதுகுறித்து, தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் (நபார்டு) தலைமைப் பொதுமேலாளர் எஸ்.நாகூர் அலி ஜின்னா சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:–

விவசாயத்திற்கு தனிகவனம்

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி.) விவசாயத்தின் பங்களிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அந்தவகையில் தற்போது 7 சதவீதமாக உள்ள நிலையில், மக்கள் தொகையில் 48 சதவீதம் பேர் விவசாயத்தை நம்பி வாழ்கின்றனர் என்பது கவலை அளிப்பதாக உள்ளது.

விவசாயிகளுக்கு தங்கள் விளைபொருட்களுக்கான லாபகரமான விலை கிடைப்பதில்லை. விவசாய பொருட்களின் விற்பனை விலையில் மிகக் குறைவாக 35 சதவீதம் மட்டுமே விவசாயிகளுக்கு கிடைக்கிறது.

ரூ.500 கோடி நிதி

அதிகரிக்கும் வெப்பநிலை, மழை பொழிவில் ஏற்றத்தாழ்வுகள் போன்ற காலநிலை மாறுபாடுகள் காரணமாக விவசாய உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படுகிறது. இப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் ‘ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி’ மூலம் தமிழக அரசுக்கு உதவ நபார்டு வங்கி முன்வந்துள்ளது. இதன்படி, ஏரிகளை புனரமைக்கவும், குடிமராமத்துப் பணிகளுக்காகவும் ஆண்டுக்கு ரூ.500 கோடி நிதி உதவி வழங்க இருக்கிறது.

தமிழக அரசுடன் இணைந்து விவசாய பொருட்களின் விற்பனை கூடங்களை நவீனப்படுத்தவும், மின்னணு வர்த்தகத்தை அறிமுகப்படுத்தவும் பிற நவீன உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும், அவற்றை தேசிய விவசாய சந்தையுடன் இணைப்பதற்கும் நபார்டு வங்கி செயல்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகளுக்கு அவர்களின் விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்கும். விவசாயிகளையே உரிமையாளர்களாக கொண்ட விவசாயிகள் உற்பத்தி நிறுவனங்களை உருவாக்க நபார்டு வங்கி உதவுகிறது. தமிழகத்தில் தற்போது 170 விவசாயிகள் உற்பத்தி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இதில் 35 நிறுவனங்கள் முன்மாதிரியாக செயல்படுகின்றன.

‘நீரா’வுக்கும் கடனுதவி

கடந்த 2016–2017–ம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு ரூ.13 ஆயிரத்து 792 கோடி நிதி உதவி அளிக்கப்பட்டது. இதில், ரூ.4 ஆயிரத்து 451 கோடி வங்கிகளுக்கு வழங்கப்பட்ட நீண்டகால மறு நிதியாகும். ரூ.3 ஆயிரத்து 723 கோடி கூட்டுறவு மற்றும் வட்டார ஊரக வங்கிகளுக்கான உற்பத்தி கடனுதவியாகும். உள்கட்டமைப்பு வசதி மேம்பாட்டுக்காக மாநில அரசுக்கு ரூ.1,850 கோடி வழங்கப்பட்டுள்ளது. வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கடன் தொகையை கூட்டுறவு வங்கிகள் மறுசீரமைப்பு செய்தால், அத்தொகையை கூட்டுறவு வங்கிகளுக்கு வழங்க நபார்டு வங்கி தயாராக உள்ளது.

தென்னை மரத்தில் இருந்து ‘நீரா’ எடுக்கும் விவசாயிகளுக்கும் கடனுதவி அளிப்பது குறித்தும் பரிசீலித்து வருகிறோம். இ–டிரேடிங் என்று அழைக்கப்படும் மின்னணு வர்த்தகம் முறையை வரும் ஜூன் மாதம் முதல் முழுமையாக நடைமுறைப்படுத்த திட்டமிட்டு உள்ளோம்.  இவ்வாறு நாகூர் அலி ஜின்னா கூறினார்.

அப்போது பொதுமேலாளர்கள் ஏ.கே.பாடி, எம்.கெஸ், உதவி பொதுமேலாளர்கள் எச்.ஏ.பி.ராவ், எஸ்.நாராயணன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url