Type Here to Get Search Results !

சாப்பிட்டதுக்கு அப்புறம் இந்த விஷயங்களை செய்யவே கூடாது !!!!!!!!!



ஊட்டச்சத்து நிறைந்த உணவாகவே இருந்தாலும் அவை உடலுக்குள் எடுத்துகொள்ளும் போதே அதில் இருக்கும் சத்தை உடல் உறிஞ்சும் வகையில் உடலுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். சாப்பிடுவதற்கு முன்பும் சாப்பிட்ட பிறகும் செய்ய வேண்டிய விஷயங்களைத் தாண்டி செய்யகூடாத விஷயங்கள் குறித்தும் தெரிந்துகொள்வது அவசியம்.

இது வளரும் பிள்ளைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்குமே பொருந்தும். உணவு கட்டுப்பாடு என்று சொல்வதை விட உணவு உண்டபிறகு எதிலெல்லாம் கட்டுப்பாடு கடைப்பிடிக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்வோம்.

குளியலை தவிர்க்கவும்:



இயல்பாக காலை கடன்களை முடித்ததும் குளியல் என்பது தான் சரியான முறை. தற்போது எல்லோரும் வீட்டுக்குள் முடங்கி இருக்கும் நிலையில் காலை உணவுக்கு பிறகு குளியல் என்பதை அதிகம் பேர் வழக்கமாகி வைத்திருக்கிறார்கள். காலை வேளை மட்டும் அல்லாமல் எப்போதும் உணவுக்கு பிறகு குளியல் என்பது தவறான செயல் இது.

உணவு செரிமானம் ஆக உடலில் நொதிகள் செயல்பட வேண்டும். ஆனால் குளிக்கும் போது உடல் குளிர்ச்சித்தன்மை பெறுவதால் நொதிகள் சுரக்காது. இதனால் அஜீரணக்கோளாறுகள் உண்டாகும். இவை தொடரும் போது செரிமான மண்டலத்தின் செயல்பாடுகளும் குறையும்.

கூடுதலாக மலச்சிக்கல் வயிறு கோளாறூகள் போன்ற பிரச்சனைகளை சந்திக்க கூடும். எப்போதும் எந்த நேரமும் சாப்பிட்டு முடித்ததும் குளியல் மேற்கொள்ள கூடாது.

​பழங்களை தவிர்க்க வேண்டும்:



பழங்கள், காய்கறீகள் உடலுக்கு அவசியம் தேவை என்பதை மறுப்பதற்கில்லை. தினமும் ஒரு பழம் சாப்பிட வேண்டும் உணவு கூடவே ஒரு கப் பழ சாலட் எடுத்துகொள்ளும் வழக்கம் சிலருக்கு உண்டு. ஆனால் உணவோடு பழங்களை சாப்பிடும் போது பழங்களில் இருக்கும் சத்துகளை உடல் கிரகிக்க முடியாது.

அதோடு உணவோடு கலந்து செரிமானத்தை தாமதமாக்கும். உணவுக்கு பிறகு பழங்கள் தவிர்க்க வேண்டும். அப்படி சாப்பிடுவதாக இருந்தால் உணவு உண்ட பிறகு 45 நிமிடங்களுக்கு பிறகு சாப்பிடலாம். இயன்றவரை உணவுக்கு 1 மணி நேரத்துக்கு முன்பு பழங்களை எடுத்துகொண்டால் அதன் பிறகு உணவு எளிதாக செரிமானம் ஆக உதவும்.

​உணவுக்கான இடைவேளை:



உணவு இடைவேளை என்பது குறிப்பிட்ட நேரத்தில் உணவு எடுத்துகொள்ள வேண்டும் என்று அர்த்தம் கிடையாது. ஒரு வேளை உணவு உண்ட பிறகு அவை செரிமானம் ஆகி அடுத்த வேளைக்கு பசி உணர்வு உண்டானால் மட்டுமே சாப்பிட வேண்டும்.

உணவு செரிமானம் ஆகாமல் நேரத்துக்கு சாப்பிட வேண்டுமே என்று தவறாமல் எடுத்துகொள்வது நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகளை உண்டாக்கிவிடும். உடல் பருமன் போன்ற பிரச்சனைகளையும் உண்டாக்கிவிடும்.

உடனே தண்ணீர் வேண்டாம்:



சிலருக்கு சாப்பிடும் போது தண்ணீர் குடித்துகொண்டே இருக்க வேண்டும். சாப்பிடும் போது தொண்டையில் அடைப்பு நேராமல் காக்கவே அருகில் தண்ணீர் வைத்துகொண்டு சாப்பிடும் வழக்கம் உண்டு. ஆனால் ஒவ்வொரு கவளத்துக்கு இடையே தண்ணீர் குடித்து குடித்து வயிற்றுக்குள் உணவை தள்ளுவது ஆரோக்கியமானதல்ல. இவை அஜீரண கோளாறை தான் உருவாக்கும்.

அதனால் சாப்பிடுவதற்கு முன்பு சிறிதளவு நீர் குடிக்க வேண்டும். அப்படி செய்தால் உணவு உண்ணும் போது தாகம் எடுக்காது. அதே போன்று உணவுக்கு பிறகும் ஒரு மிடறு குடிக்கலாம். 20 நிமிடங்கள் கழித்து வேண்டிய அளவு தண்ணீரை குடிக்கலாம்.

​சூடான பானங்கள் கேடு தரும்:



சாப்பிட்டு முடித்ததும் சூடாக காபி குடிக்கும் பழக்கம் பலருக்கும் உண்டு. ஆனால் உணவு உண்ணும் இரண்டு மணிநேரத்துக்கு முன்பு, இரண்டு மணி நேரத்துக்கு பின்பு காபி குடிப்பதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும். காஃபி மட்டுமல்ல டீயாக இருந்தாலும் சாப்பிட்டு முடித்ததும் குடிக்க கூடாது. இரவு தூங்கும் போது இந்த பானங்கள் தவிர்க்க வேண்டும்.

​குளிர்ச்சியும் தேவையில்லை:



உணவுக்கு பின்பு குளிர்ச்சியான நீர் நல்லதல்ல. அதே போன்று சிலர் விதவிதமான உணவு வகைகளை சாப்பிட்டு முடித்ததும் விருந்தை கொண்டாட ஐஸ்க்ரீம், குளிர்பானங்கள் போன்றவற்றை அருந்துவது உண்டு.

உணவு செரிமனம் ஆக குடலில் இயற்கையாகவே வெப்ப நிகழ்வு இருக்கும். குளிர்ச்சியான இந்த பானங்கள் குடலின் வெப்பத்தன்மையை குறைக்க செய்யும். இதனால் அஜீரணக்கோளாறுகள் அதிகரிக்க வாய்ப்புண்டு.

​உறக்கம் தவிர்க்க வேண்டும்:



சாதாரணமாகவே உணவு உண்ட பிறகு குட்டித்தூக்கம் போடுவது உண்டு. ஆனால் நிச்சயம் இதை தவிர்க்க வேண்டும். அதிலும் விருந்துணவாக இருந்தால் கண்டிப்பாகவே தூக்கம் தழுவுவது உண்டு. ஆனால் சாப்பிட்டு முடித்ததும் தூங்கினால் குடலின் செயல்பாடு சீராக இல்லாமல் தாமதமாகும். சாப்பிட்ட பிறகு மிதமாக நடந்து சற்று செரிமானம் ஆன பிறகு தூங்குவது சிறந்தது.

குறைந்தது உணவுக்கும் உறக்கத்துக்குமான இடைவெளி ஒரு மணி நேரமாவது இருக்க வேண்டும். மதிய நேரத்தில் மட்டும் அல்ல இரவு நேரங்களிலும் இந்த இடைவெளி இருக்கும்படி பார்த்துகொள்வது அவசியம்.

​கடினமான உடல் உழைப்பு:



உண்ணும் உணவு சத்தானதாக இருந்தாலும் உடல் சத்தை கிரகித்து செரிமானத்தை ஊக்குவிக்க சிறிதளவு நேரமாவது தேவை. சாப்பிட்டு முடித்ததும் உடலை வறுத்தி குனிந்து நிமிர்வது, கடினமான வேலை செய்வது தவிர்க்க வேண்டும். ஏனெனில் உண்ணும் உணவு வயிற்றை நோக்கி கீழ் இறங்கி வர வேண்டும்.

மாறாக கடுமையான வேலையால் மேல் நோக்கி வரும்படி ஆகிவிடக்கூடாது. சாப்பிட்டு முடித்ததும் முதல் 20 நிமிடங்களுக்கு கடினமான வேலை தவிர்ப்பது நல்லது. ஒவ்வொரு வேளை உணவுக்கு பிறகும் இதை கடைப்பிடித்தாலே உணவில் இருக்கும் சத்துகள் உடலுக்கு நிறைவாக கிடைக்கும். இனி இதையெல்லாம் கவனத்தில் கொண்டு செயல்பட்டால் ஆரோக்கியம் நிச்சயம் மேன்மையடையும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad