பெற்றோர்களே கவனம்!!! சேனிடைசர் கொடுப்பதுபோல் சிறுவனைக் கடத்தி, 4 கோடி கேட்டு மிரட்டல்!!!உத்தரப் பிரதேசத்தில் மர்ம கும்பல் ஒன்று மக்களுக்கு முகக் கவசம் கொடுப்பதுபோல், குட்கா தொழிலதிபரின் பேரனைக் கடத்தி சென்று ரூ. 4 கோடி கேட்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநில கோண்டா மாவட்டம் கர்னால்கஞ்ச் பகுதியில் பொது மக்களுக்கு முகக் கவசங்களை விநியோகம் செய்து வந்துள்ளது. அந்த கும்பல் கழுத்தில் அடையாள அட்டைகளை மாட்டிக் கொண்டு இந்த பணியைச் செய்து வந்துள்ளனர்.

அப்போது அங்கிருந்த 6 வயது சிறுவன் அழைத்து, அந்த கும்பலைச் சேர்ந்த ஒருவர் கிருமி நாசினி வழங்குவது போல் சைகை செய்துள்ளார். அந்த நபரின் சமூக சேவையைப் பார்த்து நம்பிக்கையோடு அந்த சிறுவன் அருகில் சென்றுள்ளார். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அந்த சிறுவனை அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் இழுத்துப்போட்டு அங்கிருந்து அந்த கும்பல் புறப்பட்டுச் சென்றது.

கடத்தப்பட்ட சிறுவன் குட்கா தொழிலதிபர் ராஜேஷ் குமார் குப்தாவின் பேரன் என்பது தெரியவந்தது. இதற்கிடையே ராஜேஷ் குமாரின் செல்போனுக்கு புதிய எண் ஒன்றிலிருந்து அழைப்பு வந்துள்ளது.

அந்த அழைப்பு வாயிலாகச் சிறுவனைக் கடத்திய கும்பல் ரூ. 4 கோடி கொடுத்தால்தான் சிறுவனைப் பத்திரமாக வெளியே அனுப்பி வைப்போம் எனத் தொழிலதிபருக்கு மிரட்டல் விடுத்துள்ளது. அதிர்ந்துபோன தொழிலதிபரின் குடும்பம் சம்பவம் குறித்து உத்தரப் பிரதேச போலீசில் புகார் அளித்துள்ளனர்.

வழக்குப் பதிவு செய்துள்ள உத்தரப் பிரதேச போலீசார், சம்பவம் நடந்த இடத்தை சுற்றியுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரணையைத் தொடங்கியுள்ளனர். சமூக சேவை செய்வது போல் இந்த கும்பல் சிறுவனைக் கடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url