Type Here to Get Search Results !

கொடிகட்டி பறக்கும் வெளிநாட்டு மருத்துவக்கல்வி வியாபாரம்: மாணவர்களே உஷார்!!

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்! 
கொடிகட்டி பறக்கும் வெளிநாட்டு மருத்துவக்கல்வி வியாபாரம்: மாணவர்களே உஷார்!!
வெளிநாட்டில் மருத்துவக் கல்வி பயில்வது குறித்து இந்திய மாணவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி மருத்துவர் அறிவுரை வழங்கியுள்ளார்.

இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் பெரும்பாலான மாணவ மாணவிகளின் எதிர்கால கனவே மருத்துவ படிப்பு முடித்து மருத்துவர் ஆவது தான். மாநிலத்தில் முதல் முன்று இடங்களை பிடிக்கும் மாணவ, மாணவியர் வருடா வருடம் மாறினாலும், எதிர் காலத்தில் மருத்துவம் படித்து டாக்டராகி ஏழை மக்களுக்கு சேவை செய்வேன் என்ற பதில் மட்டும் மாறாமல் அனைவரும் கூறும் ஒன்றாக உள்ளது. அந்த அளவிற்கு மருத்துவ படிப்பு மீதான மோகம் உள்ளது.

ஆனால் நடைமுறையில் உள்ள சிக்கல் என்னவென்றால் தேர்வெழுதும் அனைத்து மாணவர்களாலும் மருத்துவ படிப்பு படிக்கும் அளவுக்கு மதிப்பெண் எடுக்க முடியாது. ஆனால் அவர்களும் மருத்துவர் கனவில் இருப்பர். இங்கே தான் அவர்களது ஆசையை முலதனமாக வைத்து மருத்துவ படிப்பு முகவர்களின் வியாபாரம் தொடங்குகிறது.

50 அல்லது 60 சதவித மதிப்பெண் எடுத்த மாணவன், மாணவி தான் இவர்களது குறிக்கோள்.வருடத்தில் பனிரெண்டாம் வகுப்பு வெளியாகி அடுத்த 3 மாதங்களே இவர்களது வேலை நாட்கள். தேர்வு முடிவு வெளியான உடன் வெளி நாட்டில் எம். பி. பி.எஸ்., படிக்க வேண்டுமா குறைந்த கட்டணம், நிறைவான படிப்பு, படித்து முடித்த உடன் லட்சங்களில் சம்பளத்துடன் வேலை என்கிற ரீதியில் விளம்பரம் கொடுப்பர். இதை பார்க்கும் பெற்றோர்களும் தன் மகன்,மகள் மருத்துவராக வேண்டும் என்கிற பேராசையில் அவர்களிடம் தொடர்பு கொள்வர்.

அப்போது அவர்களிடம் வெளிநாட்டு படிப்பு என்பதை மிகப்பெரிய பிம்பமாக காட்டி ஆசை வார்த்தைகள் கூறி நாங்கள் முன்பு படிக்க அனுப்பி வைத்த மாணவர்கள் இன்று நல்ல நிலையில் இருப்பதாக கூறி சில புகைப்படங்களை காட்டுவர். இதை நம்பி தங்கள் பிள்ளைகளை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்த பெற்றோர்கள் தற்போது ரத்தக்கண்ணீர் வடிக்கின்றனர்.

இந்தியாவில் உயர்கல்வி நிறுவனங்களுக்குப் பஞ்சமில்லை. ஆனால் சில ஐ.ஐ.டிகள் தவிர வேறெந்த நிறுவனமும் உலகத் தரப் பட்டியலில் வருவதில்லை. உலகத்தரப் பட்டியலில் இடம்பெற்றுள்ள வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்கள் பலவும், பிற நாடுகளிலிருந்து அங்கு படிக்க வரும் மாணவர்களுக்கென்று சில இடங்களை ஒதுக்குகின்றன. 2000த்துக்குப் பிறகு பல நாடுகள், வெளிநாட்டு மாணவர்களுக்கு சட்டச்சலுகைகள், விசா விலக்குகள், வேலை தேடும் வாய்ப்புகளை அளித்தன.

அதைத் தொடர்ந்து இந்தியாவிலிருந்து பரவலாக மாணவர்கள் வெளிநாடு செல்லத் தொடங்கினார்கள். இந்தச் சூழலைப் பயன்படுத்திக்கொண்டு உள்நாட்டில் போணியாகாத இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை கல்வி நிறுவனங்களும் இங்குள்ள முகவர்களை வளைத்தன. இந்தியா போன்ற வளரும் நாடுகளின் மாணவர்களைக் குறி வைத்தே புதிது புதிதாக கல்வி நிறுவனங்களும் உருவாகத் தொடங்கின. அவர்கள் தரும் கமிஷனுக்கு ஆசைப்பட்டு, சில முகவர்கள் மாணவர்களை ‘பிரெய்ன்வாஷ்’ செய்து அந்தக் கல்வி நிறுவனங்களுக்கு ஆள் பிடித்தார்கள்.

மருத்துவக் கனவு பலிக்காமல் வருந்தும் மாணவர்கள் இந்த வெளிநாட்டு முகவர்களின் இலக்காக மாறினார்கள். ரஷ்யா, சீனா, உக்ரைன் உள்பட பல நாடுகளில் செயல்படும் மருத்துவக் கல்வி நிறுவனங்களை இங்கே கடைவிரித்தார்கள். இங்கிருக்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகளோடு ஒப்பிடும்போது, செலவு குறைவு; குறைந்த மதிப்பெண்களே போதுமானது; தவிர முகவர்கள் தந்த வாக்குறுதிகள் அனைத்தும் ஈர்த்ததால் நிறைய மாணவர்கள் வெளிநாட்டில் மருத்துவம் படிக்கச் செல்லத் தொடங்கினார்கள்.

இந்த எண்ணிக்கை அதிகமானதைத் தொடர்ந்து, இந்திய மருத்துவக் கவுன்சில், ‘வெளிநாட்டில் எம்.பி.பி.எஸ். படிக்கும் மாணவர்கள் இந்தியாவில் மருத்துவராகப் பதிவுசெய்ய FMGE (Foreign Medical Graduates Examination) என்ற தேர்வை எழுதித் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மருத்துவராக பிராக்டீஸ் செய்ய முடியும்’ என்ற விதிமுறையை 2002ம் ஆண்டில் கொண்டு வந்தது. இந்த இடத்தில்தான் சிக்கல் தொடங்கியது.

பெரும்பாலான மாணவர்களால் இந்தத் தேர்வை எதிர்கொள்ள முடியவில்லை. தேர்வில் தேர்ச்சி பெறாமல் சிகிச்சையளித்த சிலர், போலி மருத்துவர்கள் என்று கைது செய்யப்பட்டுள்ளார்கள். பணத்தையும் தொலைத்துவிட்டு, ஆறாண்டு கால வாழ்க்கையையும் தொலைத்து விட்டு பல ஆயிரம் மாணவர்கள் எதிர்காலம் புரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

"பொதுவாக வெளிநாட்டில் படிப்பதில் பல நன்மைகள் உண்டுதான். ஆனால் என்ன படிக்கிறோம், எங்கே படிக்கிறோம், எப்படிப் படிக்கிறோம் என்பதைப் பொறுத்தே எதிர்காலம் அமையும்.ஒரு காலத்தில் வெளிநாட்டுக் கல்வி ஆலோசகர்கள் குறைந்த எண்ணிக்கையில் இருந்தார்கள். நேரடியாக கல்வி நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்து மாணவர்களைச் சேர்ப்பார்கள். படிப்பு முடியும்வரை மாணவர்களுக்கு இந்த ஆலோசகர்களே பொறுப்பு. இன்று ஏராளமானோர் வந்து விட்டார்கள். கல்வித்தரம், வேலைவாய்ப்பு, மாணவர்களின் எதிர்காலம் பற்றி யோசிக்காமல் சகல கல்வி நிறுவனங்களும் இங்கே மார்க்கெட்டிங் செய்கிறார்கள். ஒரு ஆலோசகர் தனக்குக் கீழ் நிறைய முகவர்களை நியமிக்கிறார்.

முகவர்கள் நடைமுறைக்குப் பொருந்தாத வாக்குறுதிகளைக் கொடுத்து மாணவர்களைப் பிடிக்கிறார்கள். ‘வெளிநாட்டில் மருத்துவம் படிப்பவர்கள் இந்தியாவில் தேர்வு எழுதினால்தான் சிகிச்சை அளிக்க முடியும்’ என்றோ, அந்தத் தேர்வு கடினமானது என்றோ சொல்வதேயில்லை.தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் உடனடியாக சிகிச்சை அளிக்கமுடியாது. ஒரு பல்கலைக்கழகம் அல்லது மருத்துவமனையில் ஓராண்டு இன்டர்ன்ஷிப் செய்ய வேண்டும். அதன்பிறகுதான் மருத்துவராகி சிகிச்சை அளிக்கமுடியும். ( அதற்கே  குறைந்தது 10 லட்சம் ஆகும் ) முக்கியமாக, அவர்கள் படித்த கல்வி நிறுவனம் உலக சுகாதார நிறுவனத்திலும், இந்திய மருத்துவக் கவுன்சிலிலும் அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். சில முகவர்கள் அங்கீகாரம் இல்லாத மருத்துவக் கல்லூரிகளுக்குக் கூட மாணவர்களை அனுப்பி அவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்குகிறார்கள்

இவ்வளவு சிக்கல் மிகுந்த மருத்துவப் படிப்புக்கு மாணவர்களை வளைக்க இந்தக் ‘கல்வி ஆலோசகர்கள்’ பயன்படுத்தும் ‘டெக்னிக்’ அபாரமானது. வெளிநாட்டில் மருத்துவம் படிக்கும் மாணவனின் பெற்றோரையே முகவர்களாக நியமிக்கிறார்கள். ‘ஒரு மாணவனுக்கு இவ்வளவு’ என்று ஆசை காட்டுவதால் எதார்த்தத்தில் இருக்கும் சிக்கல் புரியாமல் அவர்கள் தங்களுக்குத் தெரிந்தவர்களை எல்லாம் தள்ளிவிடுகிறார்கள்.

வெளிநாட்டில் படிக்கும் மாணவனின் பெற்றோரே சொல்வதால், மற்றவர்கள் நம்பி தங்கள் பிள்ளைகளையும் சேர்க்கிறார்கள். இப்படித்தான் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமானது. பல மாணவர்களுக்கு முதலாமாண்டு முடித்தபிறகுதான் இந்தியாவில் நடக்கும் தேர்வு பற்றியே தெரியவருகிறது என்பது பெரும் சோகம். இதையெல்லாம் முகவர்களிடம் விசாரிக்கலாம் என்றால் அவர்கள் மாயமாகி இருப்பர்.

வெளிநாடுகளில் மருத்துவம் படிப்பதே வீண் என்று ஒட்டுமொத்தமாக சொல்லமுடியாது. ரஷ்யா, சீனா, ஜார்ஜியா, உக்ரைன், பிலிப்பைன்ஸ், செயின்ட் லூசியா, கயானா போன்ற நாடுகளில் மருத்துவம் படிக்க இங்கிருந்து நிறைய மாணவர்கள் செல்கிறார்கள். 5 முதல் 6 ஆண்டுகள் படிப்பை முடிக்க ரூ.20 லட்சம் வரை செலவாகும். ஆனால் அங்கு பகுதிநேர வேலைக்குச் செல்ல முடியாது.

படிப்பை முடித்தபிறகு, இந்த நாடுகளில் மருத்துவராகப் பதிவுசெய்து பணிபுரியவும் முடியாது. இந்தியாவுக்குத்தான் வரவேண்டும். இங்கே, தேர்வில் தேர்ச்சி பெறமுடியும் என்ற நம்பிக்கையும் திறமையும் கொண்ட மாணவர்களுக்கு பிரச்சனையில்லை. ஆனால் அது எளிதில்லை. அதேநேரம், ஆங்கிலத்தைத் தாய்மொழி யாகக் கொண்ட அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் மருத்துவம் படிக்கலாம்.

படிப்பு முடிந்ததும் அங்கேயே மருத்துவராகப் பதிவு செய்து சிகிச்சையும் அளிக்கலாம். ஆனால் அந்நாட்டு மருத்துவக் கல்வி நிலையங்களில் மிக நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்கே இடம் கிடைக்கும். நுழைவுத்தேர்வுகளில் தேர்ச்சி பெறவேண்டும். அதைவிட முக்கியம், படிப்பை முடிக்க குறைந்தது ரூ.1 கோடி செலவாகும்.

இது குறித்து துாத்துக்குடி அரசு மருத்துவமனையின் உறைவிட மருத்துவர் சைலஷ் ஜெபமணியியிடம் கேட்ட போது, தற்போது பிளஸ் 2முடித்த உடன் தங்களது குழந்தைகளை எம். பி. பி.எஸ்., படிக்க வைக்க ஆசைப்படுகின்றனர். ஆனால் அவர்கள் மெரிட் இல்லாததால் தனியார் மருத்துவ கல்லுாரிகளை நாடுகின்றனர். குறிப்பாக உள்நாட்டில் படித்தால் ஒன்று முதல் ஒன்றே கால் கோடி வரை கட்டணம் வசூலிக்கின்றனர். இதை பயன்படுத்தி கொண்டு சில வெளிநாட்டு மருத்துவ கல்லுாரிகள் தமிழ்நாட்டில் ஏஜெண்டுகளை நியமித்து அவர்கள் முலமாக அட்மிஷன் பெற்று வருகின்றனர். இந்த நபர்கள் கல்வியாளர்கள் போல புரோக்கர்களாக செயல்படுகின்றனர். இதில் படிக்கும் ஒரு சில மாணவ மாணவியர்கள் போதை மற்றும் கலாச்சார சீரழிவுக்கு ஆளாகின்றனர்.

உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள மருத்துவ கல்லுாரிகளில் அங்கீகாரம் குறித்து பெற்றோர்கள் தீவிரமாக அலசி ஆராய்ந்து தங்களது பிள்ளைகளை சேர்க்க வேண்டும். தமிழ்நாட்டில் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு நேரில் சென்று மருத்துவ கல்லுாரி தரம் குறித்து விசாரித்து கொள்ளலாம். புதிதாக உதயமாகும் மருத்துவ கல்லுாரிகளில் கவனமாக சேர்கக வேண்டும். ஏற்கனவே இயங்கி வரும் பழைய மருத்துவ கல்லுாரிகளில் எத்தனை பேர் படித்து முடித்து வெளியே சென்றிருக்கிறார்கள் என விசாரிக்க வேண்டும். வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவ மாணவிகள் துாதரங்களில் கூட விசாரித்து பயன் பெறலாம்.

வெளிநாட்டில் படித்து விட்டு இந்தியாவில் நடக்கும் FMGE (Foreign Medical Graduates Examination) என்ற தேர்வில் 100 பேருக்கு 20 போ் மட்டுமே தேர்ச்சி பெறுகின்றனர். மீதமுள்ளவர்கள் போலி டாக்டர்களாக வலம் வருகின்றனர் என்று ஊடகங்கள் முலம் தெரிய வருகின்றது. பெற்றோரகள் தங்களது குழந்தைகளை டாக்டருக்கு படிக்க வைப்பதில் தப்பில்லை. அவர்களது கண்னுக்குள் வைத்து வளர்க்க வேண்டும் என்றார்.

எனவே பெற்றோர் மேற்கண்ட உண்மைகளை தெரிந்து கொண்டு நன்கு விசாரித்த பிறகு தான் தங்கள் பிள்ளைகளை வெளிநாட்டிற்கு படிக்க அனுப்ப வேண்டும். சிறிது காலம் உபயோகப்படுத்தும் பொருட்களுக்கே எங்கு வாங்கலாம் நான்கு பேரிடம் விசாரிக்கும் போது வாழக்கைக்கே அடித்தளமாக விளங்கும் கல்விக்காக விசாரிக்கலாமே என்பது கல்வி நிபுணர்களின் கருத்தாகும். இனியாவது மக்கள் விழித்துக் கொள்வார்களா?

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad