Type Here to Get Search Results !

தமிழகத்தில் மது கடைகள் திறக்க எதிர்ப்பு: கருப்பு சின்னம் அணிய பொதுமக்களுக்கு தி.மு.க. கூட்டணி அழைப்பு; டாஸ்மாக் திறப்பு ஊரடங்கை ஒட்டுமொத்தமாகப் பாழ்படுத்தும், நோய்த்தொற்றைப் பரவலாக்கும் - சீமான் எச்சரிக்கை

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்! 
தமிழகத்தில் மது கடைகள் திறக்க எதிர்ப்பு; கருப்பு சின்னம் அணிய பொதுமக்களுக்கு தி.மு.க. கூட்டணி அழைப்பு
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் நாள்தோறும் தீவிரமடைந்து வருகிறது.  இதனால் 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்தில் உள்ளன.  ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், நேற்று முன்தினம் முதல் பல்வேறு இடங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.  இதன்பின்னர் தமிழகத்தில் மே 7ந்தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியானது.

சென்னையில் அதிக அளவில் கொரோனா பாதிப்பு உள்ள சூழ்நிலையில், சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட நகரங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது.  இதேபோன்று, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளிலும் மதுபான விற்பனை நடைபெறாது என தமிழக அரசு தெரிவித்தது.

தொடர்ந்து தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவுள்ள நிலையில் அதற்கான பணிகள் நடந்து வந்தன.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் அறிக்கை விடுத்துள்ளனர்.  அதில், தமிழகத்தில் மது கடைகள் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நாளை கருப்பு சின்னம் அணிய வேண்டும்.  5 பேருக்கு மிகாமல் 15 நிமிடங்களுக்கு பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு வெளியே எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நிற்க வேண்டும் என தெரிவித்து உள்ளனர்.

மது கடைகள் திறப்பது சமூக தொற்று பரவும் வாய்ப்பை அதிகரிக்க செய்யும்.  மதுக்கடைகளை திறக்க ஆர்வம் காட்டும் அ.தி.மு.க. அரசை கண்டித்து கருப்பு சின்னம் அணிவீர்.  கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு அலட்சியம் காட்டுகிறது என்றும் தெரிவித்து உள்ளனர்.

டாஸ்மாக் திறப்பு ஊரடங்கை ஒட்டுமொத்தமாகப் பாழ்படுத்தும், நோய்த்தொற்றைப் பரவலாக்கும் - சீமான் எச்சரிக்கை
டாஸ்மாக் கடைகளைத் திறக்கும் அதிமுக அரசின் முடிவு, 40 நாட்களுக்கு மேலாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஊரடங்கை ஒட்டுமொத்தமாகப் பாழ்படுத்தும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரித்துள்ளார்.

சீமான் தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, வரும் 7ஆம் தேதி முதல் மதுபானக் கடைகளைத் திறக்கவிருப்பதாக தமிழக அரசு அறிவித்திருப்பது பேரதிர்ச்சி தருகிறது. இம்முடிவு 40 நாட்களுக்கு மேலாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஊரடங்கை ஒட்டுமொத்தமாகப் பாழ்படுத்தி, நோய்த்தொற்று பரவலைக் கட்டற்ற நிலைக்குக் கொண்டு சென்றுவிடும் பேராபத்தாகும்.

தனிமைப்படுத்தலும் தனிமனித விலகலும் பேரவசியமாக உள்ள இக்காலக்கட்டத்தில், அதனைக் குலைக்க அரசே வழிவகுக்கக் கூடாது. தமிழகத்தில் நோய்த்தொற்று சமூகப் பரவலை எட்டியுள்ள நிலையில் மதுபானக் கடைகளைத் திறப்பது கொரோனாவை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பதற்கு ஒப்பானது.

அத்தகைய வரலாற்றுப் பிழையைச் செய்து பெரும்பழிக்கு ஆளாக வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். ஆகவே, மதுபானக் கடைகளைத் திறக்கும் முடிவை உடனடியாகக் கைவிட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad