Type Here to Get Search Results !

பல்லாவரம் நகராட்சி பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; கொரோனா சந்தேகம்: குழந்தைகள் உள்பட 41 பேர் கோவை ஆஸ்பத்திரிகளில் அனுமதி

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்! 
பல்லாவரம் நகராட்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
சென்னையை அடுத்த பல்லாவரம் நகராட்சிக்கு உட்பட்ட கீழ்கட்டளை பகுதியை சேர்ந்த 31 வயது வாலிபர், கொரோனா வைரஸ் காரணமாக ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இதையடுத்து அவரது குடும்பத்தினருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. அதில் நேற்று முன்தினம் அவருடைய 28 வயது மனைவிக்கும் கொரோனா வைரஸ் உறுதியானதால் அவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இந்தநிலையில் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட வாலிபரின் தாயார், அவருடைய மைத்துனர், உறவினரின் 7 மற்றும் 9 வயதான 2 சிறுவர்கள் என மேலும் 4 பேருக்கு கொரோனா வைரஸ் நேற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் அந்த பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதால் அந்த பகுதியில் பல்லாவரம் நகராட்சி சுகாதார அலுவலர் கோவிந்தராஜ் தலைமையில் துப்புரவு பணியாளர்கள் கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்தினர்.

அந்த பகுதியில் வேறு யாருக்காவது கொரோனா உள்ளதா? என்பதை அறிய கொரோனா தொற்று கண்டறியும் வாகனம் அந்த பகுதியில் கொண்டுவரப்பட்டு அப்பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. பெருங்களத்தூர் கண்ணன் அவென்யூ பகுதியிலும் இதுபோல் பொதுமக்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

ஆயுதப்படை போலீஸ்காரர்

சென்னையை அடுத்த பரங்கிமலை பல்லாவரம் கண்டோன்மெண்ட் பகுதிக்கு உட்பட்ட நசரத்புரத்தில் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் அந்த பகுதியில் வசிக்கும் 15 ஆயுதப்படை போலீசாருக்கு சோதனை செய்யப்பட்டது. அதில் ஒரு போலீஸ்காரருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதியானது. அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இவருடன் சேர்த்து செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று பல்லாவரம் தாலுகாவை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதன் மூலம் செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 78 ஆக உயர்ந்து உள்ளது.

கோயம்பேடு பூ வியாபாரிக்கு கொரோனா பாதிப்பு

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் திருவேற்காட்டை சேர்ந்த ஒருவர் பூ கடை நடத்தி வருகிறார். அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில், கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதியானது.

இதைத்தொடர்ந்து அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

சென்னையில் இருந்து விருத்தாசலம் வந்த 46 பேருக்கு கொரோனா பரிசோதனை
சென்னை கோயம்பேட்டில் உள்ள சந்தையில் தங்கியிருந்து காய்கறி வியாபாரம் செய்து வந்த வேப்பூர் பகுதியை சேர்ந்த 2 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பீதி காரணமாகவும், சென்னையில் இதுவரை ஏராளமானோருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளதன் காரணமாகவும் கோயம்பேடு சந்தையில் தங்கியிருந்து வேலை செய்து வரும் வெளிமாவட்டங்களை சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் அவசர, அவசரமாக தங்களது சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்ற வண்ணம் உள்ளனர். அந்த வகையில் கோயம்பேடு சந்தையில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்த விருத்தாசலம் அடுத்த விளாங்காட்டூர், படுகளாநத்தம் பகுதியை சேர்ந்த 46 தொழிலாளர்கள் லாரியில் சொந்த ஊர்களுக்கு வந்தனர். இதனால் அவர்களுக்கும் கொரோனா தொற்று இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது.

தனிமைப்படுத்தப்பட்டனர்

இதையடுத்து விருத்தாசலம் தாசில்தார் கவியரசு தலைமையிலான வருவாய்த்துறையினர் மற்றும் மங்கலம்பேட்டை வட்டார சுகாதார மருத்துவ அலுவலர் வளர்மதி தலைமையிலான மருத்துவ குழுவினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று அனைவருக்கும் தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்தனர். மேலும் அவர்களின் உமிழ்நீரும் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து அந்த 46 பேரும் விருத்தாசலம் ஆலடி சாலையில் உள்ள அரசு கல்லூரி மாணவர் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே வேப்பூர் பகுதியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 2 பேர் வசிக்கும் இடங்களில் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கொரோனா சந்தேகம்: குழந்தைகள் உள்பட 41 பேர் கோவை ஆஸ்பத்திரிகளில் அனுமதி
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் தமிழக அளவில் கோவை 2-வது இடத்தில் உள்ளது. தற்போது இந்த வைரசால் பாதிக்கப்பட்ட 141 பேரில் பலர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். மீதம் உள்ளவர்கள் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களின் உடல்நிலையை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கோவையில் உள்ள தனியார் மற்றும் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிகளில் நேற்று கொரோனா சந்தேகத்துடன் 41 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 20 பேர் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியிலும், 21 பேர் தனியார் ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த 41 பேரில் 18 குழந்தைகள் அடங்கும்.

18 குழந்தைகள்

17 ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தை என்று 18 குழந்தைகள் கொரோனா சந்தேகத்துடன் அனுமதிக்கப்பட்டு உள்ளதால், அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். பொதுவாக குழந்தைகள் வெளியே செல்ல மாட்டார்கள். பெற்றோரும் அவர்களை வெளியே செல்ல அனுமதிப்பது இல்லை.

இருந்தபோதிலும் குழந்தைகள் கொரோனா சந்தேகத்துடன் அனுமதிக்கப்பட்டு இருப்பதால் அவர்களின் உடல்நிலையை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். அத்துடன் அவர்களின் ரத்தம் மற்றும் சளி மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

பெற்றோருக்கு பரிசோதனை

குழந்தைகள் வெளியே செல்வது இல்லை. ஆனால் வீட்டில் இருக்கும் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வெளியே சென்று விட்டு வீடு திரும்புவார்கள். அவர்களிடம் இருந்து எளிதாக பரவும். எனவே தற்போது அனுமதிக்கப்பட்டு உள்ள 18 குழந்தைகளுக்கும் கொரோனா தாக்கி இருக்கலாம் என்ற சந்தேகம்தான் இருக்கிறது. பரிசோதனை முடிவு வந்த பின்னர்தான் தெரியும்.

எனவே அந்த குழந்தைகளின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு காய்ச்சல், சளி இருக்கிறதா? என்று பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad