Type Here to Get Search Results !

தமிழகத்தில் 4ம் ஊரடங்கில் அடுத்த கட்ட தளர்வாக அரசு பேருந்துகள் ஓடத்தொடங்கும்? சென்னையில் 2 ஆயிரம் குடியிருப்புகள் நோய் பாதிக்கக்கூடிய பகுதிகள் - சிறப்பு அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் 4ம் ஊரடங்கில் அடுத்த கட்ட தளர்வாக அரசு பேருந்துகள் ஓடத்தொடங்கும்?
ஊரடங்கில் அடுத்த கட்ட தளர்வாக அரசு பேருந்துகள் ஓடத்தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு இன்று அல்லது நாளை வெளியிடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மார்ச் 24ம் தேதியில் இருந்து இதுவரை 3முறை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. 3வது ஊரடங்கு காலம் நாளையுடன் முடிகிறது.  இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, ‘4ம் கட்ட ஊரடங்கு புதிய விதிமுறைகளுடன் முற்றிலும் வித்தியாசமானதாக இருக்கும்,’ என்று தெரிவித்தார்.

மேலும், இந்த ஊரடங்கு தேவையா என்பது பற்றிய கருத்துகளையும், பரிந்துரைகளையும் அளிக்கும்படி அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டது. இதை இன்றைக்குள் அளிக்கும்படி மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த ஆலோசனைகளை பெற்ற பிறகே, 4ம் கட்ட ஊரடங்குக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அது வெளியிட உள்ளது. இதனிடையே தமிழகத்தில் 17-ந்தேதிக்கு பிறகு பஸ்களை இயக்க படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்து இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை அரசு தீவிரமாக செய்து வருகிறது. சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பணிமனைகளில் பேருந்துகளை இயக்குவது குறித்து பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகள் இயக்கப்படுவதற்கு வசதியாக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றது. குறைந்த அளவில் முதல்கட்டமாக பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி 3-ல் ஒரு பகுதி பேருந்துகளை இயக்குவதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக நாளை மறுநாள் முதல் ஊரடங்கில் அடுத்த கட்ட தளர்வாக அரசு பேருந்துகள் ஓடத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு இன்றோ அல்லது நாளையோ வெளியிடும் என கூறப்படுகிறது.

சென்னையில் 2 ஆயிரம் குடியிருப்புகள் நோய் பாதிக்கக்கூடிய பகுதிகள் - சிறப்பு அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன்
பெருநகர சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகையில் நேற்று சென்னைக்கான கொரோனா சிறப்பு அதிகாரி டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

பொதுமக்கள் ஒருவரை ஒருவர் சந்திப்பதாலேயே கொரோனா வைரஸ் பரவுகிறது. இதனால் அனைவரும் முககவசம் கட்டாயம் அணிய வேண்டும். பெருநகர மாநகராட்சியின் முதல் கட்டமாக 50 லட்சம் முக கவசங்கள் இலவசமாக குடிசைப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு தொடர்ந்து வினியோகிக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் ராயபுரம் மண்டலத்தில் அதிக நோய் பாதிப்பு உள்ளது. எனவே ராயபுரம் மண்டலத்தில் தொற்று அதிகமாக உள்ள 10 பகுதிகளில் உள்ளவர்களை, தேவை ஏற்பட்டால் அருகில் உள்ள சமுதாயக்கூடங்களில் மாற்றும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

சவால்

சென்னையில் 6 அல்லது 7 மண்டலங்களில் நோய் தாக்கம் குறைவாக உள்ளது. இதில் கோடம்பாக்கம் மற்றும் வளசரவாக்கம் மண்டலங்கள் மிகவும் சவாலாக உள்ளது. கோயம்பேடு பகுதி மூலம் கொரோனா நோய் தொற்று அதிகம் பரவ வாய்ப்பு உள்ளதால், அந்த பகுதியில் கபசுர குடிநீர் உள்ளிட்ட மருந்துகள் பகுதி, பகுதியாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இது விரிவுப்படுத்தப்படும்.

திரு.வி.க.நகர், தேனாம்பேட்டை, தண்டையார்பேட்டை ஆகிய பகுதிகளில் நோய் தொற்றின் தாக்கம் தற்போது குறைந்து வருகிறது.

2 ஆயிரம் குடியிருப்புகள்

சென்னையில் 2 ஆயிரம் குடியிருப்புகள் மிகவும் நோய் பாதிக்கக்கூடிய பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது. இதில் 75 வீடுகளுக்கு ஒரு நபர் என்ற அடிப்படையில் வீடுவீடாக சென்று அங்கு பாதிப்பு இருக்கிறதா? என்று சோதனை செய்யப்படும். மேலும் அந்த பகுதிகளில் காய்ச்சல் முகாம்கள் அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் சீரமைக்கப்பட்டதால், சுமார் 120-க்கும் மேற்பட்ட பகுதிகள் 14 நாட்களுக்கு பிறகு குறைந்துள்ளது.

சென்னையில் சுகாதாரத்துறையின் கணக்கீட்டின்படி கொரோனா பாதிக்கப்பட்ட 80 சதவீத பேருக்கு அறிகுறி இல்லாமல்தான் இருக்கிறது. மேலும் 25 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் தான் 70 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையின் 65 வார்டுகளில் நோய் தொற்று தொடங்கிய முதல் 10-க்கும் குறைவாகவே பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர். மேலும் 77 வார்டுகளில் 30-க்கும் குறைவாகவே கொரோனா நோயாளிகள் உள்ளனர்.

250 பேர் ‘டிஸ்சார்ஜ்’

தினந்தோறும் குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்படுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வரும் 2 நாட்களில் 250 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்ய வாய்ப்பு உள்ளது. இந்தியாவிலேயே சென்னையில் மட்டும் தான் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டை சளி மற்றும் ரத்த பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. வரும் நாட்களில் முன்னேற்றம் ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து பேசிய பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ், ‘பெருநகர சென்னை மாநகராட்சியின் 98 முகாம்களில் உள்ளவர்களில், மேற்கு வங்காளம் தவிர்த்து, 22 ஆயிரம் வெளி மாநிலத்தொழிலாளர்களை சொந்த ஊர் அனுப்பியிருக்கிறோம். இனிமேல் 5 நோயாளிகளுக்கு மேல் வந்தால் தான் அவர்கள் இருக்கும் தெரு, கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படும். ஒருவர், 2 பேர் வந்தால் அந்த வீடுகள் மட்டும் கட்டுப்படுத்தப்பட்ட இடமாக இருக்கும் என தெரிவித்தார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad