Type Here to Get Search Results !

பயங்கரவாத வழக்கில் கைது செய்யப்பட்ட 12 பேர் மர்ம மரணம்; விவசாயிகளுக்கு 2 லட்சம் கோடி: சாலையோர வியாபாரிகளுக்கு 10,000 - நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்புகள்

புர்கினாபாசோவில் பயங்கரவாத வழக்கில் கைது செய்யப்பட்ட 12 பேர் மர்ம மரணம்
மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினாபாசோவில் அல்-கொய்தா மற்றும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கங்களின் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்களுக்கு எதிராக அந்த நாட்டு ராணுவம் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை தலைநகர் வாகடூகுவில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பயங்கரவாத தடுப்பு படை போலீசார் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறி புலாஸ் என்ற பழங்குடியினத்தை சேர்ந்த 25 பேரை கைது செய்தனர்.

பின்னர் அவர்கள் விசாரணைக்காக வாகடூகுவில் உள்ள ஒரு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர்.  அங்கு அவர்கள் லாக்அப்பில் அடைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை லாக்அப்பில் அடைக்கப்பட்டிருந்த 25 பேரில் 12 பேர் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். அவர்களின் மரணத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இது குறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்த போலீசாரே அவர்களை கொலை செய்ததாக அந்த நாட்டு மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டி உள்ளன.

விவசாயிகளுக்கு 2 லட்சம் கோடி: சாலையோர வியாபாரிகளுக்கு 10,000  - நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்புகள்
கொரோனா ஊரடங்கால் தொழில்துறைகள் முடங்கியுள்ள நிலையில், பொருளாதாரம் படுவீழ்ச்சி அடைந்து வருகிறது. இதனை மீட்கும் வகையில் 20 லட்சம் கோடிக்கான சலுகைகள் அறிவிக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். அதன்படி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று முன்தினம் முதல் கட்டமாக சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் உட்பட பல்வேறு துறைகளுக்கு, 5.94 லட்சம் கோடிக்கான சலுகை திட்டங்களை அறிவித்தார். நேற்று 2வது கட்டமாக, 3.16 லட்சம் கோடிக்கான சலுகைகளை அறிவித்தார். அவை வருமாறு:

* கிசான் கடன் அட்டை மூலம் 2.5 கோடி விவசாயிகளுக்கு 2 லட்சம் கோடி கடன் வழங்கப்படும். விவசாயிகள் மட்டுமின்றி, மீனவர்கள், கால்நடை வளர்ப்பு சார்ந்தவர்களுக்கும் இந்த கடன் சலுகை உண்டு.

* பல்வேறு மாநிலங்களில் உள்ள 8 கோடி புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவும் வகையில், அவர்களுக்கு 3,500 கோடி மதிப்பில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் அல்லது மாநில பொது விநியோக திட்டம் மூலம் ஒரு நபருக்கு தலா 5 கிலோ உணவு தானியம் மற்றும் ஒரு கிலோ பருப்பு 2 மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.

* சாலையோர வியாபாரிகளுக்கு செயல் மூலதன கடனாக 10,000 வரை வழங்கப்படும். இதற்காக 5,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதன்மூலம், 50 லட்சம் வியாபாரிகள் பலன் அடைவார்கள்.

* வங்கியில் கடன் வாங்கி வீடு வாங்குவோருக்கு மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. இந்த திட்டம் கடந்த 2017 மே முதல் அமலில் உள்ளது. ஆண்டு வருவாய் 6 லட்சம் முதல் 18 லட்சம் வரை உள்ளவர்கள் பலன் பெறுகின்றனர். கடந்த மார்ச் மாதத்துடன் முடிந்த இந்த திட்டம் அடுத்த ஆண்டு மார்ச் வரை நீட்டிக்கப்படுகிறது. இது கட்டுமான துறை வளர்ச்சிக்கும், வேலை வாய்ப்புக்கும் உதவும். இந்த திட்டத்தால் இதுவரை 3.3 லட்சம் குடும்பங்கள் பயன் பெற்றுள்ளன. நீட்டிப்பால் மேலும் 2.5 லட்சம் பேர் பலன் அடைவார்கள்.

* ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முழுமையாக செயல்படுத்தப்படும். இந்த ஆண்டு ஆகஸ்ட்டில் 23 மாநிலங்களில் உள்ள 67 கோடி பேர் இதனால் பலன் பெறுவார்கள்.

* கிசான் அட்டை மூலம் இதுவரை 25 லட்சம் புதிய கிசான் கிரெடிட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. மொத்தம் 4.22 லட்சம் கோடி கடன் பெற்ற 3 கோடி விவசாயிகள்,
3 மாத தவணை சலுகையை பயன்படுத்தி உள்ளனர்.

* கடனை முறையாக திருப்பி செலுத்திய விவசாயிகளுக்கு வழங்கப்படும் 2 சதவீத வட்டி குறைப்பு சலுகை மே 31 வரை நீட்டிக்கப்படுகிறது.

* நபார்டு மூலம் கூடுதலாக அவசர பணி முதலீடாக விவசாயிகளுக்கு கூடுதலாக 30,000 கோடி வழங்கப்படும். இதன்மூலம், சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகள் 3 கோடி பேர் பலன் பெறுவார்கள்.

* அமைப்பு சாரா தொழிலாளர்கள் உட்பட அனைத்து தின கூலிகளுக்கும் பணி நியமனம் கடிதம் வழங்க வகை செய்யப்படும். இதனால் தொழிலாளர்கள் ஆண்டுதோறும் உடல் நல பரிசோதனை உள்ளிட்ட பலன்களை அடைவார்கள். குறைந்தபட்சம் 10 ஊழியர்கள் இருந்தாலே அந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் இஎஸ்ஐ திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள்.

* நகர்புற ஏழைகளுக்கு குறைந்த விலையில் குறைந்த வாடகையில் தங்கும் வகையில் குடியிருப்பு ஏற்படுத்தப்படும்.

* மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களும் சேர்க்கப்படுவார்கள். இவர்களுக்கு மாநிலங்கள் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். மழைக் காலத்திலும் இந்த திட்டத்தின் கீழ் பணி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

* புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு முகாம்கள் அமைக்க, உணவு மற்றும் குடிநீர் வழங்க மாநில பேரிடர் நிதியை பயன்படுத்தி கொள்ள மாநில அரசுகளுக்கு அனுமதி வழங்கப்படும்.

* மாநில பேரிடர் நிதிக்கான மத்திய அரசின் பங்களிப்பு ரூ.11,002 கோடியை கடந்த ஏப்ரல் 3ம் தேதி மத்திய அரசு வழங்கியுள்ளது.

* முகாம்களில் தங்கியுள்ள நகர்ப்புற வீடு இல்லாதவர்களுக்கு கடந்த மார்ச் 28ம் தேதி முதல் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்ட உணவு தினமும் 3 முறை வழங்கப்படுகிறது.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

முத்ரா கடன் வட்டி சலுகை
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சிக்காக முத்ரா திட்டம் கொண்டு வரப்பட்டது. சிசு, கிஷோர், தருண் ஆகிய மூன்று பிரிவுகளில் இந்த கடன்கள் வழங்கப்படுகின்றன. சிசு கடன் பிரிவில் 50,000 வரை கடன் பெறலாம். இந்த பிரிவில் கடன் பெற்றவர்கள் வட்டியை முறையாக திருப்பி செலுத்தினால், அவர்களுக்கு 12 மாதங்களுக்கு 2 சதவீத வட்டி குறைப்பு செய்யப்படும். முத்ரா சிசு பிரிவில் 1.62 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad