Type Here to Get Search Results !

தங்கச்சுரங்கத்தில் 1,000 அடி ஆழத்தில் இறங்கி திருட முயற்சி: 3 பேர் மூச்சுத்திணறி சாவு; கோயிலில் நகைகள் கொள்ளை

தங்கச்சுரங்கத்தில் 1,000 அடி ஆழத்தில் இறங்கி திருட முயற்சி; 3 பேர் மூச்சுத்திணறி சாவு - போலீஸ் விசாரணை
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் கோலார் தங்கவயல் தங்கம் உற்பத்தியில் சிறந்து விளங்கியது. இந்த தங்கச்சுரங்கத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர். தற்போது அந்த தங்கச்சுரங்கத்தை மத்திய அரசு மூடி உள்ளது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கச்சுரங்கம் மூடியே கிடக்கிறது. தங்கச்சுரங்கத்தில் தங்க வளம் இருந்து வந்தாலும், பல்வேறு காரணங்களால் மத்திய அரசு தங்கச்சுரங்கத்தை திறக்க அனுமதி மறுத்து வருகிறது.

தங்கவயலில் பல்வேறு பகுதிகளில் 25-க்கும் அதிகமான சுரங்கங்கள் அமைந்துள்ளன. இந்த தங்கச்சுரங்கத்துக்குள் இறங்கி தங்கம் திருடுவதை மர்மநபர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் தங்கச்சுரங்க பாதுகாவலர்கள் குடியிருப்பு பகுதியில் பராமரிப்பு பணியில் மட்டும் ஈடுபடுகிறார்கள். தங்கச்சுரங்க பகுதியில் காவலுக்கு நிற்பதில்லை. தங்கம் திருடுவதை தடுக்கவும் முறையான நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நந்திதுர்கம் மில் பகுதியில் தங்கச்சுரங்கத்தில் காவலர்கள் கண்எதிரிலேயே மர்மநபர்கள் சுரங்கத்துக்குள் புகுந்து தங்கம் திருடி சென்றனர். இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

தங்கம் திருட முயற்சி

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கோலார் தங்கவயல் மாரிக்குப்பம் அன்காக்ஸ் அருகே மைசூரு மைனிங் பகுதியில் உள்ள சுரங்கத்தில் இறங்கி 6 மர்மநபர்கள் தங்கம் திருட திட்டமிட்டுள்ளனர். அவர்களில் 5 பேர் தங்கச்சுரங்கத்துக்குள் சுமார் 1,000 அடியில் இறங்கி தங்கத்தை திருட முயன்றனர். ஆனால், தங்கம் திருட சுரங்கத்திற்குள் இறங்கியவர்கள் வெகு நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் மேலே இருந்த ஒருவர், எவ்வளவு சத்தம் கொடுத்தும் சுரங்கத்தில் இருந்தவர்கள் எந்த பதிலும் அளிக்கவில்லை. இதனால் அவர்கள் இறந்திருக்கலாம் என கருதிய அவர், உள்ளே இறங்கியவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து உள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், மாரிகுப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுபற்றி அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டுள்ளனர். அதற்குள் அங்கிருந்தவர் தப்பியோடிவிட்டார். பின்னர், சம்பவ இடத்துக்கு தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் கோலார் தங்கவயல் போலீஸ் சூப்பிரண்டு முகமது சுஜிதா, துணை போலீஸ் சூப்பிரண்டு உமேஷ் மற்றும் பெங்களூரு கிழக்கு தலைமை தீயணைப்பு படை அதிகாரி குருலிங்கய்யா ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் மீட்பு பணியை முடுக்கி விட்டனர். முதலில், உள்ளே சிக்கியவர்களின் நிலை என்ன என்பது போலீசாருக்கு தெரியவில்லை. இதனால், தீயணைப்பு படையினர் பாதுகாப்பு உபகரணங்களுடன் தங்கச்சுரங்கத்திற்குள் இறங்கினார்கள். அப்போது சுமார் 1,000 அடி ஆழம் கொண்ட தங்கச்சுரங்கத்திற்குள் சுமார் 20 அடியில் 2 பேர் மயங்கி கிடந்தனர். அவர்களை தீயணைப்பு படையினர் மீட்டனர். மேலும், 60 அடியில் ஒருவரும், 80 அடியில் ஒருவரும் பிணமாக கிடந்தனர். அவர்களை தீயணைப்பு படையினர் நீண்ட போராட்டத்துக்கு பின்னர் இரவு 1 மணி அளவில் மீட்டு மேலே கொண்டு வந்தனர்.

சுரங்கத்துக்குள் இறங்கிய மற்றொருவர் உயிரிழந்தது தெரியவந்தது. மேலும், அவருடைய உடல் 80 அடி வரையிலும் கிடைக்கவில்லை. இதனால் இன்னும் கீழே அவருடைய உடல் கிடக்கலாம் என தெரிகிறது. அவருடைய உடலை தேடும் பணி நடந்து வருகிறது. தங்கச்சுரங்கத்திற்குள் 1,000 அடி ஆழத்தில் இறங்கி, தங்கம் திருட முயன்றபோது அவர்கள் 3 பேரும் ஆக்சிஜன் கிடைக்காமல் மூச்சுத்திணறி தவறி பள்ளத்தில் விழுந்து இறந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். மயக்க நிலையில் உள்ள 2 பேரும், தங்கவயல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மாரிகுப்பம் போலீசார் நடத்திய விசாரணையில், பலியானவர்கள் ஆண்டர்சன்பேட்டை லூர்து நகரை சேர்ந்த கந்தா (வயது 55), அவருடைய மகன் சந்தோஷ் என்கிற படையப்பா (20), சூசைப்பாளையாவை சேர்ந்த ஜோசப் (45) என்பதும், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்கள் மஸ்கம் சாம்ராஜ்பேட்டையை சேர்ந்த விக்டர் (37), லூர்து நகரை சேர்ந்த கார்த்திக் (39) என்பதும் தெரியவந்துள்ளது. மேலும், தங்கச்சுரங்கத்திற்குள் இறங்கி திருட திட்டம் தீட்டியது ரிச்சர்டு என்பதும், அவர் தற்போது தலைமறைவாக இருப்பதும் தெரியவந்தது. இறந்த 3 பேரின் உடல்களை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர். அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தங்கச்சுரங்கத்தில் சிக்கி உயிரிழந்த கந்தாவின் உடலை தீயணைப்பு படையினர் நேற்றும் தொடர்ந்து தேடினார்கள். ஆனாலும் அவருடைய உடல் கிடைக்கவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைக்கு போலீஸ் சூப்பிரண்டு முகமது சுஜிதா உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த ரிச்சர்டை போலீசார் நேற்று மாலை கைது செய்தனர்., அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோயிலில் நகைகள் கொள்ளை
செங்குன்றம் அடுத்த வடபெரும்பாக்கம் புழல் யூனியன் சாலையில் பழமையான ராவல் கன்னியம்மன் கோயில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு வழக்கமான பூஜைகள் முடிந்து பூசாரி கோயிலை பூட்டிவிட்டு சென்றார். நள்ளிரவில் கோயில் முன்பக்க கதவை உடைத்து மர்ம நபர்கள் அம்மன் கழுத்தில் இருந்த தங்க சங்கிலி, வெள்ளியால் ஆன பூஜை பொருட்களை கொள்ளையடித்து தப்பிசென்றனர். இந்நிலையில், நேற்று காலை பூசாரி கந்தசாமி கோயிலை திறக்க வந்தார். அப்போது, கோயிலின் கதவு உடைக்கப்பட்டு, 50 ஆயிரம் மதிப்புள்ள நகை மற்றும் பூஜை பொருட்கள் கொள்ளை போனது தெரியவந்தது.

மேலும், திருடர்கள் உண்டியலை உடைக்க முடியாததால், அதில் இருந்த பணம் கொள்ளை போகாமல் தப்பியது.  இதுகுறித்த புகாரின்பேரில், செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதி சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் கோயில் கொள்ளையில் ஈடுபட்ட மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad