Type Here to Get Search Results !

பிற மாநிலங்களில் வேலை செய்யும் நாகையை சேர்ந்தவர்கள் சொந்த ஊர் திரும்ப இணைய தளத்தில் பதிவு செய்யலாம்; காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை இன்று முதல் கடைகளை திறக்க அனுமதி - கலெக்டர்

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்! 
பிற மாநிலங்களில் வேலை செய்யும் நாகையை சேர்ந்தவர்கள் சொந்த ஊர் திரும்ப இணைய தளத்தில் பதிவு செய்யலாம்

பிற மாநிலங்களில் வேலை செய்யும் நாகையை சேர்ந்தவர்கள் சொந்த ஊர் திரும்ப இணைய தளத்தில் பதிவு செய்யலாம் என நாகை கலெக்டர் பிரவீன்நாயர் கூறினார்.

நாகை மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்காமல் வெளி மாநிலங்கள், சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் யாரேனும் நாகை மாவட்ட பகுதிகளுக்கு வந்திருந்தால் கிராம நிர்வாக அதிகாரிகள், ஊராட்சி செயலாளர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மாவட்ட கட்டுப்பாட்டு அறையை 1077, 04365-251992 ஆகிய தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

இந்தியாவின் பிற மாநிலங்களில் வேலை செய்யும் நாகை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப விருப்பம் இருந்தால் https://rttn.nonresidenttamil.org என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம்.

வெளிமாநில தொழிலாளர்கள்

வெளிமாநிலம் அல்லது வெளிமாவட்டத்தில் இருந்து நாகை மாவட்டத்துக்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர்கள், ஆன்மிக பயணிகள், சுற்றுலா பயணிகள் தங்கள் மாவட்டம் அல்லது மாநிலத்துக்கு திரும்ப செல்வதற்கு https://rtos.nonresidenttamil.org என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்ய முடியாத நபர்கள் அருகில் உள்ள தாசில்தார் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை இன்று முதல் கடைகளை திறக்க அனுமதி: கலெக்டர் மெகராஜ் பேட்டி
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் செயல்படுவது குறித்து வணிகர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் மெகராஜ் தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு அருளரசு முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் ஹார்டுவேர், செல்போன் கடை உள்ளிட்ட கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் அனைத்து கடைகளிலும் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்ற உரிய வழிவகை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

இதையடுத்து கலெக்டர் மெகராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

ஊரடங்கு வருகிற 17-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதில் சில தளர்வுகளும் அனுமதிக்கப்பட்டு உள்ளன. அதன்படி இன்று முதல் கூடுதலாக சில கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

கடை ஊழியர்கள் தன் சுத்தம் பேணுவது, கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிப்பது, முக கவசம் அணிந்து வர வலியுறுத்துவது, கடைகளில் கை சுத்திகரிப்பான் வைப்பது தொடர்பாக வணிகர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. அவர்களும் உரிய ஒத்துழைப்பு தருவதாக தெரிவித்து உள்ளனர்.

அழகு நிலையம், உடற்பயிற்சி கூடம், டீக்கடை போன்றவற்றை கிராமப்புறமாக இருந்தாலும் சரி, நகர்ப்புறமாக இருந்தாலும் சரி திறக்க அனுமதி இல்லை. இதேபோல் நகர்ப்புறங்களில் சூப்பர் மார்க்கெட், பல்பொருள் அங்காடி, ஏ.சி.வசதியுடன் கூடிய வணிக நிறுவனங்கள் போன்றவற்றை திறக்க கூடாது.

காய்கறி மற்றும் மளிகை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்து இருக்கலாம். ஓட்டல்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்து இருக்கலாம். ஆனால் பார்சல் கொடுக்க மட்டுமே அனுமதி உண்டு. இரும்பு மற்றும் சிமெண்டு உள்ளிட்ட ஹார்டுவேர்ஸ் கடைகள், செல்போன் கடைகள், கண்ணாடி கடைகள் மற்றும் பழுது நீக்கும் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே திறந்து இருக்கும்.

இறைச்சி கடைகளை பொறுத்த வரையில் சமூக இடைவெளியை பின்பற்றி நடத்தலாம். விதிமீறல் இருந்தால் கடைக்கு ‘சீல்’ வைக்கப்படும். நாமக்கல் மாவட்டத்தில் இருந்து முட்டைகளை ஏற்றி செல்லும் லாரிகளை சோதனை செய்வது இல்லை. முட்டைகளை இறக்கிவிட்டு வரும் லாரிகளை மட்டுமே சோதனை செய்கிறோம். இதனால் எவ்வித இடையூறும் இல்லை.

சோதனை சாவடிகளில் இதுவரை 250 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 170 பேருக்கு கொரோனா இல்லை என முடிவு வந்து உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது என்று அவர் கூறினார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சமூக விலகலை கடைபிடித்து பணியை மேற்கொள்ள வேண்டும்: கலெக்டர் பிரபாகர் தகவல்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சமூக விலகலை கடைபிடித்து பணியை மேற்கொள்ளவேண்டும் என்று கலெக்டர் பிரபாகர் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பரவுவதை தடுக்கும் பொருட்டு, தமிழக முதல்-அமைச்சரால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு நேற்று முதல் வருகிற 17-ந் தேதி நள்ளிரவு வரை சில நிபந்தனைகளுடன் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்த உத்தரவின்படி வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட கடைகள் நிபந்தனைகளுக்கு உட்பட்டு செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது. கட்டுமான பணிகளுக்கு தேவையான ஹார்டுவேர், சிமெண்டு, கட்டுமான பொருட்கள், சானிடரிவேர், மின் சாதன பொருட்கள் விற்பனை கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

கட்டுமான பொருட்களை எடுத்து செல்ல எந்தவித தடையும் இல்லை. செல்போன், கணிப்பொறி, வீட்டு உபயோக பொருட்கள், மின் மோட்டார் ரிப்பேர், கண் கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்குதல் உள்ள தனிக்கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். கிராமப்புறங்களில் உள்ள அனைத்து தனிக்கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.

மேலும் அச்சகங்கள் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் மட்டும் வழங்கலாம். மின் வணிக நிறுவனங்கள் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டவாறு செயல்படலாம். ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி குளிரூட்டப்பட்ட (ஏ.சி.) நகை மற்றும் துணி விற்பனை செய்யும் வணிக நிறுவனங்கள், பல்பொருள் அங்காடிகள் (டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ்) இயங்க அனுமதியில்லை.

டீக்கடைகள், லாட்ஜ்கள், சினிமா தியேட்டர்கள் போன்றவை இயங்க அனுமதி இல்லை. சுய தொழில் புரியும் பிளம்பர்கள், எலக்ட்ரீசியன், ஏ.சி. மெக்கானிக்குகள், தச்சர்கள் உள்ளிட்டோர் மாவட்ட கலெக்டரிடம் உரிய அனுமதி பெற்று பணி செய்யலாம். அனைத்து பொதுமக்களும், வணிக நிறுவனங்களும் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்குமாறும், சமூக விலகலை கடைபிடித்து பணியை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறேன்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad