Type Here to Get Search Results !

நெல்லை பணகுடியில் பொதுமக்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் வீடு வீடாக சென்று போலீஸ் இன்ஸ்பெக்டர் வழங்கினார்

பணகுடியில் பொதுமக்களுக்கு அரிசி, மளிகை பொருட்களை போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல்அமீது வீடு வீடாக சென்று நேரில் வழங்கினார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையால் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் நெல்லை மாவட்டம் பணகுடி, பழவூர் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பணகுடி, காவல்கிணறு, வடக்கன்குளம், பழவூர் மற்றும் கிராமங்களை சேர்ந்த ஏழை மக்கள் உணவு பொருட்கள் இல்லாமல் தவித்து வருகின்றனர். இதனை அறிந்த பணகுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல்அமீது, தன்னார்வலர்கள் மூலம் சுமார் ஆயிரம் குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி மற்றும் மளிகை பொருட்களை வாங்கி ஏழை குடும்பங்களுக்கு வீடு வீடாக சென்று வழங்கினார்.

மேலும் பணகுடி சுற்று வட்டார கிராமங்களில் தண்ணீர் டேங்கர் லாரிகள் மூலம் கிருமிநாசினி தெளிக்க ஏற்பாடு செய்து, 10 ஆயிரம் முக கவசங்கள், 2 ஆயிரம் கையுறைகளை தன்னார்வலர்களிடம் வழங்கினார். 144 தடை உத்தரவுக்கு பிறகு பணகுடி, காவல்கிணறு, வடக்கன்குளம், பழவூர் பகுதிகளில் சாலையோரம் உணவின்றி தவித்த 100 பேருக்கு தினமும் மதிய உணவு கிடைக்க ஏற்பாடு செய்தார்.

சிறுவர்- சிறுமிகள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்க கொரோனா ஒழிப்பு பற்றிய போட்டிகளை வாட்ஸ்அப் மூலம் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு வீடு வீடாக சென்று பரிசு பொருட்களை வழங்கவும், பணகுடி பஸ்நிலையத்தில் கிருமி நாசினி சுரங்கப்பாதை அமைக்கவும் ஏற்பாடு செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் சாகுல்அமீது செய்து வரும் சேவைகளுக்கு தன்னார்வலர்களும், பொதுமக்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

நடமாடும் ஏ.டி.எம். வசதி

full-width பணகுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல் அமீது முயற்சியின் பேரில் பணகுடி சுற்று வட்டார பகுதிகளில் அவசர தேவைகளுக்கு பணம் எடுக்க வசதியாக நடமாடும் ஏ.டி.எம் எந்திரம் திட்டம் தொடங்கப்பட்டது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் சிவகாமிபுரம், தளவாய்புரம், ரோஸ்மியாபுரம், வடலிவிளை, தெற்கு வள்ளியூர், கடம்பன்குளம், பாம்பன்குளம் கிராமங்களுக்கு நடமாடும் ஏ.டி.எம். எந்திரம் வாகனம் சென்றது. இதில் ஏராளமானோர் பணத்தை எடுத்துச் சென்றனர்.

மலைவாழ் மக்களுக்கு உணவுப்பொருட்கள்
மலைவாழ் மக்களுக்கு போலீசார் உணவுப்பொருட்கள் வழங்கினர்.

கொரோனா வைரஸ் பரவல் பீதியால் உலகமே முடங்கி போய் உள்ள நிலையில் வேலை இழந்து தவித்து வரும் ஏழை, எளிய மக்களுக்கு அரசியல் கட்சிகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள், தொழிலதிபர்கள், போலீசார் உதவிக்கரம் நீட்டி வருகிறார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள செண்பகத்தோப்பு பகுதியில் வசிக்கும் மலைவாழ்மக்கள் மற்றும் ஆடு மேய்க்கும் தொழிலாளர் குடும்பத்திற்கு மதுரை மண்டல டி.ஐ.ஜி. ஆனி விஜயா நகர் காவல் துறையினர் சார்பில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகளை 70 குடும்பங்களுக்கு வழங்கினார். அப்போது ஸ்ரீவில்லிபுத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், நகர் இன்ஸ்பெக்டர் பவுல் ஏசுதாஸ் ஆகியோர் உடனிருந்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுல் ஏசுதாஸ் மொட்டமலை பகுதி மற்றும் செண்பகத்தோப்பு அருகே உள்ள ஆட்டுவலசல் பகுதியில் உள்ள 100 ஏழை குடும்பத்தினருக்கு தலா 5 கிலோ அரிசி மற்றும் மளிகை பொருட்களை தனது சொந்த செலவில் வழங்கினார். மேலும் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் பகுதியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவல்துறையினர், வருவாய்த்துறையினர், சுகாதார பணியாளர்கள் 150-க்கும் மேற்பட்டோருக்கு தினமும் 3 வேளை உணவினை தொண்டு நிறுவனத்தோடு இணைந்து வழங்கி வருகிறார்.

ரெடிமிங் ஹேண்ட்ஸ் அறக்கட்டளை சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா சுந்தரபாண்டியம், ராமச்சந்திராபுரம், ரெங்கப்பநாயக்கன்பட்டி, கிருஷ்ணன்கோவில், குன்னூர், நத்தம்பட்டி, குன்னூர் புதூர், அழகாபுரி, பூவாணி, ராமகிருஷ்ணாபுரம், பிள்ளையார்நத்தம், இந்திராநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாலையோரத்தில் பசியால் வாடுவோருக்கு மதிய உணவு வழங்கி வருகிறார்கள்.

தாயில்பட்டி

தாயில்பட்டியில் ஆதரவற்றோர், அரசு உதவி பெறாதவர்கள், ரேஷன்கார்டு இல்லாதவர்களுக்கு வெம்பக்கோட்டை போலீசார் சார்பில் 5 கிலோ அரிசி, 11 வகையான மளிகை சாமான்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அதனை சாத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமகிருஷ்ணன் வழங்கினார். வெம்பக்கோட்டை இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் சதீஸ்குமார் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

இலங்கை அகதிகள்

ராஜபாளையம் மொட்டமலை அருகில் உள்ள இலங்கை அகதிகள் உள்ளிட்டோருக்கு சுரன் நர்சிங் கல்லூரி மற்றும் குவைத்ராஜா மக்கள் சமூக இயக்கம் சார்பில் நல உதவி வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு நற்பணி மன்ற தலைவர் குவைத்ராஜா தலைமை வகித்தார். போலீஸ் சூப்பிரண்டு பெருமாள் அரிசி பை, காய்கறிகள், மளிகை, பால் உள்ளிட்டவற்றை வழங்கினார். 11-வது பட்டாலியன் கமாண்டன்ட் ஜனகன், ராஜபாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு நாகசங்கர், இன்ஸ்பெக்டர்கள் மாரியப்பன், பவுல் ஏசுதாஸ், 11-வது சிறப்பு படை வீரர்கள் பங்கேற்றனர்.

சேத்தூர்

சேத்தூரில் நகர ரஜினி மக்கள் மன்றம் சார்பில் பொது மக்களுக்கு இலவசமாக முக கவசம் வழங்கும் பணி நடைபெற்றது. இதில் சேத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காளிதாஸ், கல்லூரி மாணவி கவுசல்யா, மேற்கு ஒன்றிய ரஜினி மக்கள் மன்ற செயலாளர் மாடசாமி, துணை செயலாளர் அண்ணாமலை, இளைஞர் அணி பொறுப்பாளர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வத்திராயிருப்பு

வத்திராயிருப்பு அருகே உள்ள மகாராஜாபுரத்தில் ஏழை, எளியவர்களுக்கும் மற்றும் ஆதரவற்றவர்களுக்கும் தினமும் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சார்பில் அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஏற்பாடுகளை முன்னாள் மாணவர் சங்க தலைவர் ஜெயக்குமார், செயலாளர் அன்புராஜ், பொருளாளர் அனுசியா ஜெயராமன், நிர்வாக குழு உறுப்பினர்கள் அழகுராஜா, காளியப்பன், யூசுப், சுமதி, ராஜலட்சுமி ஆகியோர் செய்துள்ளனர். இதைபோல் வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜார், அக்ரகாரம் தெருக்கள், நாடார் பஜார் ஆகிய முக்கிய இடங்களில் பொதுமக்களுக்கு இளைஞர்கள் மற்றும் சமூக சேவகர்கள் கபசுர குடிநீர்வழங்கி வருகின்றனர்.

சிவகாசி

சிவகாசியில் மனநலம் பாதிக்கப்பட்டு சாலையில் திரிந்துகொண்டிருந்தவர்களுக்கும், வீடு இல்லாமல் சாலையோரம்வசித்து வருபவர்களுக்கும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் உணவு, தண்ணீர் பாட்டில், முககவசங்களை நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், காளிராஜன், சைலோரமேஷ், ரவிசார்லஸ், தளபதி ஈசன், குச்சன்பாண்டீஸ்வரன் ஆகியோர் வழங்கினார்கள். தேவர்குளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் ஏழைகள் மற்றும் தூய்மை பணியாளர்கள் 200 பேருக்கு பஞ்சாயத்து தலைவர் முத்துவள்ளி மச்சக்காளை அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கினார்.

சிவகாசி முஸ்லிம் தொழில் வர்த்தக சங்கம் சார்பில் ஏழைகள் 300 பேருக்கு சங்கத்தின் தலைவர் எம்.எஸ்.எல்.சேட் அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கினார். விஸ்வநத்தம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பஞ்சாயத்து தலைவர் நாகராஜன் கபசுர குடிநீர் வழங்கினார். சிவகாசி யூனியன் அலுவலகம் முழுவதும் கிருமிநாசினியை தீயணைப்பு வாகனம் மூலம் தெளிக்கப்பட்டது. இதை யூனியன் துணைத்தலைவர் விவேகன்ராஜ் தொடங்கி வைத்தார். வட்டார வளர்ச்சி அதிகாரிகள் ரவி, ராமமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். ஆனையூர் பஞ்சாயத்து தலைவர் லயன் லட்சுமிநாராயணன் முன்னிலையில் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பல இடங்களில் தீயணைப்பு வாகனம் உதவியுடன் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. செங்கமலநாச்சியார்புரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் தீயணைப்பு வாகனம் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணியினை பஞ்சாயத்து தலைவர் கருப்பசாமி தொடங்கி வைத்தார்.

அரிமா சங்கம்

சிவகாசியில் மருத்துவ பணியாளர்களுக்கும், காவல்துறையினருக்கும் சிவகாசி மற்றும் திருத்தங்கல் நகராட்சி பணியாளர்களுக்கும் சிவகாசி அரிமா சங்கத்தின் சார்பில் மதிய உணவு இலவசமாக வழங்கப்பட்டது. தனது சொந்த செலவில் சிவகாசி அரசன் குரூப் நிர்வாக இயக்குனரும் சிவகாசி நகர்மன்ற முன்னாள் தலைவரும் சிவகாசி அரிமா சங்கத்தை சேர்ந்தவருமான சிவகாசி அரசன் ஏ.எம். எஸ்.ஜி. அசோகன் வழங்கினார். அவருக்கு அனைவரும் நன்றி கூறினர்.

செட்டியார்பட்டி ஒட்டம்பட்டி கோவில் தெருவில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த அருண்குமார் உள்பட 6 வாலிபர்கள் கடந்த 5 மாதங்களாக வசித்து வருகின்றனர். இவர்கள் குல்பி ஐஸ் தயாரித்து தெருக்களில் வியாபாரம் செய்து வந்தனர். ஊரடங்கு உத்தரவினால் இவர்கள் தொழில் பாதிப்பு அடைந்து வருமானம் இழந்து தவித்தனர். இவர்களுக்கு தாசில்தார்கள் ஆனந்தராஜ், முத்துலட்சுமி, துணை தாசில்தார்கள் விஜிமாரி, வருவாய் ஆய்வாளர்கள் முத்துராமலிங்கம், கற்பகம், அழகர்ராஜ் ஆகியோர் 25 கிலோ அரிசி, 6 கிலோ கோதுமை மாவு, 22 வகை பலசரக்கு சாமான்கள் மற்றும் காய்கறிகளை இலவசமாக வழங்கினார்கள்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad