Type Here to Get Search Results !

நர்சிங் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை; விழுப்புரம் பிளஸ்-2 மாணவன் மின்னல் தாக்கி சாவு

ஜெயங்கொண்டம் அருகே நர்சிங் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஜெயங்கொண்டம் அருகே தண்டலை கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வீரமணி. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகள் அபிராமி(வயது 17). இவர் கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

full-width ஊரடங்கு உத்தரவால் தற்போது கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், அபிராமி வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாதநேரத்தில், மின் விசிறியில் தனது துப்பட்டாவால் தூக்குப்போட்டு அவர் தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீசார், அபிராமியின் உடலை கைப்பற்றி, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மானூர் அருகே, வரதட்சணை கொடுமையால் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை
மானூர் அருகே வரதட்சணை கொடுமையால் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக நெல்லை உதவி கலெக்டர் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள கரம்பையை சேர்ந்தவர் ஈஸ்வரன் மனைவி பேச்சியம்மாள் (வயது 29). இவர்களுக்கு திருமணம் முடிந்து 6 மாதங்கள் ஆகிறது.

இந்தநிலையில் கூடுதல் வரதட்சணை கேட்டு ஈஸ்வரன் குடும்பத்தினர் பேச்சியம்மாளிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளனர். இதனால் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் பேச்சியம்மாள் கோபித்துக் கொண்டு நெல்லை டவுன் கருப்பந்துறையில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றார். பின்னர் சமாதானம் ஏற்பட்டு கணவர் வீட்டுக்கு பேச்சியம்மாள் வந்தார்.

வந்த அன்றே தனது வீட்டின் பின்புறம் உள்ள முட்புதரில் வைத்து பேச்சியம்மாள் விஷம் குடித்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு காரில் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், பேச்சியம்மாள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து பேச்சியம்மாளின் தந்தை ராமலிங்கம் (78) மானூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் தாழையூத்து துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்னரசு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

திருமணம் முடிந்து 6 மாதங்களே ஆனநிலையில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து நெல்லை உதவி கலெக்டர் மணீஷ் நாரணவரே மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

விழுப்புரம் மேல்மலையனூர் அருகே, மின்னல் தாக்கி பிளஸ்-2 மாணவன் சாவு
மேல்மலையனூர் அருகே மின்னல் தாக்கியதில் பிளஸ்-2 மாணவன் பரிதாபமாக இறந்தான். இதுபற்றிய விவரம் வருமாறு:-

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே உள்ள பருதிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜகோபால், விவசாயி. இவருடைய மகன் அஜித் என்கிற மணி (வயது 17). இவன் சேத்துப்பட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து விட்டு, தற்போது நடந்து முடிந்த பொதுத்தேர்வை எழுதி இருந் தான். நேற்று காலை அஜித், தங்களுக்கு சொந்தமான மாடுகளை வீட்டின் அருகே உள்ள வயலில் மேய்ச்சலுக்காக விட்டிருந்தான்.

இந்த நிலையில் மாலை 4.30 மணிக்கு வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து, தூறல் விழ தொடங்கியது. இதனால் மாடுகள் மழையில் நனையாமல் இருப்பதற்காக, அவைகளை ஓட்டி வந்து கொட்டகையில் கட்டுவதற்காக அஜித், வயல்வெளி பகுதிக்கு சென்றான். அப்போது இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

இதில் மின்னல் தாக்கியதில் அஜித், உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான். இதுபற்றி அறிந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பதறியடித்துக் கொண்டு வந்து அஜித் உடலை பார்த்து கதறி அழுதனர்.

இதற்கிடையே இதுகுறித்த தகவல் அறிந்த அவலூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அஜித் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad