Type Here to Get Search Results !

தேனியில், மேலும் ஒரு பெண்ணுக்கு கொரோனா - பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 40 ஆக உயர்வு

தேனி மாவட்டத்தில் மேலும் ஒரு பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. டெல்லியில் நடந்த மாநாட்டில் பங்கேற்று திரும்பியவர்கள் உள்பட தேனி மாவட்டத்தை சேர்ந்த 23 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதில் பெண் ஒருவர் இறந்தார். மீதமுள்ள 22 பேருக்கு தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


இந்தநிலையில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கும் கொரோனா பாதிப்பு உள்ளதா? என பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களின் வீடு தேடி சென்று பரிசோதனை செய்யும் பணிகள் கடந்த 7-ந் தேதி தொடங்கியது. இதில் போடியை சேர்ந்த 16 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இதனால், தேனி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்தது.

இந்தநிலையில், பெரியகுளம் பகுதியை சேர்ந்த பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 16 பேருக்கு, நேற்று முன்தினம் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அவர்களிடம் இருந்து சளி மாதிரி எடுத்து தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அங்கு ஆய்வு செய்ததில், 20 வயது இளம்பெண் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர், ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் ஒருவரின் மகள் ஆவார். இதனால், மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக தேனி, உத்தமபாளையம், கம்பம், சின்னமனூர் பகுதிகளுக்கு வீடு தேடிச் சென்று கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. தேனியில் 8 பேர், உத்தமபாளையத்தில் 13 பேர், கம்பத்தில் 3 பேர், சின்னமனூரில் 6 பேர் என 30 பேருக்கு சளி மாதிரி எடுத்து பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

தேனியில் பரிசோதனை நடத்தப்பட்டவர்களில் 7 பேர் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர். மற்றொருவர் டெல்லி மாநாட்டுக்கு சென்றவர்களை வாகனத்தில் அழைத்துச் சென்ற டிரைவர் ஆவார். இவர்களில் யாருக்காவது கொரோனா உள்ளதா? என்பது பரிசோதனைக்கு பிறகு தெரியவரும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


சென்னையை அடுத்த பல்லாவரம் நகராட்சி பகுதியில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க 23 சாலைகள் சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை புறநகர் பகுதிகளில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் வசித்த பகுதிகள், சந்தேகத்தின்பேரில் ஆஸ்பத்திரியில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்கள் வசித்த பகுதிகளை சுற்றி 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்குட்பட்ட பகுதிகள் சீல் வைக்கப்பட்டு நோய் தொற்று பரவல் காக்கப்பட்ட பகுதிகளாக மாற்றப்பட்டு உள்ளன. அந்த பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான்லூயிஸ் உத்தரவின்படி தாம்பரம் கோட்டாட்சியர் ராஜ்குமார் தலைமையில் நகராட்சி, சுகாதாரம், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார், தன்னார்வலர்கள் இணைந்து தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

பல்லாவரம் நகராட்சி பகுதியில் நகராட்சி சுகாதார அலுவலர் கோவிந்தராஜ் தலைமையில் துப்புரவு பணியாளர்கள் நோய் தொற்று பரவல் காக்கப்பட்ட பகுதிகளில் கிருமிநாசினி தெளித்து தீவிர துப்புரவு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பல்லாவரம் நகராட்சி பகுதிகளில் அஸ்தினாபுரம் பகுதியில் 6 சாலைகளும், குரோம்பேட்டை சாந்திநகர் பகுதிகளில் 4 சாலைகளும், பல்லாவரம் காமராஜ் நகர் பகுதியில் 4 சாலைகளும், பல்லாவரம் துரைகண்ணு சாலை மசூதி மற்றும் அதை சுற்றியுள்ள அசன்பாஷா சாலை உள்பட 9 சாலைகளும் என 23 சாலைகள் தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டு உள்ளது.

full-width இதேபோல தாம்பரம், செம்பாக்கம், பம்மல், அனகாபுத்தூர் ஆகிய நகராட்சி பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க காக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு 60-க்கும் மேற்பட்ட சாலைகள் மற்றும் தெருக்கள் தடுப்புகள் அமைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு சீல் வைக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டு உள்ளதால், அவர்களுக்கு தேவையான மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தன்னார்வலர்கள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்த பகுதிகள் அனைத்திலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். இந்த பகுதிகளில் உள்ள பொதுமக்கள் வசதிக்காக நடமாடும் ஏ.டி.எம். வாகனங்களும் அந்த பகுதிகளுக்கு சென்று வருகின்றன. பணம் தேவைப்படுவோர் சமூக விலகலை பின்பற்றி இடைவெளிவிட்டு நின்று அந்த வாகனத்தில் பணம் எடுத்து செல்கின்றனர். நகராட்சி சார்பில் காய்கறி வினியோகமும் நடைபெற்று வருகிறது.

தென்காசி மாவட்டத்தில் கொரோனா வார்டாக மாறும் பள்ளிக்கூடம்-கல்லூரிகள்
தென்காசி மாவட்டத்தில் பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரிகள் கொரோனா வார்டாக மாறுகின்றன.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. இருந்தாலும் நாளுக்கு நாள் இதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் அதிகமான நோய் தொற்று உள்ளவர்கள் வரும்போது அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற வேண்டி உள்ளது. அரசு ஆஸ்பத்திரிகளில் இடம் இல்லாத பட்சத்தில் பள்ளி, கல்லூரிகளின் கட்டிடங்களை பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள 8 தாலுகாக்களிலும் 18 பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரி கட்டிடங்களை ஆய்வு செய்து தயார் நிலையில் வைக்குமாறு அதிகாரிகள் குழுக்களை நியமித்து மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, தென்காசி தாலுகாவில் செந்தில் ஆண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி, யூ.எஸ்.பி. கல்வி குழும நிறுவனங்கள், ஸ்ரீராம் நல்லமணி யாதவா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஜே.பி. பொறியியல் கல்லூரி, சிவகிரி தாலுகாவில் வாசுதேவநல்லூர் தங்கப்பழம் பாலிடெக்னிக் கல்லூரி, வியாசா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 50 படுக்கைகள் என மொத்தம் 18 பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டார மருத்துவ அலுவலர்கள், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய குழுவினர் ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவ்வாறு நியமனம் செய்யப்பட்ட அலுவலர்கள் தங்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள கல்வி நிறுவனங்களின் தாளாளர், முதல்வர் ஆகியோரை அணுகி நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைக்கு தேவையான தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகளுடன் கூடிய அறைகளை தயார் செய்யும் பொருட்டு புல தணிக்கை செய்து மேற்கண்ட பகுதிகளை உள்ளாட்சி துறையினருடன் சேர்ந்து கிருமி நாசினி தெளித்து தயார் செய்து அறிக்கை அனுப்ப வேண்டும்.

மேலும் இந்த இடங்களில் தளங்கள், கட்டிட பகுதிகள் வாரியாக உள்ள விடுதி மற்றும் வகுப்பறைகள் தண்ணீர், கழிப்பறை வசதி இருப்பதை உறுதிசெய்து விரிவான அறிக்கை அனுப்ப கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

தூத்துக்குடியில் கொரோனாவுக்கு மூதாட்டி பரிதாபமாக இறந்தார். மேலும் 2 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வெளிநாடு, வெளிமாவட்டங்களில் இருந்து வந்தவர்களை தனிமைப்படுத்தி தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தூத்துக்குடியில் டெல்லி மாநாட்டுக்கு சென்று திரும்பிய சிலருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் வீடுகள் உள்ள பகுதிகளை சுற்றி சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு முடக்கப்பட்டு சுகாதார பணிகள் நடந்து வருகின்றன.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 22 பேர் கொரோனாவால் பாதிக் கப்பட்டு இருந்தனர். இதில் 17 பேர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியிலும், 5 பேர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்ந்து அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு பணி நடந்து வருகிறது. அவர்களது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. அதில் போல்டன்புரத்தை சேர்ந்த சிறுவன் உள்பட 2 பேருக்கு நேற்று கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

போல்டன்புரத்தை சேர்ந்த 70 வயது மூதாட்டி ஏற்கனவே கொரோனா பாதிப்புக்கு ஆளாகி இருந்தார். அவருக்கு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று மாலையில் பரிதாபமாக இறந்தார். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலி யானோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவுக்கு இதுவே முதல் பலி என்பது குறிப்பிடத்தக்கது. அவரது உடலை பாதுகாப்பாக அடக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இறந்த மூதாட்டி கொரோனாவால் பாதிக்கப்பட்ட தனியார் ஆஸ்பத்திரி பெண் ஊழியரின் மாமியார் ஆவார். தனியார் ஆஸ்பத்திரி பெண் ஊழியருக்கும், அவருடைய கணவருக்கும் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனாவுக்கு பெண் பலியான சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad