Type Here to Get Search Results !

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் டிரோன் மூலம் கண்காணிப்பு - கலெக்டர் வினய்; முழு ஊரடங்கு உத்தரவு அமல்: பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை கலெக்டர்

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் டிரோன் மூலம் கண்காணிக்கப்படும் என்று கலெக்டர் வினய் தெரிவித்துள்ளார்.
மதுரையில் முழு ஊரடங்கு காலத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் செய்யப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைக்காக மதுரை மண்டல அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குனர் காமராஜ் தலைமை தாங்கினார். காவல்துறை தலைவர் முருகன், தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கலெக்டர் வினய் பேசும் போது கூறியதாவது:-

மதுரையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை கண்காணிப்பதற்காக நியமனம் செய்யப்பட்ட அலுவலர்கள் அந்த பகுதியில் உள்ள மொத்த வீடுகளின் எண்ணிக்கை, மக்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் குறித்த விவரங்களை சேகரித்து வைத்திருக்க வேண்டும். அத்தியாவசிய தேவைகளான பால், காய்கறி, மளிகை பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் எந்த காரணத்தை கொண்டும் வீட்டை விட்டு வெளியே செல்லாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த பகுதி மக்கள் ஒரு தெருவில் இருந்து அடுத்த தெருவிற்கு கூட செல்லக்கூடாது. ஒவ்வொரு தெருக்களிலும் தடுப்புகள் அமைக்க வேண்டும். அப்பகுதி மக்களின் செயல்பாடுகளை கேமரா மற்றும் டிரோன் மூலம் கண்காணிக்க வேண்டும்.

தேவையில்லாமல் நடமாடுபவர்கள் மீது குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். அந்த பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாதவண்ணம் கிருமி நாசினி தெளிக்க வேண்டும்.

அங்குள்ள முதியோர்கள், சர்க்கரை நோயாளிகள், உயர் ரத்த அழுத்த நோயாளிகள், புற்று நோயாளிகள், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள், கர்ப்பிணிகள் போன்றவர்களை கண்டறிந்து தினமும் அவர்களது உடல் நிலையை கண்காணிக்க வேண்டும். இந்த பகுதிகளில் கபசுர குடிநீர் மற்றும் நிலவேம்பு குடிநீர் அரசு வழிகாட்டுதலின்படி தயார் செய்து வழங்க வேண்டும்.

பொதுமக்கள் தங்களது குறைகளை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் 1077, கலெக்டர் அலுவலக தொலைபேசி எண்- 04522546160, வாட்ஸ்-அப் எண்- 9597176061 மற்றும் மதுரை மாநகராட்சி அலைபேசி எண் 8428425000 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் பேசினார்.

விவசாயிகள் கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ள விளைபொருட்களின் மீது 5 சதவீத வட்டியில் ரூ.3 லட்சம் கடன்
விவசாயிகள் கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ள விளைபொருட்கள் மீது 5 சதவீத வட்டியில் ரூபாய் 3 லட்சம் கடன் வழங்கப்படும் என மாவட்ட கலெக்டர் சிவன் அருள் தெரிவித்தார்.

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சிவன்அருள் தலைமையில் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் சிவன்அருள் பேசினார்.

அவர் பேசியதாவது:-

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. வேளாண் விளை பொருட்களை விற்பனைக்கு எடுத்துச் செல்வதில் உள்ள பிரச்சினைகளை களைந்திட ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் பயன்பாட்டுக்காக நவீன சேமிப்பு கிடங்கு அமைக்கப்பட்டுள்ளன. அவை தற்போது பயன்பாட்டில் இருந்து வருகிறது. விவசாயிகள் விளை பொருட்களை இக்கிடங்குகளில் 180 நாட்கள் வரை பயன்படுத்தி பாதுகாக்கலாம்.

அதிக விலை கிடைக்கும் போது விளை பொருட்களை கிடங்குகளில் இருந்து விற்பனை செய்திட கிடங்கு வாடகை கட்டணத்தை முதல் 30 நாட்களுக்கு செலுத்திட தேவையில்லை. அது, மேலும் ஒரு மாதம் நீடிக்கப்பட்டுள்ளது. கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ள விளை பொருட்கள் அடமானத்தின் பேரில் அதிகபட்சம் 50 சதவீத சந்தை மதிப்பு அல்லது 3 லட்சம் ரூபாய் இவற்றில் எது குறைவோ அதனை கடனாக பெறலாம். கால அளவு 180 நாட்களாகும். இதற்கான வட்டி 5 சதவீதம் ஆகும். கடனுக்கான வட்டி முதல் 30 நாட்களுக்கு செலுத்த தேவையில்லை.

1 சதவீத கட்டணம் ரத்து

பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி காய்கறிகள் மற்றும் பழங்கள் கிடைக்க அவற்றைப் பாதுகாக்கவும் தடைபடும் காலங்களில் விற்பனை செய்வதற்கு ஏதுவாக விவசாயிகளின் பயன்பாட்டிற்காக குளிர்பதன கிடங்கு இயங்கி வருகின்றன. கிடங்குகளில் காய்கறிகள் மற்றும் பழங்களை சேமித்து வைக்க விவசாயிகளிடம் இருந்து பயன்பாட்டுக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. தற்போது உள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு மேலும் 15 நாட்களில் மாம்பழம் உற்பத்தி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விவசாயிகளிடம் வசூலிக்கப்படும் பயன்பாட்டு கட்டணத் தொகை வரும் 30-ந்தேதி வரை வசூலிக்கப்பட மாட்டாது. கட்டணத்தை முழுவதும் தமிழக அரசே ஏற்கும்.

தற்போது நெல், சிறு தானியங்கள், பயிறு வகைகள், நிலக்கடலை, எள், தேங்காய், பருத்தி, வெங்காயம், மிளகாய், முந்திரி, வெல்லம், மரவள்ளி மற்றும் சில மாவட்டங்களில் பழங்கள் மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட விளைபொருட்களை விவசாயிகள் விற்பனை செய்யும் போது அவர்களிடம் இருந்து விற்பனை மதிப்பில் 1 சதவீதம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தற்போது நிலவி வரும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு விவசாயிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் விளை பொருட்களை நியாயமான விலையில் பொதுமக்களுக்கு வினி யோகம் செய்திட ஏதுவாக தற்போது வியாபாரிகள் செலுத்தும் 1 சதவீத கட்டணத்தை 30-ந் தேதி வரை ரத்து செய்யப்பட்டிருந்தது. மேலும் ஒரு மாத காலம் நீட்டிக்கப்படுகிறது.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையபாண்டியன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன்ராஜசேகர், வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்திரி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் அருண் உள்பட அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஏழை மக்களுக்கு உதவ வேண்டும் என்றால் முன்னதாக தெரிவிக்க வேண்டும் - கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் அறிக்கை
ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட மக்களுக்க உதவ வேண்டும் என்றால் முன்னதாக தெரிவிக்க வேண்டும் என கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் தெரிவித்துள்ளார். இது குறிதது அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

சென்னை உயர்நீதிமன்றம் வழிகாட்டுதலின் படி, கொரோனா தொற்று நோய் பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஏழை எளிய மக்களுக்கு உதவ வேண்டும் என்று எண்ணம் கொண்ட தொண்டு நிறுவனங்கள், தனிநபர், தனி நபர் குழுக்கள் மற்றும் அமைப்புகள் மாவட்ட நிர்வாகத்திடம் 48 மணி நேரத்துக்கு முன்னதாக தெரிவிக்க வேண்டும்.

உணவு வினியோகம் பொறுத்த வரையில் சம்பந்தப்பட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் அந்த உணவு தயாரிப்பவரின் உடல் நிலை குறித்தும், உணவின் தரம், உணவு தயாரிக்க கூடிய இடத்தை ஆய்வு செய்ய வேண்டும். உணவு பாதுகாப்பு அலுவலர் மேற்கண்ட விதமுறைகளில் திருப்தியடைந்த பிறகு மனுதாரர்கள் உணவு வினியோகத்தை தொடரலாம்.

ஹாட்ஸ்பாட்கள் என்று அறிவிக்கப்பட்ட பகுதிகளில் உதரணமாக புளியங்குடி நகரசபை பகுதியில் உணவு வினியோகம் செய்யக்கூடாது. அனுமதிக்கப்பட்ட கால நேரத்துக்குள் உணவு வினியோகத்தை முடிக்க வேண்டும். சில இடங்களில் உணவு வினியோகம் செய்வதில் கால தாமதம் ஏற்படும் என்று தெரிந்தால், மாவட்ட கலெக்டரிடம் அனுமதி கேட்கலாம்.

வினியோகிக்கும் இடத்துக்கு உணவுகளை கொண்டு செல்ல டிரைவர் உள்பட 4 பேர் அனுமதிக்கப்படுவார்கள். சமூக இடைவெளியே கடைபிடித்து உணவு வழங்க வேண்டும்.

முழு ஊரடங்கு உத்தரவு அமல்: பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை கலெக்டர் தகவல்
கோவை மாநகரில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் தங்குதடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்து உள்ளார்.

கோவை கலெக்டர் ராஜாமணி சிங்காநல்லூரில் அமைந்து உள்ள இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அதன்பின்னர் அங்கு பணிபுரியும் 100 தூய்மை பணியாளர்களுக்கு அரிசி, கோதுமை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.

இதன்பின்னர் கலெக்டர் ராஜாமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் உத்தரவுப்படி கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தவும், பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்படுகிறது. வேறு எந்த நோய்க்கும் சிகிச்சை அளிக்கப்படவில்லை.

3 குழுக்கள்

இங்கு டாக்டர்கள், நர்சுகள் கொண்ட 3 மருத்துவ குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த குழுவினர் 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதுதவிர ஒரு குழு எந்நேரமும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. கோவை மாவட்டத்தில் இதுவரை 4 ஆயிரத்து 560 பேருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில் 141 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் 118 பேர் முழுவதும் குணமடைந்து விட்டனர். மீதம் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு குணமடைந்த பலரும் பிளாஸ்மா சிகிச்சை அளிக்க தங்களை பயன்படுத்தி கொள்ளலாம் என்று தெரிவித்து உள்ளனர்.

கோவை மாநகர் மற்றும் ஊரக பகுதிகளில் மொத்தம் 18 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளன. கோவையில் தற்போது முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. எனவே பொதுமக்களுக்கு காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே வரும் நபர்கள் மீது காவல் துறை மூலம் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும்.

வாகன அனுமதிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் பிரபாகர் தகவல்
வாகன அனுமதிக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய பணிக்கு செல்பவர்கள் வாகன அனுமதிக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் மாவட்டத்தில் தற்போது 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. 144 தடை உத்தரவிற்கு முன்பே நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் கலந்து கொள்ள அவருடைய நெருங்கிய ரத்த சொந்தங்கள், அதே போல் இறந்த நபர்களின் இறுதி சடங்கிற்கு ரத்த உறவு சம்பந்தப்பட்ட உறவினர்கள் மற்றும் அவசர மருத்துவ சிகிச்சைக்கு செல்லுதல் ஆகிய அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே, அத்தியாவசிய பயணசீட்டு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் மேற்குறிப்பிட்ட அத்தியாவசிய பயன்பாட்டிற்கு மட்டும் ஆன்லைன் மூலம் வாகன அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும், தமிழக அரசு ஆணையில் குறிப்பிட்டுள்ளபடி, அத்தியாவசிய பொருட்கள் உற்பத்தி பணியில் ஈடுபடும் நிறுவனங்கள் உற்பத்தி பணியில் ஈடுபட மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெறுதவற்கு mhs-k-gi@gm-a-il.com என்ற மின்னஞ்சல் முகவரியில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். தங்கள் மனுவின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அதற்கான உத்தரவு நகல் தங்கள் இ-மெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள் தங்கள் மனுக்கள் மீதான நடவடிக்கை குறித்து அறிந்து கொள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் கட்டுப்பாட்டு அறை எண்கள் 04343-230041, 04343-234444 மற்றும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்கள் மூலமாகவும், mhs-k-gi@gm-a-il.com, dmt-a-hs-i-l-d-a-r-k-gi@gm-a-il.com ஆகிய மின்னஞ்சல் மூலமாகவும் தெரிந்துக்கொள்ளலாம். பொதுமக்கள் 144 தடையை மீறி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் வரக்கூடாது எனவும், அனுமதியின்றி வெளியே வரும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad