Type Here to Get Search Results !

மன்மதன் காசி மீது மேலும் ஒரு பெண் பரபரப்பு புகார் 2½ ஆண்டாக பழகி நகையை அபகரித்தது அம்பலம்

குமரி மன்மதன் காசி மீது மேலும் ஒரு பெண் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார். 2½ ஆண்டாக பழகி அந்த பெண்ணிடம் நகையை அபகரித்தது அம்பலமாகி உள்ளது.
குமரி மன்மதன் காசி மீது மேலும் ஒரு பெண் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார். 2½ ஆண்டாக பழகி அந்த பெண்ணிடம் நகையை அபகரித்தது அம்பலமாகி உள்ளது.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

நாகர்கோவில் கணேசபுரம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் காசி என்ற சுஜி (வயது 26), பட்டதாரியான இவர், சென்னை பெண் டாக்டருடன் நெருங்கி பழகி உள்ளார். அப்போது அந்த பெண் டாக்டரை ஆபாசமாக புகைப்படம் எடுத்து, அந்த புகைப்படங்களை இணையதளத்தில் பதிவிட்டு விடுவதாக மிரட்டி அவரிடம் பணம் பறித்தார். இதுதொடர்பாக பெண் டாக்டர் அளித்த புகாரின் பேரில் காசியை கோட்டார் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. பெண் டாக்டரை போன்று மேலும் பல பெண்களை தனது வலையில் காசி வீழ்த்தியது தெரியவந்தது. அதாவது, சமூக வலைதளத்தில் போலி கணக்குகளை உருவாக்கி, அதன் மூலம் பழக்கத்தை ஏற்படுத்தி பெண்களை ஆபாச படம் எடுத்து லட்சக்கணக்கில் பணம் பறித்துள்ளார். அவரை போலீசார் கைது செய்து நாங்குநேரி ஜெயிலில் அடைத்தனர். மன்மதனாக வலம் வந்த காசியின் உண்மையான முகம், பெண் டாக்டர் கொடுத்த புகாரால் தற்போது வெளிச்சத்துக்கு வந்தது.

இந்த நிலையில் கணேசபுரத்தில் உள்ள காசியின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, காசி பயன்படுத்திய செல்போன், லேப்டாப், ஒரு விலை உயர்ந்த கெடிகாரம் மற்றும் 2 ஹார்ட் டிஸ்க், 7 ஏ.டி.எம். கார்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். செல்போன் மற்றும் லேப்டாப்பில் ஏராளமான பெண்களுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை காசி வைத்திருந்தார். அதை போலீசார் கைப்பற்றினர்.

அந்த புகைப்படங்களில் காசியுடன் உள்ள ஆண் நண்பர்களை போலீசார் அடையாளம் கண்டனர். சம்பந்தப்பட்ட நண்பர்கள் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அதாவது, செல்போன் மற்றும் லேப்-டாப் உள்ளிட்டவற்றில் ஏதேனும் பெண்களின் ஆபாச புகைப்படங்களை வைத்துள்ளார்களா? என்றும் சோதனை நடத்தப்பட்டது. காசியிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஹார்ட் டிஸ்கில் ஏதேனும் தகவல்கள் உள்ளதா? என்றும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். அரசியல் பிரமுகர்கள் சிலருடன் காசி நெருங்கி பழகியதாகவும் கூறப்படுகிறது. இதனால் காசிக்கும், அரசியல் பிரமுகர்களுக்கும் எந்த வகையில் நெருக்கம் என்பது தொடர்பாகவும் விசாரணையும் நடந்து வருகிறது.

இந்தநிலையில் நேற்று இரவு ஆன்லைன் மூலமாக 25 வயது மதிக்கத்தக்க என்ஜினீயரிங் பட்டதாரி பெண் ஒருவர் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு புகார் மனு அனுப்பினார். அதில், நாகர்கோவில் பகுதியை சேர்ந்த என்னிடம் காதலிப்பதாக கூறி காசி 2½ வருடமாக பழகினான். அப்போது, அவனிடம் நெருக்கமாக இருந்தேன். அந்த சமயத்தில் அந்த காட்சியை செல்போன் மூலம் படம் எடுத்தான். இவனைத் தானே திருமணம் செய்ய போகிறேன் என்ற எண்ணத்தில் சும்மா இருந்து விட்டேன். இதனையடுத்து என்னிடம் அவசர தேவை என்று கூறி நகை வாங்கினான். பிறகு சில நாட்கள் கழித்த பிறகு நகையை திருப்பி கேட்ட போது, அவனது உண்மையான சுயரூபம் மெல்ல, மெல்ல தெரிய வந்தது.

உன்னுடைய ஆபாச படம் என்னிடம் இருக்கிறது, நகையை திருப்பி கேட்டால் சமூக வலை தளத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டினான். இதனால் நான் அதிர்ச்சி அடைந்தேன். அதன் பிறகு அவனிடம் இருந்து விலகி விட்டேன். பெண் டாக்டரை மிரட்டியதை போன்றே என்னையும் மிரட்டினான். பல பெண்களை ஏமாற்றிய காசி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த புகாரின் பேரில் நேசமணி நகர் போலீசார், 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குமரியை சேர்ந்த மன்மதன், உள்ளூர் முதல் வெளி மாவட்டத்திலும் இதேபோல் பல பெண்களை ஏமாற்றி உள்ளார். அந்த பெண்களும் புகார் கொடுக்க உள்ளதாக தெரிகிறது. இதனால் காசி மீது மேலும் பல வழக்குகள் பாய்வதற்கு வாய்ப்பு உள்ளது என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சிதம்பரம் அருகே பயங்கரம் காவலாளி அரிவாளால் வெட்டிக்கொலை
சிதம்பரம் அருகே காவலாளி அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள அம்மாபேட்டை ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் நடராஜன்(வயது 55). இவருடைய மனைவி சரஸ்வதி. இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். அம்மாபேட்டையில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக இரவு நேர காவலாளியாக நடராஜன் பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் நேற்று அதிகாலையில் அந்த வணிக வளாகம் எதிர்ப்புறத்தில் உள்ள கான்சாகிப் வாய்க்கால் கரையோரத்தில் மர்மமான முறையில் நடராஜன் இறந்து கிடந்தார். அவரது தலை, கழுத்து, முழங்கால் உள்ளிட்ட உடல் முழுவதும் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் அரிவாளால் வெட்டப்பட்ட காயங்கள் இருந்தன. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், அண்ணாமலைநகர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சுந்தரம், போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, நடராஜனின் உடலை பார்வையிட்டு அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் நேரில் வந்து, நடராஜன் இறந்து கிடந்த இடத்தை பார்வையிட்டார். இதற்கிடையில் விழுப்புரம் மண்டல தடயவியல் துணை இயக்குனர் சண்முகம் நேரில் வந்து தடயங்களை சேகரித்தார்.

காரணம் என்ன?

நடராஜனின் உடல் அருகில் மீன் பிடிக்கும் வலை கிடந்தது. இதனால் கான்சாகிப் வாய்க்காலில் மீன்பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் அவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் நடராஜன் வெட்டிக்கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ள சமயத்தில் காவலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் சிதம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேடசந்தூர் கோர்ட்டில் பூட்டை உடைத்து மதுபாட்டில்களை திருடிய தந்தை-மகன் உள்பட 4 பேர் கைது
வேடசந்தூரில் கோர்ட்டு கதவின் பூட்டை உடைத்து மதுபாட்டில்களை திருடிய தந்தை-மகன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

வேடசந்தூர் சந்தைப்பேட்டையில் குற்றவியல் மற்றும் உரிமையியல் கோர்ட்டு உள்ளது. இந்த கோர்ட்டில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வேடசந்தூர் குஜிலியம்பாறையில் மதுபாட்டில்கள் விற்றவர் களை கைது செய்து திண்டுக் கல் மதுவிலக்கு போலீசார் ஆஜர்படுத்தினர். அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்த ஆயிரத்து 392 மதுபாட்டில்களை போலீசார் கோர்ட்டில் ஒப்படைத்தனர்.

இந்த மதுபாட்டில்களை கோர்ட்டில் உள்ள ஒரு அறையில் வைத்து ஊழியர்கள் பூட்டி தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு இளவரசன் தலைமையிலான போலீசார் கோர்ட்டுக்கு விரைந்து சென்று அங்குள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் நேற்று முன்தினம் 4 மர்ம நபர்கள் கோர்ட்டின் முன்பக்க நுழைவுவாயில் வழியாக உள்ளே புகுந்து அறை கதவின் பூட்டை உடைத்து மதுபாட்டில்களை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகியிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து கேமராவில் பதிவான மர்ம நபர்களின் அடையாளத்தை வைத்து சந்தைப்பேட்டையை சேர்ந்த பிச்சைமுத்து (வயது 45), அவருடைய மகன் சதீஷ் (22), சந்தோஷ் (20), பால்பாண்டி (22) ஆகிய 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் கோர்ட்டில் இருந்து 29 மதுபாட்டில்களை திருடியதாகவும், அதில் 4 பாட்டில்களை குடித்ததாகவும் கூறினர். மீதமுள்ள 25 மதுபாட்டில்களை கோர்ட்டு அருகே உள்ள பகுதியில் புதைத்து வைத்து இருப்பதாக அவர்கள் கூறினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர். மேலும் கோர்ட்டு அருகே புதைத்து வைத்திருந்த மதுபாட்டில்களை போலீசார் கைப்பற்றினர்.

ஊரடங்கால் மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கின்றன. இதனால் மதுபாட்டில்கள் கிடைக்காமல் மதுபான பிரியர்கள் திணறி வருகின்றனர். இந்த நிலையில் கோர்ட்டு என்றும் பாராமல் அங்கு இருந்த மதுபானங்களை திருடிச் சென்ற, இந்த துணிகர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அரக்கோணம் அருகே மின்னல் தாக்கி பிளஸ்-1 மாணவி பலி
வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் நேற்று காலை இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அரக்கோணம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்று காலை பலத்த மழை பெய்தது.

அரக்கோணம் அருகே வளர்புரம் காலனியை சேர்ந்தவர் ஏகாமபரம். இவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவரது மகள் மகாலட்சுமி (வயது 16) அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். நேற்று காலை மகாலட்சுமி வீட்டின் பின்புறம் சென்றுள்ளார்.

மின்னல் தாக்கியது

அப்போது மின்னல் தாக்கியதில் மகாலட்சுமி மயங்கி கீழே விழுந்தார். இதைப் பார்த்த உறவினர்கள் மகாலட்சுமியை உடனடியாக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து அரக்கோணம் உதவி கலெக்டர் பேபி இந்திரா, தாசில்தார் ஜெயக்குமார், சு.ரவி எம்.எல்.ஏ. ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று மின்னல் தாக்கி இறந்த மாணவியின் தாயாருக்கு ஆறுதல் கூறினர். அப்போது சு.ரவி எம்.எல்.ஏ. ரூ.10 ஆயிரத்தை சொந்த நிதியிலிருந்து நிவாரணமாக மகாலட்சுமியின் குடும்பத்திற்கு வழங்கினார். மேலும் அரசு நிவாரண நிதி மற்றும் நிவாரண பொருட்கள் வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து அரக்கோணம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

ஊரடங்கு உத்தரவை மீறி தோட்டத்தில் இறைச்சி சமைத்து சாப்பிட்ட 11 பேர் கைது
சேலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி தோட்டத்தில் இறைச்சி சமைத்து சாப்பிட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர். சமூக வலைத்தளத்தில் வீடியோ பரவியதால் அவர்கள் போலீசில் சிக்கி உள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் சேலம் மாவட்டம் வீராணம் அருகே உள்ள பள்ளிப்பட்டி கொட்டாய்தெருவை சேர்ந்த வாலிபர்கள் சிலர் அதே பகுதியில் உள்ள விவசாயி ஒருவரது தோட்டத்திற்கு சென்றனர். பின்னர் அவர்கள் அங்கு இறைச்சி சமைத்து வாழை இலையில் சாப்பிட்டனர். மறுநாளும் அதே வாலிபர்கள் தோட்டத்துக்கு சென்று மீன் வறுவல் சாப்பிட்டுள்ளனர்.

இதனை அவர்கள் தனது செல்போன்களில் வீடியோவாக படம் பிடித்து வாட்ஸ்-அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். இந்த வீடியோ வைரலாக பரவியது. இது குறித்து மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து ஊரடங்கு உத்தரவு காலத்தில் ஒன்றாக கூடி இறைச்சி சமைத்து சாப்பிட்ட வாலிபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வீராணம் போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், ஊரடங்கு உத்தரவை மீறி தோட்டத்தில் இறைச்சி சமைத்து சாப்பிட்டது கொட்டாய் தெரு பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் (வயது 27), ரகுபதி (24), சக்திவேல் (21), ராஜேஷ் (25) உள்பட 11 பேர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு நேற்று கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். முன்னதாக அந்த வாலிபர்கள் போலீஸ் நிலையம் முன்பு சமூக இடைவெளியுடன் நிறுத்தி வைக்கப்பட்டு, அவர்களுக்கு கொரோனா வைரசின் தாக்கம் குறித்தும், அதன் பரவும் விதம் குறித்தும் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

குடும்ப தகராறில் விபரீதம்: கணவன் கண்முன்னே கிணற்றில் குதித்து கர்ப்பிணி தற்கொலை
கணவன் கண்முன்னே கிணற்றில் குதித்து கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்டார்.

கிணற்றில் குதித்தார்

முசிறியை அடுத்த டி.புதுப்பட்டி கீழத்தெரு பகுதியில் வசித்து வருபவர் சஞ்சீவராஜ் (வயது 29). லாரி டிரைவரான இவருக்கு, திருமணமாகி 6 மாதங்கள் ஆகிறது. இவரது மனைவி ரக்‌ஷனா (22) தற்போது கர்ப்பமாக உள்ளதாக தெரிகிறது. கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த ரக்‌ஷனா, தனது தாய் வீட்டிற்கு செல்லவேண்டும் என்று கூறி கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

முசிறி சுக்காம்பட்டி மெயின்ரோடு அருகே சென்றபோது, தனது தாய் தனலட்சுமி நிற்பதை கண்ட ரக்‌ஷனா, மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி உள்ளார். பின்னர் அவர் திடீரென கணவன் கண் முன்னே அருகில் உள்ள கிணற்றுக்குள் குதித்துள்ளார். இதனைக்கண்ட தனலட்சுமி, மகளை காப்பாற்ற ஓடிவந்து, அவரும் கிணற்றுக்குள் குதித்துள்ளார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து, கிணற்றுக்குள் இறங்கி தனலட்சுமியை மீட்டனர். ஆனால் ரக்‌ஷனா கிணற்று நீரில் மூழ்கி இறந்தார்.

கணவன்-மாமியார் கைது

இதுகுறித்து தகவலறிந்ததும் முசிறி, துறையூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் வந்து கிணற்றுக்குள் மூழ்கி பலியான ரக்‌ஷனா உடலை மீட்ட னர். முசிறி போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் மற்றும் போலீசார் ரக்‌ஷனா உடலை கைப்பற்றி முசிறி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து தனலட்சுமி அளித்த புகாரின்பேரில், முசிறி போலீசார் வழக்குப்பதிந்து சஞ்சீவராஜ், அவரது தாயார் பாப்பாத்தி (50) ஆகிய இருவரையும் கைதுசெய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். ரக்‌ஷனாவுக்கு திருமணமாகி 6 மாதங்களே ஆவதால் முசிறி சப்-கலெக்டர் பத்மஜாவும் விசாரணை நடத்தி வருகிறார்.

களக்காடு அருகே ஊரடங்கில் விபத்து பாலத்தில் மோட்டார் சைக்கிள் மோதல்; 2 நண்பர்கள் பலி
களக்காடு அருகே பாலத்தில் மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் 2 நண்பர்கள் பரிதாபமாக இறந்தனர்.

பாலத்தில் மோதல்

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கோவில்பத்தை சேர்ந்தவர் தேவசகாயம் மகன் கிளிண்டன் (வயது 25). இவர் என்ஜினீயரிங் படித்து வந்தார். பின்னர் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு விவசாயம் செய்து வந்தார். அவருடைய நண்பர் ஊச்சிக்குளத்தை சேர்ந்த ரவிராஜ் மகன் பசுபதி (24).

இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் நள்ளிரவு களக்காட்டில் இருந்து சூரங்குடி செல்லும் மங்கம்மாள் சாலையில் மோட்டார்சைக்கிளில் சென்றனர். மோட்டார்சைக்கிளை கிளிண்டன் ஓட்டினார். சூரங்குடி கால்வாய் மீதுள்ள பாலத்தில் சென்றபோது மோட்டார்சைக்கிள் திடீர் என நிலை தடுமாறி பாலத்தின் தடுப்பு சுவர் மீது மோதியது.

நண்பர்கள் சாவு

இதில் ரோட்டில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த கிளிண்டன், பசுபதி ஆகிய இருவரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மோதிய வேகத்தில் கால்வாய்க்குள் மோட்டார்சைக்கிள் பாய்ந்தது. தற்போது ஊரடங்கு நேரம் என்பதால் அந்த சாலையில் போக்குவரத்து இல்லை. நேற்று பகல் அந்த வழியாக சென்ற சிலர், 2 பேர் பிணமாக கிடப்பது குறித்து களக்காடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து நாங்குநேரி துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் தலைமையில், களக்காடு இன்ஸ்பெக்டர் மேரிஜெமிதா, சப்-இன்ஸ்பெக்டர்கள் அருண்ராஜா, பழனி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக் காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஊரடங்கு நேரத்தில் நடந்த இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தந்தை போலீசில் புகார்

இதற்கிடையே, பசுபதியின் தந்தை ரவிராஜ், தனது மகனின் சாவில் சந்தேகம் இருப்பதாக களக்காடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்செந்தூரில் வீட்டில் தொட்டில் கட்டி விளையாடிய சிறுவன் சாவு - கழுத்து இறுகியதால் பரிதாபம்
திருச்செந்தூர் தோப்பூர் மேல தெருவைச் சேர்ந்தவர் சிவன் ராஜ் (வயது 45). தொழிலாளி. அவருடைய மனைவி வள்ளிக்கொடி. இவர்களுக்கு 2 மகள்களும், சேது (11) என்ற மகனும் உள்ளனர். சேது அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலையில் சேது தனது வீட்டில் சேலையால் தொட்டில் கட்டி விளையாடிக் கொண்டிருந்தான். எதிர்பாராதவிதமாக அவனுடைய கழுத்தை சேலை இறுக்கியது.

இதில் அவன் சிக்கி தவித்துக் கொண்டிருந்தான். அப்போது இதனை பார்த்த அவனுடைய அக்காள், உடனடியாக விறகு வெட்ட சென்ற பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தார்.

பரிதாப சாவு

இதனை கேட்டதும் அதிர்ச்சி அடைந்த அவர்கள் பதறி அடித்துக் கொண்டு வீட்டிற்கு ஓடி வந்தனர். சேதுவை மீட்டு திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவனை பரிசோதித்த டாக்டர், சிறுவன் ஏற்கனவே பரிதாபமாக இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

இச்சம்பவம் குறித்து திருச்செந்தூர் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீட்டில் தொட்டில் கட்டி விளையாடிய சிறுவன், கழுத்து இறுகி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் ஊரடங்கை மீறிய 383 பேர் கைது; 305 வாகனங்கள் பறிமுதல்
திருப்பூர் மாவட்டத்தில் நேற்று தேவையில்லாமல் சுற்றித்திரிந்த வாகன ஓட்டிகளை போலீசார் கைதுசெய்து அவர்களிடம் இருந்து வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் முழு ஊரடங்கு நேற்று முதல் 3 நாட்களுக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மாநகர் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர். இருப்பினும் நேற்று காலை தேவையில்லாமல் சுற்றித்திரிந்த வாகன ஓட்டிகளை போலீசார் கைதுசெய்து அவர்களிடம் இருந்து வாகனங்களை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

அதன்படி திருப்பூர் மாநகரில் நேற்று இரவு 7 மணி வரை 123 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 123 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 1 நான்கு சக்கர வாகனம் மற்றும் 104 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுபோல் திருப்பூர் புறநகரில் போலீசார் நேற்று இரவு 7 மணி வரை 260 வழக்குகள் பதிவு செய்து 260 பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 200 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். திருப்பூர் மாவட்டத்தில் ஊரடங்கை மீறியதாக நேற்று மொத்தம் 383 பேர் கைது செய்யப்பட்டனர்.305 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad