Type Here to Get Search Results !

தமிழ்நாட்டில் ஊரடங்கை நீட்டிக்க தயக்கம் ஏன்? என்று முதலமைச்சருக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி

தமிழ்நாட்டில் ஊரடங்கை நீட்டிக்க தயக்கம் ஏன்? என்று முதலமைச்சருக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார்.
கொரோனா விவகாரத்தில் தமிழக அரசு மீது திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டுவது சந்தர்ப்பவாத அரசியல் என்றும், தன்னலமற்ற சேவையில் ஈடுபடும் அனைவரையும் கொச்சைப்படுத்தும் செயல் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியல் பேசுவதற்கான நேரம் இதுவல்ல எனவும், அரசாங்கம் ஒழுங்காக முறையாக, மக்களுக்காகச் செயல்பட வேண்டும், அல்லது அரசாங்கத்தை தி.மு.க. செயல்பட வைக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் உடனடியாக ஊரடங்கு குறித்து முடிவு எடுங்கள்” என்று தாம் விடுத்த வேண்டுகோள் முதலமைச்சருக்கு ‘அரசியலாகத்’ தெரிவதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனோ தடுப்பு பணிகளுக்கு தமிழக அரசு எடுக்கும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு திமுக ஆதரவு அளிக்கும் என்று முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: “கோவிட்-19” என்ற கொடிய வைரஸ் தொற்றினால் பரவி வரும் நோய்ப் பேரிடரில் இருந்து  தமிழக மக்கள் மீள்வதற்கும்-தற்போதைய கடும் நெருக்கடியில் இருந்து, ஏழை-எளிய, நடுத்தரப் பிரிவினர் மீண்டும் தங்களது இயல்பான வாழ்க்கைக்குத் தேவைப்படும் அன்றாட நடவடிக்கைகளைத் தொடருவதற்கும், அரசு எடுக்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு திமுக சார்பில் எனது  ஆதரவையும் ஒத்துழைப்பினையும் மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.

* கொரோனா நோய்த் தொற்று சமூகப்  பரவலுக்கு உட்பட்டு விட்டதா என்பது குறித்து-தமிழக அரசும், மத்திய அரசும்  தெரிவித்து வரும் தகவல்கள் முன்னுக்குப் பின் முரண்களாக உள்ளன. போதுமான விரைவுப் பரிசோதனைக் கருவிகள் இல்லாததால், பாதிப்பு குறித்து முழுமையாக மதிப்பீடு இன்னமும் செய்யப்படாத நிலையில், மக்கள் மிகுந்த அச்சத்திலும் பதற்றத்திலும் ஆழ்ந்திருக்கிறார்கள். பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருவதைப் பார்க்கும்போது, தமிழ்நாடு இரண்டாவது நிலையில் இருந்து மூன்றாவது நிலைக்குச் சென்றுவிடுமோ என்ற அய்யப்பாட்டையும் ஆழ்ந்த கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. அப்படி ஆகிவிடாமல் தடுத்தாக வேண்டும்.

* நோய்த் தொற்று குறித்த சோதனையை விரைவுபடுத்துவதுடன்-அதை தனியார் மருத்துவமனைகள் உள்ளிட்ட அனைத்து மருத்துவமனைகளிலும் இலவசமாகச் செய்திட வழிவகை செய்திட வேண்டும்.

*தனித்திருத்தல்’ என்பதே முதன்மையான தற்காப்பு நிலை என்பதால், ஊரடங்கை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று, பிரதமர் நரேந்திர மோடி நடத்திய அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பல்வேறு மாநில முதல்வர்களும் வலியுறுத்தியுள்ளதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஏற்கனவே ஒடிசா முதல்வர் ஏப்ரல் 30ம் தேதி வரையும், பஞ்சாப் மாநில முதல்வர் மே 1ம் தேதி வரையும் ஊரடங்கை நீடித்துள்ளார்கள். ஆகவே, தமிழகத்திலும் ஊரடங்கு குறித்து உரிய முடிவினை இனியும்  காலதாமதம் செய்யாமல் எடுத்து, மக்களின் மனநிலையைத் தயாரித்திட முன்கூட்டியே அறிவித்திட வேண்டும்.

* அதே நேரத்தில், ஊரடங்கினால் ஏழை-எளிய மக்கள், விவசாயிகள், சிறு-குறு வணிகர்கள், மாற்றுத்திறனாளிகள், வெளிமாநில தொழிலாளர்கள், வீடில்லாதோர்  உள்ளிட்ட சமூகத்தின் விளிம்பு நிலை மக்கள் அனைவருக்குமான வாழ்வாதாரத்தை-உயிர் வாழ்வதற்குத் தேவையானவற்றை உறுதி செய்திட வேண்டும்.

* பல்வேறு குழுக்கள் அரசின் சார்பில் அமைக்கப்பட்டு அவர்களது ஆலோசனைகள் பெறப்பட வேண்டும். பிரதமர், சார்க் மற்றும் அனைத்துக்கட்சி கூட்டங்களுக்கு அழைப்பு விடுக்கும் வேளையில், தமிழக அரசு அது போன்ற நடைமுறைகளைப் பின்பற்றாதது, ஜனநாயக நெறிகளைப் போற்றுவதாகாது.

* இதேநேரத்தில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாயை மாநில அரசும் எடுத்திருப்பது கண்டிக்கத்தக்கது. அம்முடிவை தவிர்க்க வேண்டும். சட்டமன்ற உறுப்பினர்கள், மக்கள் நலனுக்காகத் தான் அந்த நிதியைப் பயன்படுத்துகிறார்கள்.

* மக்கள் நலனுக்காய்ப் போராடிய அரசு மருத்துவர்கள் மீதான துறை ரீதியான நடவடிக்கைகளைத் திரும்பப் பெறுதல் வேண்டும்.

* சுகாதாரத் துறை, ஊராட்சி நிர்வாகம், வருவாய்த்துறை, காவல் துறை, உள்ளிட்ட களப்பணியிலிருக்கும் எல்லாத் துறைகளையும் சேர்ந்த அனைத்துப் பேரிடர் காலக் களப்பணியாளர்களுக்கும், உரிய அளவில் ஊக்கத்தொகை அளிக்க வேண்டும்.

*ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு அரசு சிறப்புச் சலுகைகள், ஊக்க ஊதியங்கள் கொடுத்து அரசு காக்க வேண்டும். தனியார் ஆம்புலன்ஸ் பணியாளர்களையும் அரசு ஊழியர்கள் போல இப்பேரிடர் காலத்தில் கருதி உதவிகள் செய்தாக வேண்டும்.

இந்த கடுமையான காலகட்டத்தில், அரசின் கையில் இருக்கும் ஒவ்வொரு நொடியும் ‘’கோல்டன் ப்ரீயட்’’ தான். இதை அரசு சரியாகப் பயன்படுத்தியாக வேண்டும். திறந்த மனதுடன், உண்மையான அக்கறையுடன், கனிவான மனத்துடன், அனைத்துத் தரப்பினரின் ஆலோசனைகளையும் உள்வாங்கும் பரந்த உள்ளத்துடன், தேவையான தனித்திறனுடன் அரசு செயல்பட்டால் மட்டும் தான் நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்ற முடியும். தனிமனித இடைவெளியுடன் தனித்திருத்தல் மட்டும்தான் மக்களால் செய்ய முடிந்தது. மற்றவை அனைத்தையும் அரசு தான் ஏற்றுச் செய்து தர வேண்டும். அப்படிச் செயல்படும் அரசுக்கு ஆலோசனைகளைச் சொல்ல, ஒத்துழைக்க, உதவிகள் வழங்க திமுக எப்போதும் தயாராகவே  இருக்கிறது. இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad