வங்கி அத்தியாவசிய பணி என ஸ்டிக்கர் ஒட்டி - காரில் குட்கா கடத்தல்

திண்டுக்கல்லில், வங்கி அத்தியாவசிய பணி என ஸ்டிக்கர் ஒட்டி காரில் குட்கா கடத்தப்பட்டது.
திண்டுக்கல் அருகே உள்ள பிள்ளைநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் அப்துல்அசீன் (வயது 35). இவர் ஒரு அரசுடைமையாக்கப்பட்ட வங்கியின் அத்தியாவசிய அலுவல் பணி என ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட காரில், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று சென்று கொண்டிருந்தார்.

அப்போது அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட திண்டுக்கல் தனிப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து மற்றும் போலீசார் காரை மறித்து சோதனை செய்தனர். இதில் காரில் 5 மூட்டைகள் இருந்தன. எனவே போலீசார் மூட்டைகளில் என்ன உள்ளது? என கேட்டனர். அதற்கு அப்துல்அசீன் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார். எனவே போலீசார் சந்தேகமடைந்து மூட்டைகளை பிரித்து பார்த்தனர். அப்போது மூட்டைகளில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள குட்கா கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து தனிப்பிரிவு போலீசார் அவரை காருடன் தாடிக்கொம்பு போலீசில் ஒப்படைத்தனர்.

இதைத்தொடர்ந்து திண்டுக்கல் ரூரல் போலீஸ் துணை சூப்பிரண்டு வினோத், திண்டுக்கல் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வம் ஆகியோர் தாடிக்கொம்பு போலீஸ் நிலையத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் இதுகுறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து குட்காவையும், காரையும் பறிமுதல் செய்தனர். அப்துல்அசீனிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url