Type Here to Get Search Results !

நெல்லையில் அதிரடி நடவடிக்கை: முக கவசம் - அனுமதி அட்டை இல்லாதவர்களுக்கு அபராதம்

நெல்லையில் அதிரடி நடவடிக்கை: முக கவசம் - அனுமதி அட்டை இல்லாதவர்களுக்கு அபராதம் - ஒரே நாளில் ரூ.11 ஆயிரம் வசூல்
நெல்லையில் அதிரடி நடவடிக்கையாக அனுமதி அட்டை இல்லாமலும், முக கவசம் அணியாமலும் வெளியே வந்தவர்களுக்கு உடனடியாக அபராதம் விதிக்கப்பட்டது. இதில் நேற்று ஒரே நாளில் ரூ.11 ஆயிரத்து 200 வசூல் ஆனது.

கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதையும் மீறி மக்கள் வெளியே வருவதால் நெல்லையில் பல்வேறு கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டது. அதன்படி, வாரத்துக்கு 2 நாட்கள் மட்டுமே வெளியே வந்து அத்தியாவசிய பொருட்கள் வாங்க வேண்டும் என்ற கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டது. அதற்காக ஒவ்வொரு வீட்டுக்கும் சிகப்பு, நீலம், பச்சை ஆகிய 3 நிறங்களில் அனுமதி அட்டை வழங்கப்பட்டு உள்ளது.


அந்த அட்டையில் எந்த நாளில் வந்து பொருட்கள் வாங்க வேண்டும் என அச்சிடப்பட்டு உள்ளது. அதேபோல் வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த நடைமுறையை தீவிரமாக பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். இதனை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட கலெக்டர் ஷில்பா அறிவித்தார்.

இதையடுத்து நெல்லை மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் உத்தரவின்படி, மாநகர பகுதி முழுவதும் மாநகராட்சி அதிகாரிகள் நேற்று அதிரடியாக சோதனை நடத்தினர். பாளையங்கோட்டை மண்டல உதவி ஆணையாளர் பிரேம் ஆனந்த் மேற்பார்வையிலும், தச்சநல்லூர் மண்டல உதவி ஆணையாளர் அய்யப்பன் மேற்பார்வையிலும் அந்தந்த பகுதியில் மாநகராட்சி அதிகாரிகள் சோதனை செய்தனர்.

வாகனங்களில் பொருட்கள் வாங்க வந்தவர்களை, அதிகாரிகள் தடுத்து நிறுத்தி அனுமதி அட்டையை கேட்டனர். அட்டை இல்லாதவர்களுக்கு உடனடியாக ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது. அதேபோல் முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கும் ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது. நெல்லை மாநகர பகுதியில் உள்ள 4 மண்டலங்களிலும் அதிகாரிகளும், போலீசாரும் இந்த அதிரடி நடவடிக்கையை தொடங்கி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த அதிரடி சோதனையில் அனுமதி அட்டை இல்லாமலும், முக கவசம் அணியாமலும் வந்த 112 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதன்மூலம் நேற்று ஒரே நாளில் ரூ.11 ஆயிரத்து 200 அபராதம் வசூலிக்கப்பட்டது.

எனவே, அத்தியாவசிய பொருட்களை வாங்க வெளியில் வரும் பொதுமக்கள் அபராதத்தை தவிர்க்கும் பொருட்டு தங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி அட்டையுடன் முக கவசம் அணிந்து வரவேண்டும். மேலும், சமூக இடைவெளியை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

தெலுங்கானாவில் இருந்து லாரி மூலம் நாமக்கல்லுக்கு வந்த என்ஜினீயர்கள் - போலீசார் மார்த்தாண்டம் அனுப்பி வைத்தனர்
ஊரடங்கையொட்டி பஸ், ரெயில்கள் ஓடாததால் தெலுங்கானாவில் இருந்து லாரி மூலம் நாமக்கல்லுக்கு வந்த என்ஜினீயர்கள் 2 பேரை போலீசார், முட்டை லாரியில் மார்த்தாண்டம் அனுப்பி வைத்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்தவர்கள் ஹாஜி, மெர்லின்ராஜ். இருவரும் என்ஜினீயர்கள். இவர்கள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வேளாண்மை பயிற்சிக்காக தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு சென்றனர். அங்கு தங்கி பயிற்சி எடுத்தனர்.

இதற்கிடையே கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் அவர்கள் பயிற்சி மேற்கொண்ட நிறுவனத்திலேயே தங்கி இருந்து வந்தனர். தற்போது மே மாதம் 3-ந் தேதி வரை ஊரடங்கை மத்திய அரசு நீட்டிப்பு செய்ததால் சொந்த ஊருக்கு புறப்பட முடிவு செய்தனர்.

ஆனால் பஸ், ரெயில் ஓடாததால் சுமார் 1,500 கி.மீட்டர் தூரம் கொண்ட மார்த்தாண்டத்திற்கு நடந்தோ அல்லது லாரிகளில் ஏறியோ செல்ல முடிவு செய்தனர். அதன்படி சுமார் 2 கி.மீட்டர் நடந்து வந்த அவர்கள் நாமக்கல்லை சேர்ந்த லாரி ஒன்றில் ஏறி நேற்று நாமக்கல் வந்து சேர்ந்தனர்.

இங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் அவர்கள் இருவரிடமும் விசாரணை நடத்தினார். பின்னர் அவர்கள் இருவரையும் முட்டை லாரி ஒன்றில் நாமக்கல்லில் இருந்து மார்த்தாண்டத்திற்கு அனுப்பி வைத்தார்.

ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை - போலீசார் எச்சரிக்கை
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேவிபட்டினம் போலீசார் எச்சரித்துள்ளனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கிச்செல்கின்றனர். அப்போது தேவையில்லாமல் சுற்றித்திரியும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுவதுடன் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி தேவிபட்டினம் சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாமுவேல் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது பனைக்குளம் பஸ் நிறுத்தத்தில் பொதுமக்கள் கூட்டமாக நின்று மீன்கள் வாங்கிச்செல்வதை பார்த்ததும், அவர்களிடம் சமூக இடைவெளியை கடைபிடிக் கும்படி கேட்டுக்கொண்டனர்.

மேலும் மீன் வியாபாரிகளிடம் பொதுமக்களை கூட்டமாக நிறுத்தி வைத்து வியாபாரம் செய்யக்கூடாது என்றும், வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் வீதி வீதியாக சென்று மீன் வியாபாரம் செய்யும்படியும் அறிவுறுத்தினர். அப்போது அந்த பகுதியில் ஏராளமானோர் கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வதை கண்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட னர். இதில் தேவையில்லாமல் சென்றவர்களின் வாகனங்களில் சிவப்பு வர்ணம் பூசப்பட்டு எச்சரிக்கை செய்தனர். அதனை தொடர்ந்து அழகன்குளம் பகுதிக்கு சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் ஏராளமானோர் கூடியிருப்பதை கண்டு அவர்களை எச்சரித்து கலைந்து போகச்செய்தார்.

பொதுமக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த புதிய செல்போன் செயலி - நெல்லை மாநகர போலீசார் அறிமுகம் செய்தனர்
நெல்லையில் பொதுமக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த புதிய செல்போன் செயலியை போலீசார் அறிமுகம் செய்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த காலகட்டத்தில் பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியே நடமாட தடை விதிக்கப்பட்டு உள்ளது.

ஆனால் அதையும் மீறி வெளியே சுற்றித்திரிபவர்களை போலீசார் பிடித்து வழக்குப்பதிவு, அபராதம், வாகனம் பறிமுதல் போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இந்தநிலையில் பொதுமக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு 2 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு மட்டுமே பொதுமக்கள் குறிப்பிட்ட நேரத்துக்குள் வந்து செல்ல வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.

அதையும் மீறி வெளியே வந்து செல்பவர்களை கட்டுப்படுத்தும் வகையில் நெல்லை மாநகர போலீசார் ஸ்மார்ட் சி.ஓ.பி என்ற புதிய செல்போன் செயலியை (ஆப்) உருவாக்கி உள்ளனர்.

இதன் செயல்பாட்டை நெல்லை சந்திப்பு அண்ணா சிலை சோதனை சாவடி அருகே மாநகர போலீஸ் துணை கமிஷனர் சரவணன் நேற்று மாலை தொடங்கி வைத்தார். இதுகுறித்து துணை கமிஷனர் சரவணன் கூறியதாவது:-

வெளியே வருவோரின் வாகன எண், செல்போன் எண், ஓட்டுனர் உரிமம் எண் அல்லது ஆதார் எண் அல்லது ரேஷன் கார்டு எண் ஆகியவற்றில் ஒன்றை புதிய செயலியில் போலீசார் பதிவு செய்வார்கள். இதன் மூலம் அவர்களது முகவரியை ஜி.பி.எஸ். கருவி மூலம் செயலி தானாகவே எடுத்துக் கொள்ளும். பிடிபட்ட நபரின் வாகனம் மற்றும் உருவத்தை புகைப்படம் எடுத்து அதில் பதிவு செய்யப்படும்.

அந்த நபர் 2 கிலோமீட்டரை தாண்டி வேறு ஒரு இடத்தில் போலீசாரிடம் பிடிபடும் போது, அவரது வாகன எண்ணை பதிவு செய்த உடன் மாட்டிக் கொள்வார். பின்னர் அவர் மீது வழக்கு, வாகனம் பறிமுதல், அபராதம் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த குறுந்தகவல் அவரது செல்போன் எண்ணுக்கு உடனடியாக சென்று விடும். எனவே தவறான தகவல்களை தெரிவித்து விட்டு வெளியே நடமாடினால், இந்த செயலி மூலம் சிக்கிக் கொள்வார்கள்.

எனவே அவசிய தேவையின்றி பொது மக்கள் வெளியே வரவேண்டாம். கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இதையொட்டி தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் போலீசார் சார்பில் விழிப்புணர்வு பேனரும், கொரோனா போன்ற உருவ பொம்மையும் அமைக்கப்பட்டு உள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad