Type Here to Get Search Results !

கிருஷ்ணகிரியில், பிறந்து 4 நாளில் பெண் சிசு மர்ம சாவு - போலீசாருக்கு தெரியாமல் உடலை புதைத்த தாய் மீது வழக்கு

கிருஷ்ணகிரியில் பிறந்து 4 நாட்களில் பெண் சிசு மர்மமான முறையில் இறந்தது. உடலை போலீசாருக்கு தெரியாமல் புதைத்ததாக குழந்தையின் தாயார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் பாபு. இவரது மனைவி சுதா (வயது 28). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர் கடந்த 13-ந் தேதி கிருஷ்ணகிரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அன்றைய தினம் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் 16-ந் தேதி சுதா, குழந்தையுடன் மருத்துவமனையில் இருந்து திடீரென மாயமானார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் மருத்துவ அலுவலர் டாக்டர் இனியன் மண்டோதரி, மருத்துவமனையில் இருந்து மாயமான சுதாவிடம் போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது சுதா குழந்தை இறந்து விட்டதாகவும், அதை புதைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். இது குறித்து மருத்துவ அலுவலர் இனியன் மண்டோதரி கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் செய்தார்.

இதில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட சுதா பெண் குழந்தை பிறந்த நிலையில் மாயமானார். அவரை தொடர்பு கொண்ட போது குழந்தை இறந்து விட்டதாகவும், உடலை புதைத்து விட்டதாகவும் கூறுகிறார். அவர் மருத்துவமனையில் இருந்து வெளியே சென்ற போதும், யாருக்கும் தெரிவிக்கவில்லை. அதே போல குழந்தை இறந்த விஷயத்தையும் யாரிடமும் தெரிவிக்கவில்லை. எனவே அவர் மீது சந்தேகம் உள்ளது. இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

அந்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் போலீசார் திருவள்ளுவர் நகரில் உள்ள சுதா வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் புதைக்கப்பட்ட சிசுவின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இது தொடர்பாக கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து போலீசாரிடம் கேட்ட போது, பெண் சிசு மர்ம சாவு தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது. பிரேத பரிசோதனைக்கு பிறகே சிசு இறந்ததற்கான காரணம் தெரிய வரும் என தெரிவித்தனர். மேலும் பெண் சிசு மர்ம சாவு மற்றும் உடலை போலீசாருக்கு தெரியாமல் புதைத்தது தொடர்பாக சுதா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று கூறினர்.

போலீஸ் பறிமுதல் செய்த வாகனங்களை மீட்டு தருவதாக பணம் வசூலித்த போலி வக்கீல் கைது
ஊரடங்கை மீறி சுற்றியதாக போலீஸ் பறிமுதல் செய்த வாகனங்களை மீட்டு தருவதாக கூறி பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்ட போலி வக்கீலை போலீசார் கைது செய்தனர்.
பதிவு: ஏப்ரல் 19,  2020 04:04 AM
செங்குன்றம்,

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அத்தியாவசிய தேவைகள் தவிர அனாவசியமாக இரு சக்கர வாகனங்களில் சுற்றுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்வதுடன், வாகனங்களையும் பறிமுதல் செய்து வருகின்றனர். இவ்வாறு பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் சில நாட்கள் கழித்து போலீசாரே உரியவர்களிடம் திருப்பி கொடுத்து வருகின்றனர்.

இந்தநிலையில் சென்னையை அடுத்த மாதவரம் பால் பண்ணை மாத்தூர் மஞ்சம்பாக்கம் காமராஜர் நகரைச் சேர்ந்த இன்பநாதன் உள்பட பலரது மோட்டார் சைக்கிள்களை ஊரடங்கை மீறி சுற்றியதாக போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர். இதையறிந்த அதே பகுதியைச் சேர்ந்த ஜெயசக்தி வடிவேல் (வயது 50), நான் ஒரு வக்கீல். மாதவரம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சிவகுமார் எனது நெருங்கிய நண்பர். அவருக்கு பணம் கொடுத்தால் போலீசார் பறிமுதல் செய்து உள்ள உங்கள் வாகனங்களை மீட்டு தருகிறேன் என்றார்.

அதை உண்மை என்று நம்பிய இன்பநாதன் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் தலா ரூ.600 வீதம் ஜெயசக்தி வடிவேலுவிடம் கொடுத்தனர். பின்னர் பணம் கொடுத்த அனைவரையும் நேற்று காலை புழல் போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்தார். அவர்களை கீழே நிற்க வைத்துவிட்டு போலீஸ் நிலையத்தின் மாடிக்கு சென்றுவிட்டு திரும்பி வந்த ஜெயசக்தி வடிவேல், இன்ஸ்பெக்டரிடம் பேசி விட்டேன். உங்கள் வாகனங்களை இன்னும் ஒரு மணி நேரத்தில் கொடுத்துவிடுவார் என்று கூறிவிட்டு அங்கிருந்து நைசாக செல்ல முயன்றார்.

இதனால் அவர் மீது சந்தேகம் அடைந்த சட்டம் ஒழுங்கு போலீசார், அவரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் வக்கீல் இல்லை. போலி வக்கீல் என்பதும், இன்ஸ்பெக்டர் தனது நண்பர் என்றுகூறி போலீஸ் பறிமுதல் செய்த வாகனங்களை மீட்டு தருவதாக பணம் வசூலித்து மோசடி செய்ததும் தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கடலூர் அருகே, தேர்தல் முன்விரோத தகராறில் தொழிலாளி அடித்து கொலை

கடலூர் அருகே தேர்தல் முன்விரோத தகராறில் தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்டார்.

கடலூர் அடுத்த தூக்கணாம்பாக்கம் அருகே உள்ள பள்ளிப்பட்டு காலனியை சேர்ந்தவர் ஜனார்த்தனன் (வயது 48). இவர் நடைபெற்று முடிந்த உள்ளாட்சி தேர்தலில் பள்ளிப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ராமச்சந்திரன் என்பவருக்கு ஆதரவாக வேலை செய்தார். ராமச்சந்திரனுக்கு எதிராக ரவி என்பவர் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதனால் ராமச்சந்திரன் ஆதரவாளர் ஜனார்த்தனனுக்கும், ரவியின் ஆதரவாளர் குமார் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த 14-ந்தேதி ஜனார்த்தனன், இவருடைய தரப்பை சேர்ந்த கூலி தொழிலாளி கமலக்கண்ணன்(40) ஆகிய இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த குமார் தரப்பினருக்கும், ஜனார்த்தனன் தரப்பினருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இருதரப்பினரும் ஒருவரையொருவர் இரும்பு பைப் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். இதில் இரு தரப்பை சேர்ந்த ஜனார்த்தனன், கமலக்கண்ணன், சிவா, ஜெயசீலன் உள்பட 7 பேருக்கு காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் கமலக்கண்ணன் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இதுகுறித்து இருதரப்பினரும் தனித்தனியாக கொடுத்த புகாரின்பேரில் குமார், மணியரசன், விஜயன், வெங்கடேசன், கிருஷ்ணராஜ், ஜெயசீலன், கோபு உள்பட 20 பேர் மீது தூக்கணாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மணியரசன்(27), விஜயன்(27), குமார் ஆகியோரை கைது செய்தனர். இதற்கிடையே புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கமலக்கண்ணன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 17 பேரை கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி, ரெட்டிச்சாவடி இன்ஸ்பெக்டர் சரஸ்வதி, சப்-இன்ஸ்பெக்டர் மாயகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் தூக்கணாம்பாக்கம் பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தூக்கணாம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அங்கு பதுங்கி இருந்த வெங்கடேசன், சிலம்பரசன், பாரதிதாசன், அரவிந்த், சிவராமன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

கல்வராயன்மலையில் இருந்து கள்ளச்சாராயம் கடத்தி வந்த 7 பேர் கைது
கல்வராயன் மலையில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு கள்ளச்சாராயம் கடத்தி வந்த 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் உத்தரவின் பேரில் காவல் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ராமநாதன், மகேஷ் ஆகியோர் தலைமையில் கல்வராயன்மலையில் கள்ளச்சாராய வேட்டையில் போலீசார் ஈடுபட்டனர். இதில் 50 ஆயிரம் லிட்டர் சாராய ஊறலை அழித்தனர். கள்ளச்சாராயம் காய்ச்சிய பலர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன் தலைமையில் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், செல்வநாயகம் மற்றும் போலீசார் 3 பிரிவுகளாக பிரிந்து கள்ளக்குறிச்சி அம்மன் நகர், பெருவங்கூர், மோகூர் ஆகிய பகுதிகளில் சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது கல்வராயன்மலையில் இருந்து அந்த வழியாக 3 இருசக்கர வாகனங்களில் சாராயம் கடத்தி வந்த, கள்ளக்குறிச்சியை சேர்ந்த ராமன் மகன்கள் வேல்முருகன் (வயது 26), ராகுல்(24), பொட்டியம் கிராமத்தைச் சேர்ந்த அர்ஜுனன் அருண்குமார்(20), கல்வராயன்மலை கவ்வியம் கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன்(36), கச்சிராயப்பாளையத்தைச் சேர்ந்த பாண்டியன் மகன் சின்னதுரை(30), செம்படாக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் மகன் ரகுபதி(29),பெருங்கூர் கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சன்(47) ஆகிய ஏழு பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 200 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

இதற்கிடையே கல்வராயன் மலையடிவார கிராமங்களில் கள்ளச்சாராயத்துக்கு தட்டுப்பாடு நிலவுவதால் விலை பலமடங்கு உயர்ந்து உள்ளதாக கூறப்படுகிறது. ஊரடங்குக்கு முன்பு 800 மி.லி. சாராயம் 50 ரூபாய்க்கு விற்பனையானது. ஆனால் இப்போது 1000 ரூபாய்க்கு விற்பனையாவதாக கூறப்படுகிறது.

பல்லடம் அருகே பனியன் நிறுவன தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு நடு காவேரியை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ் மகன் வினோத் (வயது 24). இவர் பல்லடம் அருகே உள்ள அருள்புரத்தில் தனியார் பனியன் சலவை நிறுவனத்தில் கடந்த ஒரு வருடமாக வேலை பார்த்து வந்தார். இதற்காக அங்குள்ள பனியன் நிறுவனத்தின் விடுதியில் தங்கியிருந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை விடுதி சமையலறையில் பனியன் துணியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். உடன் வேலை செய்பவர்கள் அளித்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பல்லடம் போலீசார் வினோத்தின் உடலை கைப்பற்றி பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வினோத் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தூத்துக்குடியில் டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் திருடிய 4 பேர் கைது
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மாதம் 24-ந் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அன்று முதல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டு உள்ளன.

அதன்படி தூத்துக்குடி வ.உ.சி. காய்கனி மார்க்கெட் அருகே உள்ள டாஸ்மாக் கடையும் மூடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அந்த கடையின் மேற்கூரையை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள், மதுபாட்டில்களை திருடி சென்று இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து மத்தியபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில், கடையில் ரத்தக்கறையுடன் கூடிய கால்தடம் இருந்தது. இதனால் காலில் சமீபத்தில் காயம் ஏற்பட்டு யாரேனும் சிகிச்சை பெற்று உள்ளார்களா? என்று விசாரணை நடத்தினர். அதன்பேரில் தூத்துக்குடி இந்திராநகரை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சார்லஸ் (வயது 30) என்பவரை பிடித்து விசாரித்தனர்.

அப்போது, சார்லஸ் தனது நண்பர்களான தூத்துக்குடி வண்ணார்தெருவை சேர்ந்த அந்தோணிதாசன் மகன் அந்தோணி (33), ஜார்ஜ் ரோட்டை சேர்ந்த செபஸ்டின் மகன் மைக்கேல்ராஜ் (39), முனியசாமிபுரத்தை சேர்ந்த சின்னப்பன் மகன் பிரவின் (30) ஆகியோருடன் சேர்ந்து மதுபாட்டில்களை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.

அவர்கள் போலீசில் அளித்த வாக்குமூலத்தில், கடந்த 2 வாரங்களாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால், மது அருந்தாமல் இருக்க முடியவில்லை. இதனால் போதைக்காக தூத்துக்குடியில் உள்ள ஒரு மருந்து கடையில் போதை மாத்திரைகள் வேண்டும் என்று கேட்டோம். அப்போது, கடைக்காரர் 2 விதமான மாத்திரைகளை தந்தார். ஆனால் அதில் திருப்தி இல்லாததால் டாஸ்மாக் கடையில் திருடினோம் என்று கூறி உள்ளனர்.

சீர்காழியில், ஊரடங்கை பயன்படுத்திபோலீஸ் கணவருடன் சேர்ந்து கடைகளில் பணம் வசூல் செய்த பெண் இன்ஸ்பெக்டர்
சீர்காழியில், ஊரடங்கை பயன்படுத்தி போலீஸ்கார கணவருடன் சேர்ந்து கடைகளில் பணம் வசூல் செய்தார் பெண் இன்ஸ்பெக்டர். இருவரையும் பணியிடை நீக்கம் செய்து தஞ்சை சரக டி.ஐ.ஜி. உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசின் சார்பில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அது நடைமுறையில் இருந்து வருகிறது. மருந்து கடைகள், மளிகை கடைகள், காய்கறி கடைகள் உள்பட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை மட்டும் குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந்த ஊரடங்கை பயன்படுத்தி போலீஸ்கார கணவருடன் சேர்ந்து கடைகளில் பணம் வசூல் செய்தார் ஒரு பெண் இன்ஸ்பெக்டர். இதன் காரணமாக இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இது பற்றிய விவரம் வருமாறு:-

கணவர்-போலீஸ்காரர், மனைவி-இன்ஸ்பெக்டர்

நாகை மாவட்டம் சீர்காழி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் ஸ்ரீபிரியா. இந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியாவிற்கு கொரோனா பாதுகாப்பு பணி வழங்கப்பட்டது. இதனால் இவர் கடந்த சில நாட்களாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார்.

இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியாவின் கணவர் பெயர் சோமசுந்தரம். இவர், திருவாரூர் மாவட்டம் எரவாஞ்சேரி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார். இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா, தனது கணவர் சோமசுந்தரத்துடன் தங்களுக்கு சொந்தமான காரில் சீர்காழியில் உள்ள பல்வேறு கடைகளுக்கு சென்று உள்ளார்.

அந்த கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டம் கூடுவதாக கடைக்காரர்களை மிரட்டி கடந்த சில நாட்களாக தொடர்ந்து பணம் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர்கள், இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான அதிகாரி ஒருவர் சீர்காழி வந்து கடைக்காரர்களிடம் விசாரணை நடத்தினார். இந்த விசாரணையில் பெண் இன்ஸ்பெக்டர் தனது கணவருடன் சேர்ந்து பணம் வசூல் செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவர், தனது விசாரணை அறிக்கையை உயர் அதிகாரிகளிடம் அளித்தார்.

பெண் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியாவும், அவரது கணவர் சோமசுந்தரமும் கடைக்காரர்களிடம் பணம் வசூல் செய்தது விசாரணையில் தெரிய வந்ததையடுத்து இருவரையும் பணியிடை நீக்கம் செய்து தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன் உத்தரவிட்டுள்ளார்.

மானாமதுரை அருகே ஆள் இல்லாத வீட்டை சாராய கடையாக மாற்றிய 4 பட்டதாரி வாலிபர்கள் கைது
ஆள் இல்லாத வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து, அந்த வீட்டை சாராய கடையாக மாற்றிய 4 பட்டதாரி வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

ஊரடங்கு காரணமாக அனைத்து டாஸ்மாக் கடைகளும் பூட்டி கிடக்கின்றன. இந்தநிலையில் திருட்டுத்தனமாக சாராயம் காய்ச்சி விற்கப்படும் நிகழ்வுகளும் நடக்கின்றன. இதை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதிகளில் துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் இன்ஸ்பெக்டர் சேது, சப்-இன்ஸ்பெக்டர் மாரிகண்ணன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர்.

அப்போது அன்னவாசல் புதூர் செல்லும் ரோட்டில் ஆள் இல்லாமல் பூட்டப்பட்டிருந்த ஒரு வீட்டில் மர்மமான முறையில் சிலரது நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் அந்த வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அந்த வீட்டின் உள்ளே விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சாராயம், சாராய ஊறல்கள் மற்றும் சாராயம் காய்ச்சுவதற்கான பொருட்களை கைப்பற்றி அழித்தனர்.

விசாரணையில் அந்த வீட்டை சேர்ந்தவர்கள் வெளியூரில் வசிப்பதும், எப்போதாவதுதான் வந்து செல்வதும் தெரியவந்தது. எனவே ஆள் இல்லாத வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து அந்த வீட்டை சாராய கடையாக மாற்றியதுடன், அங்கு சாராயம் காய்ச்சியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக கிளாங்காட்டூர் கிராமத்தை சேர்ந்த தவமணி, நாகேஸ்வரன், கார்த்திக், ராஜேஷ் ஆகிய 4 வாலிபர்களை போலீசார் கைது செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட இந்த 4 பேரும் பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

கேரட் கழுவும் எந்திரத்தில் துப்பட்டா சிக்கியது: தலை துண்டாகி இளம்பெண் பலி - ஊட்டி அருகே பரிதாபம்
ஊட்டி அருகே கேரட் கழுவும் எந்திரத்தில் துப்பட்டா சிக்கியதால், தலை துண்டாகி இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே எதுமை கண்டி பகுதியில் வசித்து வருபவர் சுப்பிரமணி(வயது 50). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சுமித்ரா(45). இவர்களுக்கு மணிகண்டன்(22), அருண்(15) என்ற 2 மகன்களும், நந்தினி(18) என்ற ஒரு மகளும் இருந்தனர். நந்தினி 10-ம் வகுப்பு வரை படித்து உள்ளார். சுமித்ரா தினக்கூலி அடிப்படையில் விவசாய தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். அவருடன் சேர்ந்து நந்தினியும் வேலைக்கு சென்று வருவது வழக்கம். இந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் ஊட்டி அருகே எப்பநாடு பகுதியில் ஒரு தோட்டத்தில் கேரட் அறுவடை செய்வதற்காக சுமித்ரா, நந்தினி ஆகிய 2 பேரும் மற்ற தொழிலாளர்களோடு சென்றனர். அங்கு கேரட்டுகள் அறுவடை செய்யப்பட்ட பின்னர், கழுவி மூட்டைகளாக லாரியில் ஏற்றி கேத்தி பாலாடாவுக்கு கொண்டு வரப்பட்டது. தொழிலாளர்களும் லாரியில் வந்தனர்.

அங்கு மூட்டைகள் பிரிக்கப்பட்டு கேரட் கழுவும் எந்திரத்தில் கேரட்டுகள் கொட்டப்பட்டன. தண்ணீரில் நன்றாக கழுவி சுத்தப்படுத்தப்பட்டு வெளியே வரும் கேரட்டுகளை தரம் பிரித்து மீண்டும் மூட்டைகளில் நிரப்பும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக நந்தினியின் துப்பட்டா, கேரட் கழுவும் எந்திரத்தில் சிக்கியது. எந்திரம் வேகமாக சுழன்று கொண்டு இருந்ததால், அதில் அவரும் சிக்கி கண்ணிமைக்கும் நேரத்தில் தலை துண்டாகி பலியானார்.

இதை பார்த்த சக தொழிலாளர்கள் அச்சத்தில் அலறி துடித்தனர். தன் கண் முன்னே மகள் பரிதாபமாக இறந்து கிடப்பதை பார்த்து சுமித்ரா கதறி அழுதார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கேத்தி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கேரட் கழுவும் எந்திரம் பாதுகாப்பாக உள்ளதா, அது சரிவர பராமரிக்கப்பட்டு வந்ததா என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது. வனவிலங்குகள் தொல்லை இருப்பதால் இரவில் காய்கறிகளை அறுவடை செய்யக்கூடாது என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டும், இதுபோன்ற சம்பவம் நடந்து உள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையில் சம்பவ இடத்துக்கு குன்னூர் தாசில்தார் குப்புராஜ் தலைமையிலான அதிகாரிகள் விரைந்து சென்று, விசாரணை நடத்தினார்கள். தொடர்ந்து உரிய பாதுகாப்பு இன்றி இயங்கியதாக கூறி அந்த கேரட் கழுவும் எந்திரம் உள்ள நிலையத்துக்கு ‘சீல்’ வைத்து நடவடிக்கை எடுத்தனர். மேலும் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad