Type Here to Get Search Results !

கொரோனா பரவுவதை தடுக்க ஊரடங்கு கட்டுப்பாடுகளை ‘தீவிரமாக அமல்படுத்துங்கள்’ - மத்திய அரசு; ஊரடங்கை கடைபிடியுங்கள் - பொதுமக்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

கொரோனா பரவுவதை தடுக்க ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரமாக அமல்படுத்துமாறு, மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
கொரோனா பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு மே 3-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கையொட்டி பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பதால் அத்தியாவசிய சேவைகள் தவிர மற்ற பணிகளும் முடங்கி உள்ளன. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருப்பதோடு, நாட்டின் பொருளாதாரமும் வீழ்ச்சி அடைந்து உள்ளது.

இதை கருத்தில் கொண்டு 20-ந் தேதி முதல் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று அறிவித்த மத்திய அரசு, அது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டது. அதில், எந்தெந்த பகுதிகளில் எந்தெந்த கட்டுப்பாடுகளை தளர்த்தலாம் என்பது பற்றி மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டு இருந்தது.

இதற்கிடையே, நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் மற்றும் பலியாவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாட்டில் கொரோனாவால் இதுவரை 17 ஆயிரத்து 265 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 543 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பது போன்ற கட்டுப்பாடுகளை மக்கள் சரிவர பின்பற்றாததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரமாக அமல்படுத்துமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச தலைமைச் செயலாளர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

கொரோனா பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில் சில மாநில, யூனியன்பிரதேச நிர்வாகங்கள், பேரழிவு மேலாண்மை சட்டத்தின் கீழ் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை மீறும் வகையில் சில நடவடிக்கைகளுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டு உள்ளன.

ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, கொரோனா பரவுவதை தடுக்க ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரமாக அமல்படுத்த வேண்டும். அந்த வழிகாட்டு நெறிமுறைகளை நீர்த்துப் போக செய்துவிடக்கூடாது. அத்துடன் அந்தந்த பகுதிகளின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப, தேவைப்பட்டால் கூடுதல் கட்டுப்பாடுகளையும் விதிக்கலாம்.

கட்டுப்பாடுகள் தொடர்பாக மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பின்பற்றி செயல்படவேண்டும் என்று சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்து இருந்ததையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறுவது கொரோனா பரவல் அச்சுறுத்தலை அதிகரிக்கும்.

மத்தியபிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரபிரதேசம் உள்ளிட் சில மாநிலங்களில் டாக்டர்கள், துணை மருத்துவ பணியாளர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் தாக்கப்பட்ட சம்பவங்கள் நடந்து உள்ளன. சமூக விலகல் முற்றிலுமாக புறக்கணிக்கப்படுவதும், நகர்ப்புறங்களில் வாகன போக்குவரத்து நடைபெறுவது கவலை அளிக்கிறது. இது போன்றவை உடனடியாக தடுத்து நிறுத்தப்படவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

கொரோனாவில் இருந்து தப்பிக்க எத்தனை சிரமங்கள் இருந்தாலும் ஊரடங்கை கடைபிடியுங்கள் - பொதுமக்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
கொரோனாவில் இருந்து தப்பிக்க, ஊரடங்கில் எத்தனை சிரமங்கள் இருந்தாலும் அதை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உலகத்தையே அச்சுறுத்திவரும் கொரோனா நோய்த்தொற்றுக்கு தமிழகத்தில் மேலும் ஒரு மருத்துவர் பலியாகியிருப்பது கவலையையும் வேதனையையும் பதற்றத்தையும் அதிகப்படுத்துகிறது. சென்னையை அடுத்த வானகரத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் கோவிட்-19 வைரஸ் பாதித்து சிகிச்சை பெற்றுவந்த 51 வயது நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் சைமன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். அந்தச் சோக நிகழ்வுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும், டாக்டர் சைமன் குடும்பத்தாருக்கு இதயமார்ந்த ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கொரோனாவின் கோரப்பிடியிலிருந்து மக்களைக் காக்கும் பணியில் அர்ப்பணிப்பு உணர்வுடன் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் அதே நோய்த்தொற்றுக்கு ஆளாவதும், அதுபோலவே, ‘ஊரடங்கு’ காவல் பணியில் இரவு பகல் பாராது எந்நேரமும் ஈடுபட்டுள்ள காவல்துறையினரும் நோய்த்தொற்றுக்கு ஆளாகியிருக்கும் செய்தியும், மனதில் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துகிறது.

மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டு நாள்தோறும் களத்தில் நின்று செய்திகள் சேகரிக்கும் ஊடகத்தினருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது மிகுந்த கவலை அளிக்கிறது.

3 நாட்களில் தமிழகத்தில் கொரோனா தொற்று ஒழிந்துவிடும் என்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 16.4.2020 அன்று வர்க்க பேத ஆரூடம் கணித்து அறிவித்திருந்த நிலையில், நோய்த்தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களிடம் அவநம்பிக்கையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இத்தகைய சூழலில் மருத்துவரின் உயிரிழப்பு என்பது, வைரஸ் பரவலைத் தடுப்பதில் அ.தி.மு.க. அரசு சிறிதும் அலட்சியம் காட்டாமல் செயல்பட வேண்டிய அவசரத்தையும் அவசியத்தையும் மிகவும் வலியுறுத்துகிறது.

விரைவு பரிசோதனை கருவிகள் வாயிலாக உரிய முறையிலும் மிக பரவலாகவும் சோதனைகள் நடத்தி, தொற்றின் அளவை மதிப்பீடு செய்து, அதனடிப்படையில் தடுப்பு மருத்துவ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய சூழல் தமிழகத்தில் நிலவுகிறது.

பொதுமக்களையும் மருத்துவர்கள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள், ஊடகத்தினர் உள்ளிட்ட மக்கள் நலன் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோரையும் கொரோனா நோய்த்தொற்றிலிருந்து பாதுகாக்கும் முக்கியமான கடமையை ஆட்சியாளர்கள் போர்க்கால அடிப்படையில் தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ள ஊரடங்கின் விதிமுறைகளை, எத்தனை சிரமங்கள் இருந்தாலும், முழுமையாகக் கடைப்பிடித்து, தனித்திருந்து, தற்காத்துக் கொள்ளுமாறு தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad