ராஜபாளையம் அருகே ஊரடங்கால் நீண்ட நாட்கள் நின்ற வேனுக்குள் ஏறி விளையாடிய சிறுமி பலி

ராஜபாளையம் அருகே ஊரடங்கால் நீண்ட நாட்களாக ஒரே இடத்தில் நின்று கொண்டிருந்த வேனில் ஏறி விளையாடிய சிறுமி பரிதாபமாக பலியானாள்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே தளவாய்புரம் பக்கம் உள்ள அயன் கொல்லங்கொண்டான் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி அழகுராணி. இவர்கள் 2 பேரும் அங்குள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு பிரியதர்ஷினி (வயது 9) என்ற மகளும், ஹரிபிரகாஷ் (6) என்ற மகனும் உண்டு.

இவர்களது வீட்டின் அருகே ஊரடங்கால் ஓடாத லோடு வேன் ஒன்று நின்று கொண்டிருந்தது. நேற்று மாலை பிரியதர்ஷினியும், ஹரிபிரகாசும் வேனின் உள்ளே ஏறி விளையாடி கொண்டு இருந்தனர்.

அப்போது திடீரென வேனின் பின்புற கதவு திறந்தது. இதனால் பிரியதர்ஷினி கீழே விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்தாள். உடனே அருகில் இருந்தவர்கள் சிறுமியை தூக்கிக் கொண்டு ராஜபாளையம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மதுரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாள். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பிரியதர்ஷினி பரிதாபமாக உயிரிழந்தாள். இது பற்றி சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் விசாரணை நடத்தி வருகிறார். ஊரடங்கால் ஊரே அமைதியாக இருந்த நேரத்தில் சிறுமி பலியான இந்த சம்பவம் அப்பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url