Type Here to Get Search Results !

சிக்கிய 80 வீடியோக்கள்: பெண்களை மிரட்டி பணம் பறிப்பு வாலிபரின் நண்பர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை பரபரப்பு தகவல்கள்

சிக்கிய 80 வீடியோக்கள்: பெண்களை மிரட்டி பணம் பறிப்பு வாலிபரின் நண்பர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை பரபரப்பு தகவல்கள்
பெண்களை மிரட்டி பணம் பறித்த வாலிபரின் நண்பர்களிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது பரபரப்பு தகவல்கள் வெளியாகின.

நாகர்கோவில் கணேசபுரம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் காசி என்ற சுஜி (வயது 26), பட்டதாரியான இவர் சென்னை பெண் டாக்டர் உள்பட பல பெண்களிடம் நெருங்கி பழகி மிரட்டி பணம் பறித்ததாக தகவல்கள் வெளியாகின.

பார்ப்பதற்கு கட்டுமஸ்தான உடலமைப்பு, சிவப்பு நிறம், ஆடம்பரமான ஆடைகள், விலை உயர்ந்த பைக்குகளுடன் உலா வருதல் என பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் இவர் பதிவிட்ட போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை பார்த்து மயங்கிய இளம்பெண்கள் பலர், காசியின் காதலிகள் ஆனார்கள். அப்படி, மயங்கிய இளம்பெண்களுடன் தனிமையில் நெருக்கமாக இருந்ததுடன், அந்த ஆபாசத்தை வீடியோவாகவும் பதிவு செய்து பணம் பார்க்க தொடங்கினார்.  இந்த பாணியில்தான் சென்னையை சேர்ந்த பிரபல தனியார் மருத்துவமனை பெண் டாக்டரிடமும் நெருக்கமாகி, அந்த வீடியோவை காட்டி பணம் பறித்தார். தற்போது காவல் நிலையம் வரை சென்று, காசி கைதாகி நாங்குநேரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

எப்படி இத்தனை பெண்களை தன்னந்தனியாக வீழ்த்த முடிந்தது என்பது பற்றி, தனிப்படை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது கூறியதாவது:- காசியின் லேப்டாப்பில் 80  வீடியோக்கள் மற்றும் போட்டோக்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. இதில் உள்ள சில வீடியோக்கள் பார்ப்பதற்கு அதிர்ச்சிகரமானதாக உள்ளது. பல தரப்பட்ட பெண்களுடன் மிகவும் ஜாலியாக தனது வாழ்க்கையை கழித்து இருக்கிறார். இவரிடம் சிக்கி ஏமாந்த இளம்பெண்கள் பலர், வசதி படைத்தவர்களாகதான் தெரிகிறார்கள். எனவே, காவலில் எடுத்து விசாரித்தால் வீடியோவில் உள்ள பெண்கள் குறித்த தகவல்கள் கிடைக்கும்.இவ்வாறு அதிகாரி கூறினார். 

காசி மீது  விமான பணிப்பெண் ஒருவரும் புகார் அளித்துள்ளனர். இவர், காசியின் பள்ளி தோழி ஆவார். இருவரும் நாகர்கோவிலில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில் படித்துள்ளனர். சென்னையில் விமான பணிப்பெண்ணுக்கான படிப்பில் இருந்தபோதுதான் மீண்டும் காசியுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் 1.50 லட்சமும், 16 கிராம் தங்க நகைகளையும் வாங்கி விட்டு, தோழிக்கு கம்பி நீட்டினார். பணத்தை திரும்ப கேட்க, ஆபாச வீடியோவை அனுப்பி மிரட்டினார். ரகசியமாக இதை வைத்திருந்த அந்த தோழி இப்போது  புகார் அளித்துள்ளார்.

‘முதலில் வீடியோ எடுக்கும்போதே தெரியாதா?‘
லேப்டாப் வீடியோவில் காசியின் டிக்டாக் உரையாடலும் உள்ளது. அதில் பொள்ளாச்சி பலாத்கார சம்பவத்தை மையப்படுத்தி, ‘‘பெண்கள் வானத்துக்கும், பூமிக்கும் குதிக்கிறீர்கள். ரொம்ப பெர்பெக்ட்டாக இருப்பதுபோல் பேசுறீங்க. வாய்ப்பை நீங்கள்தான் உருவாக்கி கொடுத்துவிட்டு, இப்போது அம்மா போச்சு. ஆத்தா போச்சுனா எப்படி.? அந்த பெண்ணின் அண்ணனும், அந்த பையனும் ப்ரண்ட். முதலில் வீடியோ எடுக்கும்போதே தெரியாதா?  மோசமானவன் என்று. உடனடியாக அண்ணன்கிட்ட சொல்லி இருக்கலாமே. 4 சுவருக்குள் நடந்ததை நாலாயிரம் பேர் பார்ப்பதுபோல் நீங்கள்தான் செய்கிறீர்கள். எனவே, எல்லா விஷயத்திலும் நீங்கள் பசங்கள மிஞ்ச முடியாது. ஒன்று சொல்றேன். வீட்டில வளருகிற கன்றுக்குட்டி ரோட்டுக்கு தான் போவேனு போனால், லாரியில் அடிபட்டு சாக தான் செய்யும்’’ என்று பேசி இருக்கிறார்.

இதுதொடர்பாக பெண் டாக்டர், நாகர்கோவில் பகுதியை சேர்ந்த பட்டதாரி பெண் ஆகிய 2 பேர் துணிச்சலாக புகார் கொடுத்தனர். தற்போது, பல பெண்களை ஏமாற்றிய காசி ஜெயிலில் உள்ளார்.

இதற்கிடையே பெண்களை ஏமாற்றியதில் காசியுடன் நெருங்கி பழகிய நண்பர்களுக்கும் தொடர்பு இருக்குமோ? என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே காசியின் நண்பர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் காசியின் நண்பர்கள் 4 பேரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

அதாவது “காசி எப்போதும் நிறைய பணம் வைத்திருப்பார். அந்த பணத்தை எங்களுக்கு செலவு செய்வார். நாங்கள் என்ன கேட்டாலும் வாங்கிக் கொடுப்பார். எனவே நாங்கள் காசியுடன் நெருங்கி பழகினோம். ஒன்றாக மது அருந்துவோம். ஆனால் காசி பெண்களுடன் பேசுவது மற்றும் பணம் கேட்டு மிரட்டுவது பற்றி எங்களிடம் இதுவரை கூறியதில்லை. அது பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. பணம் செலவழிப்பதால் மட்டுமே பழகினோம். மற்றபடி எங்களுக்கும், பணம் பறிப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை“ என்று 4 பேரும் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து 4 பேரையும் போலீசார் விடுவித்தனர். ஆனாலும் காசி விவகாரம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad