Type Here to Get Search Results !

தமிழகத்தில் கடந்த 14 நாட்களில் புதிதாக கொரோனா தொற்று இல்லாத 3 மாவட்டங்கள்; தமிழக முதல்வர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஊரடங்கு பற்றி ஆலோசனை

தமிழகத்தில் கடந்த 14 நாட்களில் புதிதாக கொரோனா தொற்று இல்லாத 3 மாவட்டங்கள்
கடந்த 14 நாட்களில் தமிழகத்தில் பதிவான தொற்றில் 54.25 சதவீதம் சென்னையில் பதிவாகி உள்ளது.

தமிழகத்தில் கடந்த 14 நாட்களில் ராணிப்பேட்டை, நீலகிரி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் புதிய கொரோனா வைரஸ் தொற்று எதுவும் கண்டறிப்படவில்லை.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2058 ஆக அதிகரித்துள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 673 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  குறிப்பாக, தமிழகத்தில் கடந்த 14 நாட்களில் 816 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில், சென்னையைத் தவிர 35 மாவட்டங்களில் 357 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

கடந்த 14 நாட்களில் தமிழகத்தில் பதிவான தொற்றில் 54.25 சதவீதம் சென்னையில் பதிவாகி உள்ளது. தொடக்கம் முதலே சென்னையில்தான் தொற்றின் தாக்கம் தீவிரமாக இருந்தது. அதிலும், கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்த வண்ணமே உள்ளது. ஆனால் மற்ற மாவட்டங்களில் கொரோனா பரவல் குறைந்திருக்கிறது.

குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தில் கடந்த 17 நாட்களாகவும், ராணிப்பேட்டையில் 15 நாட்களாகவும், கன்னியாகுமரியில் 14 நாட்களாகவும் நோய் தொற்று கண்டறியப்படவில்லை.
அதேபோல், ஈரோடு மாவட்டத்தில் கடந்த 13 நாட்களாக தொற்று பரவல் ஏற்படவில்லை. ஈரோடு மாவட்டத்தில் 70 பேர் கொரோனோ தொற்றுக்கு ஆளாகி இருந்தனர். இதில் ஒருவர் உயிரிழந்திருந்தார். மீதமுள்ள 69 பேரும் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.

இதன் மூலம் தொற்று பாதிக்கப்பட்டோர் இல்லாத மாவட்டமாக ஈரோடு உள்ளது.இதுதவிர, வேலூர், கரூர், தேனி ஆகிய மாவட்டங்களில் 11 நாட்களாகவும் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.அதேபோன்று கடலூரில் 9 நாட்களாகவும், தூத்துக்குடி, நாகப்பட்டினம், சிவகங்கை, புதுக்கோட்டையில் 8 நாட்களாகவும் கொரோனா தொற்று யாருக்கும் உறுதி செய்யப்படவில்லை. அதேபோல், கிருஷ்ணகிரியில் இதுவரை யாருக்கும் கொரோனா தொற்று இல்லை.

தமிழக முதல் அமைச்சர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஊரடங்கு பற்றி ஆலோசனை
தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி ஊரடங்கு தளர்வுகள் பற்றி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.

கொரோனா பாதிப்பு எதிரொலியாக தமிழகம் உள்பட நாடு முழுவதும் வருகிற மே 3ந்தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது.  எனினும் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து உள்ளது.  தமிழகத்தில் இதுவரை கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.

நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமுடன் ஈடுபட்டு வருகிறது.  பொதுமக்கள் அளிக்கும் ஒத்துழைப்புக்கு ஏற்ப கொரோனா பாதிப்புகளில் இருந்து தமிழகம் விடுபடும் என கூறியுள்ளது.  இதற்கு சமூக இடைவெளி, முக கவசம் அணிதல் மற்றும் கைகளை கழுவுதல் உள்ளிட்ட விசயங்களை கடைப்பிடிக்கும்படி தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.

கொரோனா தடுப்பு பணிகளை ஒருங்கிணைக்க சிறப்பு குழுக்களை ஏற்படுத்த முடிவு செய்து, அதன்படி 40 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கொண்ட 12 குழுக்களை அரசு அமைத்துள்ளது.  இந்த குழுக்களுடன் முதல் அமைச்சர் பழனிசாமி நேற்று ஆலோசனை மேற்கொண்டார்.

இதனை தொடர்ந்து, தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி ஊரடங்கு தளர்வுகள் பற்றி காணொலி காட்சி மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.  இந்த ஆலோசனையில், மே 3ந்தேதிக்கு பிறகு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அமைச்சர்கள் வேலுமணி, உதயகுமார் உள்ளிட்டோரும், அரசு உயரதிகாரிகள், காவல் துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் கொரோனா பரவல் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலையில் சிறப்பாக பணியாற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல் அமைச்சர் பாராட்டுகளை தெரிவித்து கொண்டார்.  இதன்பின்னர் அவர் பேசும்பொழுது, மாவட்ட ஆட்சியர்களின் சிறப்பான பணியால் அத்தியாவசிய பொருட்கள் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி கிடைக்கின்றன.

அரசின் வழிமுறைகளை பின்பற்றினால் கொரோனாவை முழுமையாக தடுக்கலாம்.  கிராமப்புறங்களில் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.  நகர்ப்புறங்களில் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.  சமூக இடைவெளி மற்றும் ஊரடங்கு விதிகளை மக்கள் முறையாக பின்பற்ற வேண்டும் என கூறினார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad