பீட்சா டெலிவரி செய்யும் நபருக்கு கொரோனா - 72 குடும்பத்தினருக்கு தனிமைப்படுத்தி கொள்ள அறிவுறுத்தல்

டெல்லியில் பீட்சா டெலிவரி செய்யும் நபருக்கு கொரோனா - தலைநகர் டெல்லியில் இதுவரை 1578 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து இந்தியாவும் தப்பவில்லை. இந்தியாவிலும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 13 ஆயிரத்தைக் கடந்துள்ளது.  கொரோனா பரவலைக்க்கட்டுப்படுத்த இந்தியாவில் மே 3 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,  டெல்லியில் பீட்சா டெலிவரி செய்த இளைஞர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, 19-வயதான அந்த இளைஞர், பீட்சா டெலிவரி செய்த 70-க்கு மேற்பட்ட குடும்பத்தினர் தற்போது கடும் அச்சத்தில் உள்ளனர்.   டெல்லியின் ஹவுஸ்காஸ், மால்வியா நகர், சாவித்ரி நகர் உள்ளிட்ட பகுதிகளில் அந்த இளைஞர் கடந்த ஏப்.12ம் தேதி முதல் பீட்சா டெலிவரி செய்து வந்துள்ளார். கடந்த 15 நாட்களில் மட்டும், கிட்டதட்ட 72 வீடுகளுக்கு அவர் பீட்சா டெலிவரி செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

தொடர்ந்து, கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டுள்ள அந்த இளைஞர், தற்போது டெல்லி ஆர்எம்எல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, அவர் பீட்சா டெலிவிரி செய்த வீடுகளில் உள்ளவர்களும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.  தொடர்ந்து, அந்த இளைஞருடன் தொடர்பில் இருந்த 20-க்கும் மேற்பட்ட டெலிவரி செய்யும் நபர்களும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

பீட்சா டெலிவரி செய்த அந்த இளைஞருக்கு எந்த பயண பின்னணியும் இல்லை. அதனால், அவர் வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்தினருக்கு பீட்சா வழங்கும் போது அவருக்கும் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.   உணவு டெலிவரி செய்யும் நபருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது,  இந்தியா முழுவதும் ஆன்லைன் மூலமாக உணவுப்பொருட்களை ஆர்டர் செய்து பெறும் நபர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url