Type Here to Get Search Results !

சீனாவில் இருந்து 5 லட்சம் கொரோனா விரைவு பரிசோதனை உபகரணங்கள் இந்தியா வந்தன: தமிழகத்துக்கு 2 நாளில் வர வாய்ப்பு

சீனாவில் இருந்து விமானம் மூலம் 5 லட்சம் கொரோனா விரைவு பரிசோதனை உபகரணங்கள் இந்தியா வந்தன
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. தற்போது வைரஸ் பரவலில் அமெரிக்கா முதலிடத்திலும், இத்தாலி இரண்டாவது இடத்திலும் உள்ளன. முதன் முதலில் வைரஸ் பரவிய சீனாவின் வுகான் நகரில், இரண்டு மாத ஊரடங்கு உத்தரவுக்கு பின்னர் இயல்புநிலை திரும்பி, அங்கு மீண்டும் மக்களின் இயல்பு வாழ்க்கை தொடங்கி உள்ளது. ஆனால், இன்னமும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களால், அங்கு வைரஸ் பரவல் இருந்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால், பெரிய அளவில் இல்லை. சீனாவில் வைரஸ் வேகமாக பரவியபோது, அங்கு மருந்து, கையுறை, முகக்கவசம், முழு உடல் பாதுகாப்பு உடைகள் போன்றவற்றுக்கு கடும் தட்டுப்பாடு நிலவியது.

இதையடுத்து, இந்தியாவின் சார்பில் உடனடியாக ஏற்றுமதி தடை நீக்கப்பட்டு அந்நாட்டுக்கு இவை சரக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கு நன்றிக்கடனாக சமீபத்தில் சீனா, ஒரு லட்சம் முழு உடல் பாதுகாப்பு உடைகளை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தது இந்நிலையில், தற்போது இந்தியாவில் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க அதிவிரைவு பரிசோதனை கருவிகள் (ரேபிட் டெஸ்ட் கிட்) சீனாவிடம் ஆர்டர் கொடுக்கப்பட்டன. இதன்படி சீனாவின்  காங்க்சோ நகரில் இருந்து 5 லட்சம் டெஸ்ட் கிட்டுகளை சரக்கு விமானம் மூலம் சீனா நேற்று காலை அனுப்பியது. இந்த சரக்கு விமானம் நேற்று மாலை டெல்லி வந்து சேர்ந்தது.

சீனாவின் ரேபிட் டெஸ்ட் கிட்டுகளை சுங்கத்துறை அதிகாரிகள் முதலில் பரிசோதனை செய்வார்கள். அது உரிய தரத்துடன் இருந்தால், அதை நாட்டில் பயன்படுத்த அனுமதி அளிப்பார்கள். அதைத் தொடர்ந்து, அவை டெல்லியில் உள்ள தேசிய மலேரியா ஆய்வு நிறுவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும். அங்கிருந்து தேவைப்படும் மாநிலங்களுக்கு பிரித்து, சரக்கு விமானம் மூலம் அனுப்பப்படும்.

 இந்த ரேபிட் டெஸ்ட் கிட்டுகளை தமிழகம் அதிகளவில் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. இதனால், இவை 2 நாளில் தமிழகத்துக்கு வந்து சேர வாய்ப்பு உள்ளது.

உடுமலை அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை பாதுகாப்புக்கான கண்ணாடி கூண்டு
உடுமலை அரசு மருத்துவமனையில், கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளதா? என்று பரிசோதனை செய்யும் மருத்துவர்களின் பாதுகாப்பிற்கான கண்ணாடி கூண்டு வைக்கப்பட்டுள்ளது.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்குதல் உலக நாடுகளை நடுங்க வைத்துள்ளது. இந்த நிலையில் தற்போது இந்தியாவில் இந்த வைரஸ் தாக்கம் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் தாக்குதல் அறிகுறிகளை கண்டறியும் மருத்துவர்கள், நர்சுகள், சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், நர்சுகள் ஆகியோரது பாதுகாப்பிலும் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அதற்கான முக கவசம், முழு கவச உடை, கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்கி வருகிறது.

அதன் தொடர்ச்சியாக உடுமலை அரசு மருத்துவமனையில் சளி, இருமல், காய்ச்சல் என்று வருகின்ற, நோயாளிகளுக்கு கொரோனா அறிகுறி முதல்கட்ட மருத்துவ பரிசோதனைசெய்வதற்கு மருத்துவர்களின் பாதுகாப்பிற்காக கண்ணாடி கூண்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த கண்ணாடி கூண்டிற்குள் இருக்கும் மருத்துவர், இந்த கூண்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள 2 துவாரங்கள் வழியாக கைகளை வெளியே விட்டு, வெளிப்பகுதியில் உட்கார்ந்திருக்கும் நோயாளியை பரிசோதனை செய்வார்.

அதன்படி உடுமலை அரசு மருத்துவமனைக்கு சளி, இருமல், காய்ச்சல் என்று வருகின்ற நோயாளிகளுக்கு முதல்கட்டமாக கொரோனா தொற்று அறிகுறி ஏதும் உள்ளதா? என்று பரிசோதனை செய்யப்படுகிறது. அவ்வாறு தொற்று அறிகுறி ஏதும் இல்லாத பட்சத்தில் மருந்து, மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள். கொரோனா தொற்று முதல்கட்ட அறிகுறி தென்பட்டால் மட்டும் மருத்துவர் குழுவினரின் ஆலோசனைப்படி மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளதா? என்ற மருத்துவ பரிசோதனைக்கு, மருத்துவர்களின் பாதுகாப்பிற்காக உடுமலை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள இந்த கண்ணாடி கூண்டு நேற்று பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இதன் பயன்பாட்டை கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தொடங்கிவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் உடுமலை ஆர்.டி.ஓ. ரவிக்குமார், அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் முருகன், துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், தாசில்தார் ஜெய்சிங் சிவக்குமார், நகராட்சி பொறியாளர் தங்கராஜ், நகர் நல அலுவலர்(பொறுப்பு) சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad