Type Here to Get Search Results !

பேரம்பாக்கத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி: 5 கி.மீ தொலைவுக்குள் உள்ள கிராமங்களின் எல்லைகள் மூடல் - மாவட்ட கலெக்டர் தகவல்

பேரம்பாக்கத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 5 கிலோமீட்டர் தொலைவில் அடங்கிய கிராமங்களின் எல்லைகள் மூடப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் பேரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க ஒருவர், டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டு கடந்த மாதம் 24-ந் தேதி தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

இந்தநிலையில் அவருக்கு தொடர்ந்து காய்ச்சல் இருந்து வந்த காரணத்தால், கடந்த 1-ந் தேதியன்று திருவள்ளூர் அடுத்த பூதூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரது ரத்த மாதிரியை பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

எனவே அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனையில் தானே முன்வந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

இதன் காரணமாக பேரம்பாக்கம் ஊராட்சி மற்றும் அதனை சுற்றி உள்ள 5 கிலோமீட்டர் தொலைவில் அடங்கிய கிராம ஊராட்சிகளின் எல்லைகள் மூடப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேற்கண்ட தகவல் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டருடன் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஆலோசனை
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டருடன் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பணிந்திரரெட்டி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் கிராம கோவில் பூசாரிகள் நல வாரியத்தில் 483 பூசாரிகள் உறுப்பினர்களாக உள்ளனர். ஊரடங்கு உத்தரவு காரணமாக கோவில்கள் மூடப்பட்டு உள்ளதால், கிராம கோவில்களில் பணிபுரியும் பூசாரிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அவர்களுக்கு உதவித்தொகையாக ரூ.1,000 வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டார்.

இத்தொகை பூசாரிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பணிந்திரரெட்டி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆய்வு கூட்டம் நடத்தினார்.

அதன்படி செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற காணொலி காட்சி ஆய்வு கூட்டத்தில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரேணுகாதேவி, கோவில் ஆய்வாளர் கோவிந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கடலூர் மாவட்டத்தில், நாளை முதல் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படாது - கலெக்டர் அன்புசெல்வன் அறிவிப்பு
கடலூர் மாவட்டத்தில் நாளை (திங்கட்கிழமை) முதல் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படாது என்று கலெக்டர் அன்புசெல்வன் கூறினார். இது தொடர்பாக அவர் நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு அடுத்த மாதம் (மே) 3-ந்தேதி வரை கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறையினர் மாவட்டத்தில் பரவும் கொரோனாவை பொறுத்து சிவப்பு, ஆரஞ்சு, பச்சை ஆகிய 3 மண்டலமாக பிரித்து உள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் ஆரம்ப காலத்தில் கொரோனா தொற்று இல்லாத நிலை இருந்தது. அதன்பிறகு குறிப்பிட்ட சில நாட்களில் 20 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், சிவப்பு மண்டலத்துக்குள் கடலூர் வந்து விட்டது. இதனால் இந்த ஊரடங்கை மேலும் கடுமையாக்க வேண்டிய நிலை உள்ளது.

அடுத்த மாதம் 3-ந்தேதி வரையிலும் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படாது. நாளை (திங்கட்கிழமை) முதல் இந்த ஊரடங்கு உத்தரவு கடுமையாக்கப்படும். ஊரடங்கை முழுமையாக விலக்கி கொள்ள சாத்தியம் இல்லை என்பதை மீண்டும் மாவட்ட மக்களுக்கு தெளிவுப்படுத்துகிறோம்.

சிவப்பு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலத்துக்கு செல்ல வேண்டுமென்றால் தொடர்ந்து 14 நாட்களுக்கு புதிய தொற்று வரக்கூடாது. இதே நடைமுறை தான் பச்சை மண்டலத்திற்கு செல்வதற்கும் கடைபிடிக்கப்படுகிறது. ஆகவே 28 நாட்களில் புதிதாக யாருக்கும் கொரோனா இல்லையென்றால் மட்டுமே இயல்பு நிலைக்கு திரும்ப முடியும்.

இந்த ஊரடங்கு உத்தரவை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும். மாவட்டத்தை பொறுத்தவரையில் கொரோனா நோய் சமூக தொற்றாக மாறக்கூடாது என்பதற்காக, கொரோனா நோய் பாதித்தவர்கள் தங்கி இருந்த பகுதிகளை கண்டறிந்து, 7 கிலோ மீட்டர் தூரம் பாதுகாக்கப்பட்ட பகுதியாக நிர்ணயித்து சுகாதார பணிகளை செய்து வருகிறோம்.

கடலூர் மாவட்டத்தில் 6 தாலுகா பகுதிகளில் 117 வருவாய் கிராமங்கள் 5 கிலோ மீட்டர் தொலைவிலும், 83 வருவாய் கிராமங்கள் 2 கிலோ மீட்டர் தூரம் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் வருகிறது. ஆக 200 வருவாய் கிராமங்கள் உள்ளடங்கி உள்ளது. அதில் 5 நகராட்சிகளில் விருத்தாசலம், பண்ருட்டி, சிதம்பரம் ஆகிய 3 நகராட்சிகளும், வடலூர், குறிஞ்சிப்பாடி, கிள்ளை, லால்பேட்டை, பரங்கிப்பேட்டை, அண்ணாமலைநகர், காட்டுமன்னார்கோவில் ஆகிய பேரூராட்சிகளும் சிவப்பு மண்டல பகுதியில் வருகிறது.

மாவட்டத்தில் பெரும்பாலான இடங்கள் சிவப்பு மண்டல பகுதியில் வருவதால் இந்த இடங்களில் இருந்து வெளியே யாரும் வரக்கூடாது. உள்ளேயும் செல்ல அனுமதியில்லை. கட்டுப்பாட்டு மண்டலத்தில் கொரோனா தொற்று உள்ள கடைசி நபருக்கு பாதிப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட்ட பின் தொடர்ந்து 28 நாட்கள் கண்காணிப்போம். அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியே வரும் பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். மீறி செல்வோருக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படும்.

ஏற்கனவே விதி விலக்கு அளிக்கப்பட்டு விவசாய சம்பந்தப்பட்ட போக்குவரத்துக்கு எந்த தடையும் இல்லை. 3 நிறங்களில் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாரத்திற்கு 2 முறை மட்டுமே வெளியே வர முடியும். இந்த நடைமுறை மேலும் கடுமையாக்கப்படும்.

20-ந்தேதிக்கு (நாளை) பிறகு குறிப்பிட்ட தொழிலை தொடங்கலாம் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது. ஆனால் நமது மாவட்டம் சிவப்பு மண்டலத்தில் இருப்பதால் அதற்கு அனுமதி வழங்க முடியாது. அதேபோல் பாதுகாக்கப்படாத பகுதியில் இருப்பவர்கள் அவர்களாகவே கடைகள், நிறுவனங்களை திறக்கக்கூடாது. மாவட்ட நிர்வாகத்திடம் விண்ணப்பம் அளித்து, வருவாய்த்துறை, உள்ளாட்சி துறை அதிகாரிகள் ஆய்வுக்கு பிறகு தான் திறக்க முடியும்.

மேலும் கடைகளை திறப்பதற்கு முன்பு கண்டிப்பாக கிருமி நாசினி தெளிக்க வேண்டும். சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும்.

கிராம பூசாரிகள் 1,323 பேர், நலிவடைந்த கலைஞர்கள் 1933 பேர் உள்ளனர். அவர்களுக்கு தலா ரூ.1000 வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் 3,721 நடமாடும் காய்கறி கடைகள் மூலமாக 1,757 டன் காய்கறிகள் விற்பனை செய்துள்ளோம். ரம்ஜான் நோன்பு கஞ்சி தயாரித்து வழங்கிட 87 பள்ளிவாசல்களில் 138 மெட்ரிக் டன் பச்சரிசி வழங்கப்பட உள்ளது. பள்ளிவாசல் நிர்வாகிகள் சேமிப்பு கிடங்கில் இருந்து பெற்று, அதை வீடுகளுக்கு நேரிடையாக சென்று வழங்க வேண்டும். பள்ளிவாசல்களில் நோன்பு கஞ்சி காய்ச்ச கூடாது. விவசாயிகள் பிரச்சினை தீர்க்கப்பட்டு வருகிறது. அறுவடை எந்திரங்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 3-ந்தேதி வரை கண்டிப்பாக ஊரடங்கு இருப்பதால் பொதுமக்கள் கட்டுப்பாடுடனும், பொறுமையுடனும் இருக்க வேண்டும்.

பேட்டியின் போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன், நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் ரமேஷ்பாபு, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் கீதா ஆகியோர் உடனிருந்தனர்.

கனரா வங்கி ஊழியர்கள் சார்பில் மளிகை பொருட்கள் அடங்கிய 100 பொட்டலங்கள் கலெக்டரிடம் வழங்கப்பட்டது
ஈரோடு மண்டலத்தில் பணியாற்றும் கனரா வங்கி ஊழியர்கள் சார்பில் மளிகை பொருட்கள் அடங்கிய 100 பொட்டலங்கள் கலெக்டர் அலுவலகத்தில் வைத்து வழங்கப்பட்டன.

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நேரத்தில் பொருளாதார சிரமத்தால் குடும்பம் நடத்த கஷ்டப்படும் ஏழைகள், தினசரி கூலித்தொழிலாளர்களுக்கு, ஈரோடு மண்டலத்தில் பணியாற்றும் கனரா வங்கி ஊழியர்கள் சார்பில் மளிகை பொருட்கள் அடங்கிய 100 பொட்டலங்கள் வழங்கப்பட்டன. இந்த பொருட்களை மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் முகாம் அலுவலகத்தில் நடந்தது.

நிகழ்ச்சியில் கனரா வங்கியின் ஈரோடு உதவி மண்டல மேலாளர் எம்.ஜி.ஜனார்த்தன ராவ் கலந்து கொண்டு, 5 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, 1 லிட்டர் சமையல் எண்ணெய் அடங்கிய 100 பொட்டலங்களை, மாவட்ட கலெக்டர் சி.கதிரவனிடம் வழங்கினார். மேலும் கனரா வங்கி சங்கத்தின் சார்பில், ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள போலீசாருக்கு முகக்கவசம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கனரா வங்கி அதிகாரி சி.வேலுசாமி, முன்னோடி வங்கி முதன்மை மேலாளர் எஸ்.அரவிந்தன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

தடை செய்யப்பட்ட பகுதிகளில் தொழிற்சாலை, அலுவலகம் செயல்பட அனுமதி கிடையாது - கலெக்டர் ராமன் பேட்டி
தடை செய்யப்பட்ட பகுதிகளில் தொழிற்சாலை, அலுவலகம் செயல்பட அனுமதி கிடையாது என்று கலெக்டர் ராமன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவுவதை தடுப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஊரடங்கு அமலில் உள்ள இந்த நேரத்தில் பொதுமக்களுக்கு தேவையான உணவுகள் மற்றும் மளிகை பொருட்களை வழங்குவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. முக்கியமாக கோர்ட்டு தீர்ப்பில் சுட்டிக்காட்டியபடி நடந்து கொள்ள வேண்டும்.

அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் இருக்க கூடிய பல்வேறு அரசியல் கட்சிகள், அறக்கட்டளை நிர்வாகிகள், தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகிகள் என யாராக இருந்தாலும் கோர்ட்டு உத்தரவுப்படி தான் நடந்து கொள்ள வேண்டும். எந்த பகுதியில் உணவு பொருட்களை வழங்குவது என்பது குறித்த தகவல்களை 48 மணி நேரத்திற்கு முன்னதாக அந்தந்த பகுதிகளில் உள்ள போலீஸ் அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும். மாநகராட்சியாக இருந்தால் ஆணையாளரிடம் அனுமதி பெற வேண்டும்.

மேலும் அவர்கள் உணவு கொடுக்கும் இடத்துக்கு உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் சென்று, அதை ஆய்வு செய்த பின்னர் தான் வழங்க வேண்டும். இதை வழங்குவதற்காக ஒரு வாகனத்தில் டிரைவரை தவிர 3 பேர் தான் செல்ல வேண்டும். இந்த நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். கோர்ட்டு உத்தரவை புறக்கணித்து பல்வேறு இடங்களில் உணவு பொருட்களை வழங்குவதாக புகார்கள் வருகிறது.

அவர்கள் மீது போலீஸ் மூலம் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். வரக்கூடிய காலக்கட்டத்தில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்குவதற்காக எல்லாவித நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். மாவட்டத்தில் ஆயிரம் ‘ரேபிட் டெஸ்ட் கிட்’ பரிசோதனை கருவி வந்துள்ளது. இந்த கருவி மூலம் அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்ய தொடங்கி உள்ளோம். தடை செய்யப்பட்டுள்ள பகுதியில் இந்த பரிசோதனை கருவியை பயன்படுத்த உள்ளோம்.

மாவட்டத்தில் 24 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 7 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரைக்கும் சமூக தொற்று இல்லை. இதை உறுதிப்படுத்துவது தான் இந்த ரேபிட் டெஸ்ட் கிட்டின் முக்கியமான நோக்கமாகும். அரசு அமைத்த குழுவின் அறிக்கைக்கு பின்னர் தான், 20-ந் தேதிக்கு பிறகு எந்தெந்த தொழிற்சாலைகள் செயல்பட வேண்டும் என்பது தெரியவரும். மேலும் எல்லா அலுவலகத்துக்கும் அதிகப்படியான அரசு ஊழியர்கள் பணிக்கு வர வாய்ப்பு உள்ளது.

மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் இருக்க கூடிய எந்த ஒரு அலுவலகமும், தொழிற்சாலையும் செயல்பட அனுமதி கிடையாது. இது தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்று அவர் கூறினார்.

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அதிகாரிகள் ஆய்வு
கொரோனா தடுப்பு பணிகள் குறித்து சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு கண்காணிப்பு குழு அதிகாரிகள் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

சேலம் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பு பணிகளை கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்ட சிறப்பு கண்காணிப்பு குழு அதிகாரிகளான டாஸ்மாக் இயக்குனர் கிர்லோஸ்குமார், காவல்துறை கூடுதல் இயக்குனர் மஞ்சுநாதா ஆகியோர் நேற்று காலை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் ஆஸ்பத்திரியில் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து அவர்கள் கொரோனா வார்டில் உள்ள நோயாளிகளுக்கு அளிக்கப் படும் சிகிச்சை முறைகள் குறித்து, அங்கு பணிபுரியும் டாக்டர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆஸ்பத்திரி டீன் பாலாஜிநாதனிடம் கேட்டறிந்தனர்.

மேலும், ஆஸ்பத்திரியில் மருந்து பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் போதிய அளவில் இருப்பில் உள்ளதா? என டாக்டர்களிடம் சிறப்பு கண்காணிப்பு குழு அதிகாரிகள் கேட்டறிந்தனர். இதையடுத்து ஆஸ்பத்திரியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசார் மற்றும் பேரிடர் மேலாண்மை குழுவினருக்கு அதிகாரிகள் கிர்லோஸ்குமார், மஞ்சுநாதா ஆகியோர் பல ஆலோசனைகளை வழங்கினர். அப்போது அவர்கள் அரசு விதிமுறைகளை நோயாளிகள் முறையாக பின்பற்றுகிறார்களா? ஆஸ்பத்திரியில் பொதுமக்கள் கூட்டம் கூடாமல் கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

இதனை தொடர்ந்து அஸ்தம்பட்டி சிறைச்சாலை முனியப்பன் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள உழவர் சந்தைக்கு அதிகாரிகள் சென்றனர். அப்போது, சந்தையில் ஏற்படுத்தப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை தடுப்பு பணிகள் குறித்தும், பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் காய்கறிகளை வாங்கி செல்வதை கண்காணிக்க வேண்டும் என்றும் அங்கிருந்த மாநகராட்சி ஊழியர்களிடம் சிறப்பு கண்காணிப்பு குழு அதிகாரிகள் கிர்லோஸ்குமார், மஞ்சுநாதா ஆகியோர் ஆலோசனை கூறினர். எடப்பாடி நகராட்சி பகுதியிலும், மேட்டூர் நகராட்சி பகுதியிலும் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பு பணிகளையும் சிறப்பு கண்காணிப்பு குழு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

மாநகராட்சி பகுதிகளில்பொதுமக்கள் வெளியே வர அனுமதி அட்டை வழங்கும் திட்டம் தொடக்கம்
திருச்சி மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்கள் வெளியே வர அனுமதி அட்டை வழங்கும் திட்டத்தை ஆணையர் சிவசுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்கள் வெளியே வர அனுமதி அட்டை வழங்கும் திட்டத்தை ஆணையர் சிவசுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

திருச்சி மாநகராட்சியில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக 4 கோட்டங்களிலும் உள்ள வீடுகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக வெளியே செல்வதற்கான 5 வண்ணங்களில் அனுமதி அட்டை வழங்க மாநகராட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் நாளை(திங்கட்கிழமை) முதல் நடைமுறைக்கு வருகிறது.

அதன்படி வாரத்தில் ஒருநாள் மட்டும் அதுவும் வீட்டில் ஒருவர் மட்டும் வெளியே வந்து காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்கி செல்ல வேண்டும். 18 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே இந்த அனுமதி அட்டையை பயன்படுத்த முடியும். மருத்துவ அவசரத்துக்கு விதிவிலக்கு அளிக்கப்படுகிறது.

மேலும், வெளியே வரும்போது கட்டாயம் முககவசம் அணிந்து வர வேண்டும் என்றும், அவ்வாறு வராவிட்டால் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்கள் வசதிக்காக 11 இடங்களில் தற்காலிக காய்கறி சந்தை அமைக்கப்பட்டுள்ளது. இதில் எந்த வார்டுக்கு எந்த சந்தை என பொதுமக்களுக்கு வழங்கப்படும் அட்டையின் பின்பக்கம் சீல் வைத்து தரப்படுகிறது.

அந்த மார்க்கெட்டில் மட்டுமே அவர்கள் காய்கறிகள் வாங்கி செல்ல முடியும். இதன் மூலம் சந்தைகளில் கூட்டம் கூடுவது குறையும். பொதுமக்களுக்கு அனுமதி அட்டை வழங்கும் பணியை மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

விருதுநகர் மாவட்டத்தில் 200 பேர் மட்டுமே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் - கலெக்டர் தகவல்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றிய பகுதியில் உள்ள 121 தூய்மை பணியாளர்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கலெக்டர் கண்ணன் வழங்கினார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

விருதுநகர் மாவட்டத்தில் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில் 8 பேர் குணமடைந்து வீடு திரும்பி விட்டனர். மேலும் 9 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களும் விரைவில் வீடு திரும்புவார்கள்.

ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் அந்த பகுதியை சுற்றி 5 கிலோ மீட்டர் தூரத்தில் இருப்பவர்களை 28 நாட்கள் தனிமைப்படுத்தி அவர்களை பாதுகாத்து வருகிறோம். விருதுநகர் மாவட்டத்தில் தொடக்கத்தில் 3,289 பேர் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர். அதில் 3,089 பேர் 28 நாட்களை முடித்து விட்டனர். தற்போது 200 பேர் மட்டுமே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களும் 28 நாட்களை முடித்து விட்டால் நோய் தொற்று பரவவில்லை என்று உறுதி செய்யலாம். இதன் மூலம் விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பெரிதளவில் இல்லை என்று ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

நகர்ப்பகுதியில் தூய்மை பணிகள் குறைவாக உள்ளதாக தெரிய வந்தால் அது குறித்து உடனடியாக தகவல் தெரிவித்தால் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதியில் தூய்மை பணிகளை முழுமையடைய செய்ய வைக்க முடியும். ஸ்ரீவில்லிபுத்தூரில் கொரோனா தொற்று இல்லை என்ற நல்ல செய்தி வந்துள்ளது. இப்பகுதியில் எந்த ஒரு அச்சுறுத்தலும் இல்லை. இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

நெல்லை மாவட்டத்தில் வீடு, உணவு இல்லாமல் தவிப்பவர்களுக்கு உதவிட தொலைபேசி எண் அறிமுகம் - கலெக்டர் ஷில்பா தகவல்
நெல்லை மாவட்டத்தில் வீடு, உணவு இல்லாமல் தவிப்பவர்களுக்கு உதவிட இலவச தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதில் தகவல் தெரிவிக்கலாம் என்று கலெக்டர் ஷில்பா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நெல்லை மாவட்டத்தில் வீடு இல்லாதவர்கள், வெளி மாவட்ட, மாநிலங்களில் இருந்து, வந்திருந்து உணவு, தங்க இடமில்லாமல், இருப்பவர்களை, மாவட்ட நிர்வாகம், தொண்டு நிறுவனங்கள் கண்டறிந்து, அவர்களை நெல்லை டவுன் கல்லணை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தங்க வைத்து அவர்களுக்கு 3 நேரமும் உணவு வழங்கி வருகிறது. இந்த நிலையில் அந்த முகாமில் இருக்கிறவர்களை நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா நேரில் சந்தித்து புத்தாடைகளை வழங்கி ஆறுதல் கூறினார்.

நெல்லை டவுன் கல்லணை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கொரோனா கட்டுப்படுத்துதலை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் வீடு இல்லாமல், வீதியில் தங்குபவர்கள், வெளி மாவட்ட, மாநிலங்களில் இருந்து, ஊரடங்கின் காரணமாக, தங்க வழி இல்லாதவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டோர் உள்ளிட்டோர்க கண்டறியப்பட்டு அவர்களை இங்கு அழைத்து வந்து தங்க வைத்து உணவு, புத்தாடைகள் வழங்கப்பட்டு வருகிறது. அவர்களை பரிசோதனை செய்து மீண்டும் அவர்களுடைய வீடுகளுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மனநலம் பாதிக்கப்பட்டவர்களை தன்னார்வலர்களை கொண்டு முடிவெட்டி, குளிக்க வைத்து புத்தாடைகள் வழங்கி பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இப்படி வருகிறவர்களை தங்கவைக்க மேலும் சில இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

நெல்லை மாவட்டத்தில் கொரோனா வைரசை கட்டுபடுத்திட பல்வேறு நடவடிக்கைள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் 9 இடங்கள் கண்காணிப்பு வளையங்களுக்குள் வைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. அத்தியாவாசிய தேவைக்காக வீட்டைவிட்டு வெளியே பொது இடங்களுக்கு வருபவர்கள் கட்டாயம் முக கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

பொதுமக்களுக்கு தேவையான மளிகை பொருட்கள் தடையின்றி கிடைத்திட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. வீடு இல்லாமல், உணவுக்கு தவிப்பவர்களுக்கு 3 வேளை உணவு வழங்கிட கல்லணை அரசு மேல்நிலைப்பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே நெல்லை மாவட்டத்தில் வீடுகள் இல்லாமல், உணவு இல்லாமல் தவிப்பவர்களை பார்த்தால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்க 1077 என்ற இலவச தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதில் தகவல் தெரிவிக்கலாம். இல்லை எனில் சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், நெல்லை தாசில்தார் பகவதி பெருமாள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad