Type Here to Get Search Results !

துரித உபகரணங்கள் மூலம் திருச்சி அரசு மருத்துவமனையில் முதல்கட்டமாக 15 பேருக்கு கொரோனா பரிசோதனை

துரித உபகரணங்கள் மூலம் திருச்சி அரசு மருத்துவமனையில் முதல்கட்டமாக 15 பேருக்கு கொரோனா பரிசோதனை
கொரோனா வைரஸ் தொற்றை 30 நிமிடங்களில் கண்டறியும் துரித பரிசோதனை உபகரணங்கள் நேற்று திருச்சி அரசு மருத்துவமனைக்கு வந்தன.

கொரோனா வைரஸ் தொற்றை 30 நிமிடங்களில் கண்டறியும் துரித பரிசோதனை உபகரணங்கள் நேற்று திருச்சி அரசு மருத்துவமனைக்கு வந்தன. முதல்கட்டமாக 15 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

திருச்சி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்கள் அரசு மருத்துவமனையில் உள்ள தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 32 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். மீதம், 17 பேர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சையில் இருந்து வருகிறார்கள்.

இந்தநிலையில் கொரோனா அறிகுறியுடன் அரசு மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு இதுவரை ரத்த மாதிரி, சளி ஆகியவை பரிசோதனைக்கு எடுக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் தெரிய 4 முதல் 5 நாட்கள் ஆனது. இதனால் முடிவுகள் வரும்வரை அவர்கள் அரசு மருத்துவமனையிலேயே கண்காணிப்பில் வைக்கப்பட்டு இருந்தனர். இந்தநிலையில் கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா? என்பதை 30 நிமிடங்களில் கண்டறியும் துரித பரிசோதனை உபகரணங்கள் (ரேபிட் டெஸ்ட் கிட்) முதல்கட்டமாக 1000 நேற்று திருச்சி அரசு மருத்துவமனைக்கு வந்தன.

இந்த உபகரணங்களின் மூலம் முதல் கட்டமாக நேற்று அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் பணிபுரியும் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் காவல்துறையை சேர்ந்த 15 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் யாருக்கும் கொரோனா வைரஸ் நோய் தொற்று இல்லை என்பது தெரியவந்தது. அப்போது மாவட்ட கலெக்டர் சிவராசு, அரசு மருத்துவமனை டீன் வனிதா, கண்காணிப்பாளர் ஏகநாதன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

தஞ்சை மாவட்டத்தில் மேலும் ஒரு பெண்ணுக்கு கொரோனாபாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 36 ஆக உயர்வு
தஞ்சை மாவட்டத்தில் மேலும் ஒரு பெண்ணுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் ஏற்கனவே 35 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு அவர்கள் அனைவரும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில், மாவட்டத்திலேயே முதன் முதலில் பாதிக்கப்பட்ட கும்பகோணத்தை சேர்ந்த சமையல் தொழிலாளி குணம் அடைந்ததால் அவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

நேற்று முன்தினம் மட்டும் ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த உறவினர்களையும், சந்தித்தவர்களையும் மாவட்ட நிர்வாகம் கடந்த மாத இறுதிக்குள் கண்டறிந்து பரிசோதனை செய்து வருகிறது.

இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் பட்டீஸ்வரத்தை சேர்ந்த 39 வயதான பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இப்பெண்ணின் தந்தை தஞ்சை சுந்தரம் நகரை சேர்ந்தவர் ஆவார். இவர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர். இவருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்பது தெரிய வந்தது.

மாநாட்டிலிருந்து திரும்பிய பிறகு இவரை சந்தித்த உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோர் பரிசோதிக்கப்பட்டனர். இதில், கடந்த மாதம் கர்ப்பிணியாக இருந்த இவருடைய மருமகள் மற்றும் இவரை பார்க்க வந்த மகளுக்கு கொரோனா தொற்று இருப்பது ஏற்கனவே கண்டறியப்பட்டது. மருமகளுக்கு கடந்த 7-ந்தேதி ஆண் குழந்தை பிறந்தது. இக்குழந்தைக்கு கொரோனா தொற்று இல்லை என்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்றாவது நபருக்கு (டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்தவரின் மற்றொரு மகள்) கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. இவர் கடந்த மாதம் கர்ப்பிணியாக இருந்த தனது நார்த்தனாரை பார்க்க வந்ததாகவும், அதன் மூலம் இவருக்கு கொரோனா தொற்று பரவியிருக்கும் எனவும் கூறப்படுகிறது. இதன் மூலம் தஞ்சை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது.

நெல்லை, தென்காசியில் பெண்கள் உள்பட மேலும் 6 பேருக்கு கொரோனா - புளியங்குடி நகருக்கு ‘சீல்’ வைப்பு
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பெண் கள் உள்பட மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் அதிக பேர் பாதிக்கப்பட்ட புளியங்குடி நகரம் ‘சீல்‘ வைக்கப்பட்டது.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் இந்தியா உள்பட உலக நாடுகளில் பரவி ஆயிரக்கணக்கானோரை தாக்கி வருகிறது. நெல்லை மாவட்டத்தில் ஏற்கனவே 58 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இவர்கள் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 22 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மற்றவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நெல்லை மேலப்பாளையத்தில் நேற்று மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலப்பாளையத்தில் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவரின் மனைவி மற்றும் அவருடைய தாயார் ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில் 2 பெண்கள் உள்பட மேலும் 4 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே 14 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தற்போது மேலும் 4 பேருக்கு கொரோனா பரவி உள்ளதால் தென்காசி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்தது.

இவர்களில் 15 பேர் புளியங்குடியை சேர்ந்தவர்கள் ஆவர். நேற்று தொற்று கண்டறியப்பட்ட 4 பேரும் புளியங்குடியை சேர்ந்தவர்கள்தான். இங்குள்ள வாபா தெருவில் இருந்து அகஸ்தியர் கோவில் தெருவுக்கு கொரோனா வைரஸ் பரவியது. தற்போது அதன் அருகில் உள்ள முத்து தெருவுக்கும் கொரோனா பரவி உள்ளது. இந்த தெருவில் ஏற்கனவே 3 பேருக்கு கொரோனா உள்ளது. தற்போது இவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் மற்றும் பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் என 4 பேருக்கு கொரோனா தொற்றி இருப்பது அந்த பகுதி மக்களை பீதியடைய செய்து உள்ளது.

கொரோனா உறுதி செய்யப்பட்ட 4 பேரும் நேற்று உடனடியாக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கு தனிமை வார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

புளியங்குடி கொரோனா பாதிப்புக்குள்ளான நகரமாக மாறி உள்ளது. இதன் காரணமாக புளியங்குடி நகரத்துக்கு ‘சீல்‘ வைக்கப்பட்டு உள்ளது. அனைத்து தெருக்களும் மூடப்பட்டு பொதுமக்கள் அவசிய தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. தனிமைப்படுத்தப்பட்டு உள்ளோர் குடியிருக்கும் 4 தெருக்கள் முற்றிலும் மூடப்பட்டு உள்ளது. அங்கிருந்து யாரும் வெளியே வரவும், உள்ளே செல்லவும் அனுமதி அளிக்கப்படவில்லை. அந்த தெருக்களில் இருபுறமும் போலீசார் நின்று 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.

குறிப்பிட்ட 4 தெருக்களில் உள்ள மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை நகராட்சி பணியாளர்கள் வாங்கி அவரவர் வீடுகளுக்கு சென்று வழங்குகிறார்கள். இதேபோல் மற்ற தெருக்களிலும் போலீசார் தடுப்பு வேலிகளை அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

புளியங்குடியில் துணை போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் தலைமையில் இன்ஸ்பெக்டர் அலெக்ஸ்ராஜ் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது புளியங்குடியில் கூடுதல் கவனம் செலுத்துவதற்காக தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆடிவேல், சிவகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் ஆகியோர் தலைமையில் கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு முகாமிட்டு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மேலும், கொரோனா பாதிப்பு உள்ள தெருக்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அங்குள்ள மக்கள் அனைவருக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

புளியங்குடி நகராட்சி ஆணையாளர் குமார் சிங், பொறியாளர் சுரேஷ், சுகாதார அலுவலர் ஜெயபால் மூர்த்தி, ஆய்வாளர்கள் வெங்கட்ராமன், தூய்மை இந்தியா பணி மேற்பார்வையாளர் விஜயராணி தலைமையில் சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்ற 14 பேர் குணமடைந்தனர்பழங்கள் கொடுத்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்
கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்ற 14 பேர் குணமடைந்தனர். இவர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தினர் பழங்கள் கொடுத்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்ற 14 பேர் குணமடைந்தனர். இவர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தினர் பழங்கள் கொடுத்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கொரோனா வார்டில் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த 21 பேரும், நாகை மாவட்டத்தை சேர்ந்த 38 பேரும் என மொத்தம் 59 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவர்களில் 14 நாட்களுக்கும் மேலாக சிகிச்சையில் இருந்தவர்களின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்றில் இருந்து 15 பேர் விடுபட்டது தெரியவந்தது.

இதனையடுத்து அவர்கள் மத்திய பல்கலைக்கழக கொரோனா வார்டில் தனிமைப்படுத்தி தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்தனர். இதில் ஒருவர் மியான்மர் நாட்டை சேர்ந்தவர் என்பதால் தொடர்ந்து தனி அறையில் தங்க வைக்கப்பட்டுள்ளார். மேலும் குணமடைந்த திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த 7 பேர், நாகை மாவட்டத்தை சேர்ந்த 7 பேர் என மொத்தம் 14 பேர் நேற்று வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

முன்னதாக குணமடைந்தவர்களுக்கு, திருவாரூர் மாவட்ட நிர்வாகத்தினர் பழங்கள் அடங்கிய பைகளை கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

அப்போது உதவி கலெக்டர் கமல் கிஷோர், மாவட்ட வருவாய் அதிகாரி பொன்னம்மாள், அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் முத்துகுமரன், சுகாதாரத்துறை இணை இயக்குனர் ராஜமூர்த்தி, துணை இயக்குனர் விஜயகுமார், உதவி கலெக்டர்கள் ஜெயபிரீத்தா, புண்ணியக்கோட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நீடாமங்கலம் கோவில்வெண்ணி பகுதியை சேர்ந்த 15 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என்பதற்காக மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவர்களின் ரத்த மாதிரி திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மீன் வியாபாரியுடன் தொடர்பில் இருந்த 44 பேர் மருத்துவமனையில் அனுமதி
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மீன் வியாபாரியுடன் தொடர்பில் இருந்த 44 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் நகரத்தை சேர்ந்த மொத்த மீன் வியாபாரி ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா அறிகுறியுடன் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் நோய் தொற்று இல்லை என்று முடிவு வந்ததை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

ஆனால் வீட்டிற்கு சென்ற பிறகும் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் அவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் அதே மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட அந்த மீன் வியாபாரி இதுவரை எங்கெங்கு சென்று வந்துள்ளார்? என்றும் அவருடன் யார், யாரெல்லாம் தொடர்பில் இருந்துள்ளனர், மேலும் அவரிடம் இருந்து யார், யார் மீன்களை வாங்கிச்சென்றுள்ளனர் என்பது குறித்த விவரங்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் சேகரித்தனர்.

அந்த வகையில் அவருடன் தொடர்பில் இருந்த 44 பேரை முதல்கட்டமாக சுகாதாரத்துறையினர் கண்டறிந்துள்ளனர். அவர்கள் 44 பேரையும் விழுப்புரத்தில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களை மருத்துவ குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அதோடு அவர்களின் ரத்த மாதிரிகளை பரிசோதனைக்காக எடுத்து அனுப்பியுள்ளனர். இந்த முடிவுகள் வந்த பிறகே யார், யார்? கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரம் தெரியவரும் என சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

இதனிடையே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மொத்த மீன் வியாபாரியுடன் தொடர்பில் இருந்த செஞ்சி நரசிங்கராயன்பேட்டை மேட்டு தெருவை சேர்ந்த மீன் வியாபாரிகள் 3 பேரின் குடும்பத்தினரை அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தி செஞ்சி தாசில்தார் கோவிந்தராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்பிரமணியன், அறவாழி ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டியதோடு, மேட்டு தெருவுக்கு செல்லும் பிரதான சாலைக்கு தடுப்புவேலி அமைத்து போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தி உள்ளனர். மேலும் தனிமைப்படுத்தப்பட்டு வீடுகள் அமைந்துள்ள பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad